முருங்கை இலை பொடி பயன்கள்
முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் முருங்கை பொடியில் 32% இரும்புச்சத்து உள்ளது. இதனால் நம் உடலிற்கு தேவையான இரும்புச்சத்து உறுதி செய்யப்படுகிறது.
முருங்கை இலை பொடியானது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. முருங்கை இலை பொடியில் உள்ள ஆண்டி-ஆக்சிடண்ட் செல்களில் ஏற்படும் சேதம், வீக்கங்கள், இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றது. இது நம் உடலில் உயிரணுக்கள் சேதமாவதை தடுக்க பெரிதும் உதவுகிறது.
முருங்கை இலை கல்லீரலில் ஏற்படும் விஷத் தன்மை மற்றும் சேதத்தை தடுக்கிறது. குறிப்பாக நீரழிவு, புற்றுநோய், இதய நோய், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது. இது சர்க்கரை நோய் அறிகுறிகள், உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளுக்கோஸை குறைக்கிறது.
ஆய்வு ஒன்றில் தினமும் ஒரு டீஸ்பூன் முருங்கை இலை பொடியை மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முருங்கை இலை பொடி சாப்பிடும் முறை
முருங்கை இலை பொடியை தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அல்லது ஒரு தம்ளர் பாலில் கலந்து தினமும் அருந்தலாம்.
இது உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கை இலை பொடியை ஆண், பெண் இருபாலரும் உட்கொள்ளலாம்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வயிறு வலி மற்றும் இரத்த இழப்பை ஈடு செய்து, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மேலும் வயதான காலத்தில் ஏற்படும் முகச்சுருக்கம், கோடுகள் போன்றவற்றை குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை நீக்குகிறது.
வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு சமயத்தில் முருங்கை இலை பொடியை ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு நீர் அருந்தவும். இதனால் உடனடி நிவாரணம் பெறலாம்.
நீரழிவு நோயளிகளுக்கு டீ அல்லது காபியுடன் முருங்கை இலை பொடியை கலந்து உட்கொள்ளலாம். இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
முருங்கை இலை பொடியை ரசம், சாம்பாரில் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.
முருங்கை இலை பொடி தேநீர்
முருங்கை இலை பொடி ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, இஞ்சி உள்ளங்கை அளவு வெயிலில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பொடியாக்கி கண்ணாடி பாட்டிலில் சேகரிக்கவும்.
இப்பொடியை அரை டீஸ்பூன் எடுத்து ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இரண்டு நிமிடங்கள் சென்ற பின் வடிகட்டி சுவைக்கு பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து குடிக்கவும். இதனை தினமும் காலை மட்டும் குடித்தால் போதுமானது.
முருங்கை இலை பொடியை குழந்தைகளுக்கு தேநீராக கொடுக்காமல், சூடான சாதத்தில் ஒரு டீஸ்பூன் சேர்த்து அதனுடன் சிறிது நெய், சிட்டிகை மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொடுக்கலாம்.
முருங்கை இலை இட்லி பொடி
தேவையான பொருட்கள்
முருங்கை இலை பொடி- 2 டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் கடலை பருப்பு, சீரகம், மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும். இதனுடன் முருங்கை இலை பொடி, உப்பு சேர்த்து இட்லி பொடி பக்குவத்தில் அரைக்கவும். பின் சிறிது நேரம் ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைக்கலாம். ஆரோக்கியமான முருங்கை இலை இட்லி பொடி தயார்.
குறிப்பு
முருங்கை இலை பொடியை ஒரு நாளைக்கு அரை முதல் ஒரு தேக்கரண்டி வரை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். மிகவும் எளிமையாக, மலிவாக கிடைக்கும் முருங்கை இலை பொடியை தவறாமல் வாங்கி உபயோகித்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.