ஜீரண மண்டலத்தின் கதவு, வாய். வாயில் சாதாரணமாக வரும் பிரச்சனை, வாய்ப்புண்கள். வாயில் உண்டாகும் புண் (Ulcer) வாயின் சுவற்றை பதம் பார்த்து, அதில் ஓட்டை போடும். இந்த மாதிரி புண்களோ, ரணமோ பத்து நாட்களுக்கு மேல் நீடித்தால் டாக்டரிடம் செல்ல வேண்டும்.
அல்சர் புண்கள் சிறிய வட்ட வெண்ணிற புள்ளியாக, அதைச் சுற்றி சிவப்பு வளையத்துடன் காணப்படும். வயிற்றுப் புண்கள் நாக்கு உதட்டின் உட்புறம், கன்னங்களின் உட்புறம், மேலண்ணம், கீழ்ண்ணம் இவற்றில் காணப்படும். சிறிய புண்கள் தாமாகவே மறைந்துவிடும் தழும்புகள் ஏற்படாது. பெரிய வாய்ப்புண்கள் குணமாக நாளாகும். தழும்புகள் உண்டாகும். “எய்ட்ஸ்” நோயாளிகளுக்கு வாய்ப்புண் சீக்கிரத்தில் ஆறாது.
வாய்ப்புண் வரும் காரணம் ஸ்ட்ரெஸ், மனஅழுத்தம் காரணமாகும். பற்கள் கூர்மையாக இருந்து, அது நாக்கிலோ, வாயிலோ குத்தி புண் வரலாம். நாக்கை “கடிப்பதாலும்” புண்கள் வரும்.
புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய்ப்புண் அடிக்கடி ஏற்படும். இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையே உள்ள ஒரு வழி வால்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரியாக மூடிக்கொள்ளாமல் தளர்ந்து போய்விடும். இதனால் இரைப்பையில் இருக்கும் அமிலம், மேலேறி, தொண்டை வாய் வரைக்கும் வரலாம். இதனால் உண்டாகும் வாய்ப்புண்களுக்கு அமிலத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
வாய்ப்புண்கள் அடிக்கடி ஏற்படும். இதை லேசாக விட்டுவிடக்கூடாது. நாட்பட்ட வாய்ப்புண்கள் புற்று நோயாக மாறும் சாத்திய கூறுகள் அதிகம். ஆறாத வாய்ப்புண் அபாயகரமானது. முழுங்குவதில் சிரமம் ஏற்படும். வாயில் துர்நாற்றம் ஏற்படும்.
வாய்ப்புண்களை ஆங்கில மருந்துவத்தில் Stomatitis என்பார்கள். நாக்கில் ஏற்படும் புண்களையும் Stomatitis எனப்படும். வாய்ப்புண்கள் பேக்டீரியா (ஸிபிலிஸ் போன்ற பாலுறவு நோய்கள்), பூஞ்சனம் (Fungi), வைரஸ் (Herpes Simplex) இவற்றாலும் உண்டாகலாம். ‘ B ‘ பிரிவு வைட்டமின் குறைபாடுகளால் வாய்ப்புண்கள் உண்டாகும். இரப்பை, குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளினாலும் வரும்.
வாய் புண்களுக்கு சிறந்த மருந்து மணத்தக்காளி கீரை, பல இலைகளை வாயில் போட்டு ‘கொதப்ப‘ வேண்டும் பிறகு கொப்பளிக்க வேண்டும். இதை 2-3 தடவை செய்தாலே போதும்.
கத்தகாம்பு (Uncaria gambier) நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாயில் போட்டு மென்று உமிழ்ந்தால், வாய்ப்புண் குணமாகும்.
த்ரிபாலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) வினால் வாய் கொப்பளிப்பது சிறந்தது. தேங்காய் பாலால் வாய் கொப்பளிப்பது. எள்ளை பொடியாக்கி, தேனும், நெய்யும் சேர்த்து வாயில் போட்டு சிறிது நேரம் வைத்திருப்பது. அதிமதுரம் அல்லது மஞ்சளை பாலில் போட்டு காய்ச்சி குடிக்கலாம்.
உலக சுகாதார கழகம் விடுவித்த எச்சரிக்கையில் ஆறாத வாய்ப்புண்களைப் பற்றி முக்கியமாக குறிப்பிட்டிருக்கிறது. நாக்கில் உண்டாகும் புண்கள் ஆன்டி-பயாடிக் மருந்துகளால் ஏற்படும். தவிர வைட்டமின் ‘H‘ காம்ப்ளக்ஸ் குறைபாடு, பேக்டீரியா இவற்றாலும் வரும்.
நாக்கு புண்களுக்கு மஞ்சள் பொடி நல்லது. காய்ச்சிய பாலில் மஞ்சள் பொடி சேர்த்து குடிப்பது நல்லது. இதற்கும் திரிபால சூரணத்தால் வாய் கொப்பளிப்பது பயன்தரும்.
ஆயுர்வேதத்தில் வாய், நாக்கு புண்களுக்கு கதிராடி வடீ, போன்ற நல்ல மருந்துகள் கிடைக்கும்.