ஒப்பனைக் கலையில் புதுசு

Spread the love

ஒப்பனைக் கலையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்கள்:

ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் புதுப் புது மேக்அப் சாதனங்கள் மற்றும் மாற்றங்களும் எண்ணிப் பார்க்க இயலாத அளவு ஏற்பட்டுள்ளன. இவைகளைப் பயன்படுத்தி ஒப்பனை செய்வதற்கு முன் ஒவ்வொருவரும் ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

1. உங்கள் சருமம் எந்த வகையைச் சார்ந்தது?

2. எப்படிப்பட்ட மேக்அப் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்?

3. வெப்ப நாட்டில் வாழும் நமக்கு ஏற்ற மேக்அப்பை எப்படி தேர்ந்தெடுப்பது?

4. வெளியிலோ, பள்ளிக்கோ, ஆபீஸ் அல்லது விழாக்களுக்கு போவதைப் பொறுத்து மேக்அப் சிம்பிளாக அதாவது எளிமையாக அல்லது ஆளை அசத்தும் வண்ணம் அமைய வேண்டுமா? என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

                        முழுமையாக மேக்அப்பை 8 பிரிவுகளாக அல்லது நிலைகளாக (Steps) பிரிக்கலாம்.

ஸ்டெப் – 1 : க்ளென்சிங் (Cleansing)

ஸ்டெப் – 2 : டோனிங் (Toning)

ஸ்டெப் – 3 : மாய்ஸ்சரைசிங் (Mositursing)

ஸ்டெப் – 4 : ஃபவுண்டேஷன் (Foundation)

ஸ்டெப் – 5 : ப்ளஷர் ஷேடர் (Blusher – Shaders)

ஸ்டெப் – 6 : கண் மேக் அப் (Eye make-up)

                                                ஐ ஷேடோ  (Eye Shadow)

                                                ஐ லைனர் (Eye Liner)

                                                மஸ்காரா (Maskara)

                                                ஐ புரோ பென்சில் (Eye Brow Pencil)

ஸ்டெப் – 7 : உதடுகள் மேக்அப் (Lip Make-up)

                                                லிப் பிக்ஸ் (Lip Fix)

                                                லிப் லைனர் (Lip Liner)

                                                லிப் கலர் (Lip Colour)

                                                லிப் க்ளாஸ் (Lip Gloss)

ஸ்டெப் – 8 : பவுடர் டச் அப் (Powder Touch – up)

மணப் பெண் மேக்அப் (Bridal Make- up):

முன்பெல்லாம் மணப்பெண்ணை திருமண நாளன்று எளிமையாகவும், ஆனால் ஓரளவு ஆடம்பரமாக அலங்காரம் செய்து மண மேடைக்கு அனுப்புவார்கள். இப்பொழுது நடைபெறும் திருமணங்களில் மணப்பெண் மேக்அப் செய்யாமல் மணமேடைக்கு மணப்பெண்ணே செல்ல விரும்புவதில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் திருமண விழாக்களில் தொழில் முறை மேக்அப் நிபுணர்கள் அழைக்கப்படாத நிலையில் அல்லது வர இயலாத நிலையில் மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்வதை நீங்களே ஏற்றுக் கொண்டு செய்யலாம். அதற்கு உதவக் கூடிய சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. மணப்பெண்ணின் சரும அமைப்பானது வறண்ட சருமமா (Dry Skin) அல்லது எண்ணெய்ப் பசையுள்ள சருமமா (Oily Skin) என்பதை தெரிந்து கொண்ட பின், அதற்கேற்ற சாதனங்களை சேகரித்துக் கொள்ளவும்.

வறண்ட சருமம்:

மாய்சரைசருடன் சேர்ந்து பவுண்டேசன் உபயோகிக்க வேண்டும். ப்ளஷர், லைட் பிங்க், லைட் ப்ரவுன் அல்லது பீச் நிறம் உள்ளதாக இருக்க வேண்டும்.

எண்ணெய்ப் பசையுடைய சருமம்:

மேக்கப் தொடங்குவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பு சரி அளவு வினிகரையும், தண்ணீரையும் கலந்து முகத்தில் நன்கு தடவிக் காய விட்டுப் பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவித் துடைக்க வேண்டும். இது ஒரு நல்ல அஸ்ட்ரிஞ்சன்டாகச் செயல்படும். இயலுமானால் பான் கேக் உபயோகிக்கலாம். வாட்டர் புரூப் பேஸும் பயன்படுத்தலாம். நீண்ட நேரம் நிலைத்திருக்த்தக்க கிரிம் ப்ளஷர் பயன்படுத்த வேண்டும்.

ஸ்டெப் – 1  க்ளென்சிங் :

நனைத்துப் பிழிந்த பஞ்சினால் க்ளென்சரைத் தொட்டு முகமெங்கும் தடவி நன்றாக அழுந்தத் துடைத்துச் சுத்தம் செய்யவும். முதலில் மூக்கின் மேற்பகுதியில் தொடங்கிப் பின்னர் கண்களைச் சுற்றியும் பிறகு கன்னங்களிலும் க்ளென்சிங் செய்ய வேண்டும். தாடையிலும் கழுத்துப் பகுதியிலும் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்வது போல அழுந்தத் தேய்க்க வேண்டும். க்ளென்சிங் முடிந்ததும் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பர் உபயோகித்து நன்கு துடைத்துக் சுத்தமாக்க வேண்டும்.

