வாய் துர்நாற்றமும் வாய்புண்ணும்

Spread the love

வாய் துர்நாற்றம் என்பது பள்ளிக்கூடம் செல்லும் குழந்தை முதல் ஆபிஸ் செல்லும் ஆண், பெண்கள் மற்றும் முதியவர்கள் வரை உள்ள ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. வாய் துர்நாற்றம் காரணமாக யாரிடமும் அருகில் சென்று பேச இயலாமல், மற்றவர்களுடன் சந்தோஷமாக பேசுவதையும் தடை செய்து விடுகிறது. இதன் மூலம் நமக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது?

வாயில் ஏற்படும் துர்நாற்றமானது, பல், ஈறு, வாய் மற்றும் வாய் சார்ந்த பகுதிகளில் ஏற்படும் நோய்களினால் தோன்றுகிறது. அல்லது உடலில் பல்வேறு உறுப்புகளின் மண்டலங்களில் ஏற்படும் நோய்களின் காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக காலையில் எழுந்து கொள்ளும் போது வாய்த்துர்நாற்றத்துடன் காணப்படும். இதற்கு காரணம், இரவில் வாயில் உமிழ் நீர் குறைவதாலும், உரிந்து விட்ட படர் திசு வாயிலிருந்து நீக்கப்படாமல் இருப்பது தான். வாய் மூலம் சுவாசிப்பதால், இரவில் பல் இடுக்கினுள் தங்கி விட்ட உணவுப் பொருட்கள் அழுகி குறட்டை விடும் பொழுது, உறங்கும் பொழுது வாய் திறக்கும் பொழுது துர்நாற்றம் வீசத் தொடங்கும்.

காலை பல்துலக்கிய பின்பு மேற்கூறிய வாய்துர்நாற்றம் நீங்கி விடும் என்பதால் கவலையடைய வேண்டியதில்லை.

உணவுக் குறைபாடுகளினால் ஊட்டச்சத்துக்குறைவின் காரணமாக வாயில் புண்கள் ஏற்படும். நுண்ணுயிரி, காளான் இவற்றில் புண் ஏற்படும். நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாயில் அழற்சியுடன் சீழ் ஏற்பட, பொறுக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும்.

பொதுவாக மனிதர்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க பற்களில் புறத்திசுக்கள் அழற்சியுற்று பயோரியா போன்ற நோயால் தாக்கப்படலாம். அவ்வாறு தாக்கப்படும் பொழுது ஈற்று பரப்பு அழுத்தப்பட்டு, சீழ் வடிவதுடன் துர்நாற்றம் ஏற்படும்.

பற் சொத்தை காரணமாக வாய் துர்நாற்றம் ஏற்படும். செயற்கை பல் செட்டை தினசரி அகற்றி, தூய்மை செய்து அணிய வேண்டும்.

வாய் நாற்றத்தை எவ்வாறு தடுப்பது? என்ன மருந்துகள் உள்ளன.

1. இரவு படுக்கும் முன்பும், காலையில் எழுந்த உடனும் நன்றாக பல்துலக்கி கொப்பளிப்பது அவசியம்.

2. உணவு உட்கொண்டு முடிந்த பின்பு, நன்கு வாய் கொப்பளிப்பது, பல் இடுக்கில் உணவுப் பொருட்கள் சிக்கி அழுக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. துர்நாற்றம் ஏற்படக் காரணமான நோயைக் கண்டறிந்து அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளை செய்ய வேண்டும்

4. உடலில் பல்வேறு உறுப்புகளின் இயக்க மண்டலங்களில் ஏற்படும் வியாதிகளால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை கண்டறிந்து அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளை செய்து கொள்ள வேண்டும்.

5. வருடம் ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பற்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

6. உடலில் நீர்ச்சத்து குறைவு காரணமாக, தூங்கும் பொழுது குறைந்த அளவு உமிழ் நீர் சுரந்து, வாய் வறட்சி அடைவதால் மற்றும் வாயினால் சுவாசிப்பதால் வாய் வறட்சி அடைவதால் வாய்துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தினசரி போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்.

வாய்ப்புண் என்றால் என்ன ?

வாய்ப் புண்களை ஆங்கில மருத்துவத்தில் ஸ்டோமேடிடிஸ் என்பார்கள். நாக்கில் ஏற்படும் புண்களும் ஸ்டோமேடிடிஸ் எனப்படும். செரிமான இயக்கத்தின் கதவு வாய் ஆகும். வாயில் ஏற்படும் சாதாரண புண், புற்று வாயின் சுவற்றை தாக்கி ஓட்டை போடுகிறது. வாய்ப்புண்கள் சிறிய வட்டமாக, வெண் புள்ளியாக, அதை சுற்றி சிவப்பு வளையத்துடன் காணப்படும். வாய்ப்புண்கள் நாக்கு, உதட்டின் உட்புறம், கன்னங்களின் உட்புறம், மேலண்ணம், கீழண்ணம் இவற்றில் காணப்படும். சிறிய புண்கள் தாமாகவே மறைந்துவிடும். தழும்புகள் தோன்றாது. பெரிய வாய்ப்புண்கள் குணம் பெற நாளாகும்.

வாய்ப்புண்கள் தோன்ற காரணம் என்ன?

