மண் சிகிச்சை

Spread the love

மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை செய்து வந்துள்ளனர். மண் குளியல் சிகிச்சை முறை இயற்கை சிகிச்சை முறைகளில் ஒன்றாக கருதப்பட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

மண் குளியல் சிகிச்சைக்கு அனைத்து மண்களும் பொருந்தாது. மண் சிகிச்சையை மேற்கொள்ள பயன்படுத்தும் மண்ணானது சுத்தமானதாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். இவற்றைப் பற்றி பார்க்கலாம்.

மண்ணை தேர்வு செய்யும் முறை

மண்ணில் தாமிரம், இரும்பு, கந்தகம், மெக்னீசியம், குரோமியம் மற்றும் உயிர் சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது.

மண் குளியல் சிகிச்சைக்கு தேவைப்படும் மண்ணானது சுத்தமான இடத்தில்  பூமியில் 2-3 அடி ஆழத்தில் தோண்டி எடுக்க வேண்டும். இதற்கு சுத்தமான புற்று மண், செம்மண், களிமண் போன்ற மருத்துவ குணம் நிறைந்த மண் ஏற்றதாகும். இது உடலிற்கு குளிர்ச்சியை அளித்து தொற்றுகள் மற்றும் அழுக்கை நீக்குகிறது.

தேவையான மண்ணை எடுத்து கற்களை நீக்கி, நன்கு சலித்து பிரித்தெடுக்கவும். இதனை தண்ணீரில் குழைத்து 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின் இதனை உபயோகிக்கவும்.

மண் சிகிச்சை மேற்கொள்ளும் முறை

மண் சிகிச்சை முறை கோடை காலத்தில் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

மண் சிகிச்சை முறையானது நேரடி சிகிச்சை, மறைமுக சிகிச்சை என இரு வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

நேரடி சிகிச்சையானது உடல் முழுவதும் மண் பூசப்படுகிறது. மறைமுக சிகிச்சையில் துணியில் மண்ணை வைத்து பேக் செய்து வயிறு, கண் போன்ற இடங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மண் குளியல் சிகிச்சையில் உடலில் சூரிய ஒளி படுமாறு அமர்ந்து தலைமுடி தவிர, உடல் முழுவதும் மண் பூசப்படுகின்றது. பின் ஒரு மணி நேரம் சென்றதும் குளிர்ந்த நீரில் நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகும்.

இது நோய் பாதிப்புகளை பொறுத்து சில மூலிகைகள் சேர்க்கப்பட்டு மண் குளியல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மண் சிகிச்சையில் கவனிக்க வேண்டியவை

மண் குளியல் சிகிச்சை தானாகவே எடுத்தல் கூடாது. இதனை மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ளலாம்.

சிகிச்சை எடுக்கும் போது வெறும் வயிற்றில் எடுத்தல் கூடாது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் சென்ற பின் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

சிகிச்சைக்கு முன் நோயாளிகள் இரண்டு தம்ளர் நீர் குடிக்கவும். இதனை  இளம் வெயிலில் அமர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மண் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிக்கு சளிப் பிடித்திருப்பின் கவனமாக கடைபிடித்தல் வேண்டும்.

இதில் குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுவதும் தெளிக்க  வேண்டும். நோயாளி மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம்.

மண் குளியல்  நன்மைகள்

உடல் சூடு, சருமம் சார்ந்த நோய்கள், தலைவலி மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு மண் சிகிச்சை முறை சிறந்த தீர்வாகும்.

மண் குளியல் சிகிச்சை  உடலில் உள்ள விஷத்தன்மையை நீர்க்கச் செய்கிறது.

ஜீரணக் கோளாறுகள் மன அழுத்தம், மந்த நிலை போன்றவற்றை நீக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் நீங்கும். சிறுநீரக பாதிப்பு குறையும். 

சருமத்தில் எண்ணெய் தன்மை உள்ளவர் மன் சிகிச்சை எடுக்கலாம். இதனால் முகம் பொலிவு பெறும்.

மிகவும் மலிவான, எளிமையான இச் சிகிச்சை சூரிய ஒளியிலுள்ள சக்தியை நம் உடல் எளிதில் பெற உதவுகிறது.

குறிப்பு

ஒரு முறை பயன்படுத்திய மண்ணை மீண்டும் பயன்படுத்தும் போது 8 மணி நேரம் வெயிலில் நன்கு காய வைத்து, பின் உபயோகிக்கலாம்.

தோல் நோய்க்கு சிகிச்சை அளித்த மண்ணை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மண் குளியல் சிகிச்சை இலவசமாக  அளிக்கப்படுகிறது.

ஆயுர்வேதம்.காம்

To Buy Our Herb Products >>>


Spread the love