முடக்கத்தான் பொடி பயன்கள்
முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் வந்தது.
முடக்கத்தான் பொடி மூட்டுகளில் இருக்கும் யூரிக் ஆசிட் எங்கு இருப்பினும் அதனை கரைத்து சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று அதை சிறுநீராக வெளியேற்றுகிறது. இது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படுவது தடுக்கப்பட்டு மூட்டுகளுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது.
உடல் வலி நீங்க
முடக்கத்தான் பொடி 2 கிராம் அளவு எடுத்து நீரில் சேர்த்து தினமும் அருந்தி வர உடல் வலி, முடக்கு நோய்கள் நீங்கும்.
பொடுகு தொல்லை நீங்க
தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன் முடக்கத்தான் பொடி சேர்த்து காய்ச்சி உபயோகிக்கலாம். இது தலையில் உள்ள பொடுகை நீக்குகிறது.
முடக்கத்தான் பொடியை உடல் முழுவதும் தேய்த்து குளித்து வர சரும நோய்கள் நீங்கும். இதனை நெல்லிக்காய் அளவு தினமும் சாப்பிட்டு வர கரப்பான், சொறி சிரங்கு போன்ற சரும நோய்கள் குணமாகும்.
முடக்கத்தான் பொடி சாப்பிடும் முறை
முடக்கத்தான் பொடியை தோசை மாவில் கலந்து தோசை செய்து உண்ணலாம்.
முடக்கத்தான் ரசம்
தேவையான பொருள்கள்
முடக்கத்தான் – 50 கிராம்
தக்காளி – 1
வெங்காயம் – 1
மிளகாய் – 3
பூண்டு – 1
புளி – சிறிதளவு
மஞ்சள் தூள் – 50 மி.கி
மிளகு – 50 மி.கி
சீரகம் – 50 மி.கி
சோம்பு – 50 மி.கி
நல்லெண்ணெய் – 50 மி.கி
உப்பு, கறிவேப்பிலை தேவையான அளவு
செய்முறை
மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு இவற்றை ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் முடக்கத்தான் பொடி, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பின் புளி கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். முடக்கத்தான் ரசம் தயார்.
மூட்டுவலி உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை முடக்கத்தான் ரசம் சாப்பிட்டு வரலாம். இது மூட்டுவலி, பக்கவாதம், பித்தம், தலை சுற்றல், உடல் வலி, மூலம் மற்றும் நரம்பு சம்பந்த நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த உணவாகும்.
முடக்கத்தான் இட்லி பொடி
முடக்கத்தான் பொடியை இட்லி பொடியுடன் கலந்து முடக்கத்தான் இட்லி பொடி தயார் செய்யப்படுகிறது. முடக்கத்தான் இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.
இது உண்பதினால் காதுவலி, தலைவலி போன்ற பருவ மாற்ற பிரச்சனைகள், சரும வறட்சி, பருக்கள் போன்ற சரும நோய்கள் குணப்படும்.
குழந்தை பிறந்த தாய்மார்கள் இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வர கருப்பை சுத்தமாகும். வயதான மற்றும் இளம் வயதில் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் உபயோகிக்கலாம்.