1. மன அழுத்தம்

2. புகைபிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய்ப்புண் அடிக்கடி ஏற்படும். இரப்பைக்கும், உணவு குழாய்க்கும் இடையே உள்ள ஒரு வழி வாழ்வு, பாதிக்கப்பட்டு இருப்பின், சரியாக மூடிக்கொள்ளாமல், தளர்ந்து போய்விடும். இதனால் இரப்பையில் இருக்கும் அமிலம், மேலேறி, தொண்டை, வாய் வரைக்கும் வரலாம். இதனால் உண்டாகும் வாய்ப்புண்களை அமிலத்தை கட்டுபடுத்து சிகிச்சை, மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

ஆயுர்வேதத்தில் மருத்துவ சிகிச்சைகள்

மணத்தக்காளி கீரை இலைகளை இரண்டு, மூன்று முறை வாயில் போட்டு மென்று பிறகு கொப்பளித்துவர வாய்ப்புண் குணமாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்களினால் தயாரிக்கப்பட்ட திரிபலா சூரணத்தை நீர் விட்டு வாயிலிட்டு வாய் கொப்பளித்து வர வேண்டும். தேங்காய் பாலால் வாய் கொப்பளிப்பது, எள்ளை பொடியாக்கி தேனும், நெய்யும் சேகரித்து வாயிலிட்டு சிறிது நேரம் வைத்திருக்கலாம். வாயில் ஊறும் எச்சில் என்ற உமிழ்நீர் நமது நாக்கில் ஈறில், தொண்டையில், அண்ணத்தில் புண்கள் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்கிறது. நம் உணவில் சேரும் காரம், புளிப்பு மற்றும் குளிர்ச்சி, சூடு போன்றவை வாய்தொண்டைப் பகுதியில் தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. இதனைத் தவிர்க்க, அடிக்கடி வாயைக் கொப்பளிக்க வேண்டும். அதிமதுரத்துப் பால் அல்லது மஞ்சளை பாலில் போட்டுக் காய்ச்சி குடிக்கலாம். வெண்ணெய், நெய் சிறிது எடுத்து நாக்கில் தடவி வரவும். நல்ல எள்ளை கடித்து சாப்பிடவும்.

அதிமதுரம், நெல்லிமுள்ளி, வெள்ளைக் குங்கிழியம் மூன்றையும் தனித்தனியாக சேர்த்து பொடி செய்து கலந்து, நெய் அல்லது தேனில் குலைத்துச் சாப்பிடுவது நல்லது. கீரை வகையில், வாய்ப்புண்னை மிகச்சிறப்பாக செயல்படுகிறது. இக்கீரையை பச்சையாக மென்று வாயில் நன்கு குதப்ப, குணம் தெரியும்.

இக்கீரையை தேங்காய் மற்றும் உப்புடன் சேர்த்து சுண்ட வைத்து சாப்பிடுவது மிகவும் உயர்வானது.   

குழந்தைகளுக்கு உதவும் மருத்துவம்    

1. வேப்பங்கொழுந்து, ஓமம், சுக்கு, மிளகு, பூண்டு, நொச்சி கொழுந்து, கறிவேப்பிலை, சிற்றரத்தை ஆகியவற்றை சமஅளவில் எடுத்து கொண்டு தனித்தனியே நெய் விட்டு வதக்கி சிறிது உப்பு சேர்த்து, மெழுகு பதமாக அரைத்து வைத்துக்கொண்டு வயது, நோய்க்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மிளகு அளவு நீரில் கரைத்து கொடுக்க குழந்தைகளுக்கு காணப்படும் செரியாமை, மலங்கழியாமை, மலப்புழுக்கள், மார்புச்சளி ஆகியவை நீங்கி பசி உண்டாக்கும்.

2. வில்வப் பிஞ்சை கொட்டைப்பாக்கு அளவு அரைத்து எருமை தயிரில் கொடுக்க குழந்தைகளுக்கு காணப்படும் சீதபேதி, வயிற்றுப்போக்கு குணமாகும்.

3. சரக்கு ஒன்றை பூவிதழ்களைச் சம எடை கல்கண்டுடன் இடித்து வெயிலில் வைத்து பதப்படுத்த குல்கந்து ஆகும். இதில் இரண்டு கிராம் கடலை மாவை பாலுடன் சாப்பிட்டுவர உள்ளுறுப்புகள் பலப்படும். உடல் மெலிந்த சிறுவர்களுக்கு உடல் தேர பயனுள்ளதாகும்.

4. மாந்தளிரும் மாதுளை இலையும் சம அளவு எடுத்து அரைத்து பெரியவர்களுக்கு நெல்லிக்காய் அளவும், சிறியவர்களுக்கு சுண்டக்காய் அளவும் காலை, மாலை, மோரில் கொடுத்து வர சீதபேதி, இரத்த பேதி, வயிற்று கடுப்பு குணமாகும்.

5. குழந்தைகளுக்கு வரும் எந்த வியாதியையும் துளசி குணப்படுத்துகிறது. குழந்தை, வாந்தி எடுத்தால் துளசி சாற்றுடன், சுத்தமான தேனை கலந்து சங்கில் சிறிது ஊற்றி அரைமணிக்கு ஒருமுறை கொடுத்து வர வாந்தி நிற்கும்.

6. பலமான சளி, மார்புச்சளியினால் பாதிக்கப்பட்டு, சிரமப்படும் குழந்தைகளுக்கு துளசி இலை சாறு, குப்பைமேனி இலை சாறு இரண்டும் சேர்த்து எட்டு துளி உள்ளுக்குள் கொடுத்தால், ஓரிரு நிமிடங்களில் சளி எல்லாம் வெளியே வந்து விடும். அதன்பின்னர் நன்கு தூக்கமும் வரும்.

7. குழந்தை சரியாக தாய்ப்பாலை குடிக்க மாட்டேன் என்கிறதே, என்ற கவலையா? துளசி இருக்க கவலை ஏன்? துளசி, அதிமதுரம் இரண்டையும் வெந்நீர் விட்டு சந்தனம் போல நன்றாக அரைத்து மார்பக காம்பில் தடவி குழந்தையை பால்குடிக்க செய்ய வேண்டும்.                            

பா. மு


Spread the love