ஸ்டெப் – 2 டோனிங் :

நம் நாட்டில், ஆண்டின் பெரும்பாலான பகுதியும் வெப்பம் மிகுந்திருப்பது இயல்பாகும். எனவே டோனர் இடுவதற்கு முன் ஒரு மெல்லிய துணியில் ஐஸ் கட்டிகளைப் போட்டு (Ice Cubes) பொட்டலம் போல் கெட்டி முகமெங்கும் ஒற்றி எடுத்துக் குளிரச் செய்ய வேண்டும். பின்னர் முகத்தில் படர்ந்திருக்கும் ஈரத்தை மிருதுவான துவாலை ( டவல் ) ஒன்றினால் ஒற்றி எடுத்து மிருதுவாக துடைத்து,ஈரமில்லாது செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஏதாவது ஒரு டோனரை ஊற்றிக் கொண்டு முகத்தில் தடவிப் பின்னர் கையினால் படபடவெனத் தட்டி முகமெங்கும் அடித்துத் தடவ வேண்டும்.

ஸ்டெப் – 3 மாய்ஸ்சரைசிங் :

மேக்அப்பின் முக்கிய கட்டம் மாய்ஸ்சரைசிங் தான். மாய்ஸ்சரைசிங் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு, உங்கள் கை விரல்களினால் மணப் பெண்ணின் முகம், கழுத்து, தோல் போன்ற இடங்களை தடவிப் பார்த்து எங்கெங்கு வறட்சி தென்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். விரல் நுனியில் மாய்ஸ்சரைசரை எடுத்துக் கொண்டு, அந்த இடங்களில் ஒவ்வொன்றாகத் தடவுங்கள். தடவும் போது கீழிருந்து மேலாகவும், உட்புறமிருந்து வெளிப்புறமாகவும் மிருதுவாகத் தடவுங்கள். சருமத்தை அழுத்தி இழுக்காதீர்கள்.

கன்னங்களில் விரல் நுனியினால், கீழிருந்து மேலாகத் தடவுங்கள். திரும்பத் திரும்ப பலமுறை தடவுங்கள். தடவி முடிந்த பிறகு, எங்காகிலும் மாய்ஸ்சரைசிர் தெரிந்தால் அதை டிஸ்யூ பேப்பரினால் துடைத்து விடுங்கள்.

ஸ்டெப் – 4 பவுண்டேஷன் :

நல்ல மேக்அப்பின் அடித்தளம் கவனமுடன் செய்யப்பட்ட பவுண்டேஷன் ஆகும். மணப் பெண்ணின் நிறத்திற்கும், சருமத்திற்கும் ஒத்த பவுண்டேஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நல்ல நிறம் உள்ளவர்களுக்கு தேன் அல்லது பிங்;க் நிற டின்டுகள் ஏற்றது. சற்று நிறம் குறைவானவர்களுக்கு ப்ரவுன் அல்லது டான் (Tan) சிவப்பு போன்ற இருண்ட நிறங்கள் நன்கு பொருந்தும்.

பவுண்டேஷன்கள் லிக்விட் பவுண்டேஷன், செமி சாலிட் (Semi Solid Foundation) மற்றும் சாலிட் (Solid Foundation) என்று மூன்று விதங்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும் லிக்விட் பவுண்டேஷனே பலராலும் விரும்பப்படுகிறது. இடது உள்ளங்கையில் பவுண்டேஷன் ஊற்றிக் கொண்டு, வலது கை விரல்களாலோ அல்லது சுத்தமான ஈர ஸ்பாஞ்சின் உதவியாலோ ஒரே மாதிரியான அழுத்தத்துடன் தடவவும். முதலில் நடு நெற்றியில் சிறிது பவுண்டேஷனை வைத்து அதை வட்டமாகச் சுழற்றுவது போல் சுற்றிச் சுற்றித் தடவவும். முழு நெற்றியிலும் காது வரையும் தடவவும். நெற்றிப் பொட்டில் (Temples) தொடங்கி கன்னத்தில் பூசவும். பிறகு கண்களைச் சுற்றித் தடவவும். மூக்கின் ஒவ்வொரு பக்கத்திலும் சிறிது பவுண்டேஷனைத் தடவி, அதைக் கண் இமைகள் வரை கொண்டு சென்று இமைகளின் மேலும் தடவுங்கள். தாடை, உதடுகள், உதடுகளின் கீழ்ப்புறம் எல்லா இடத்திலும் தடவுங்கள். முகம் முழுவதும் ஒரே மாதிரி பவுண்டேஷன் பூசப்பட்டிருக்க வேண்டும். சுத்தமான டிஸ்யூ பேப்பரால் எல்லா இடங்களையும் மெதுவாக ஒற்றி எடுங்கள்.

ஸ்டெப் – 5 ஐ மேக்அப் :

கண் மேக்அப்பில் நமக்குத் தேவையான சாதனங்கள்,

1. ஐ புரோ பென்சில்                    2. ஐ ஷேடோ  ( பவுடர் அல்லது கிரிம் )

3. ஐ லைனர்                            4. மஸ்காரா

ஒரு நிமிட கண் மேக்அப் ஆனாலும் சரி, 15 நிமிட மேக்அப் ஆனாலும் முக்கியமான விஷயம் ஒன்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது கண் மேக் அப்பிற்கான சாதனங்களைக் கவனமுடனும் திறமையுடனும் பயன்படுத்த வேண்டும்.

ஐ ஷேடோ  :

பொதுவாக ஐ ஷேடோ க்களில் பவுடர் வடிவில் வருபவை எளிதானவை. ஸ்பாஞ்ச் அல்லது மேக்அப் பிரஷ்கொண்டு எளிதாகப் பூசலாம். பொதுவாக சிவந்த நிறம் உள்ளவர்களுக்கு லைட் நிற ஷேடோக்களும் ஐ லைனரும் ஏற்றவை. மாநிறம் உடையவர்களுக்கு சற்று இருண்ட வண்ணங்களும் அவற்றின் கூட்டுக் கலவைகளும் ஏற்றவை. ஷேடோ  தடவும் போது, இமைகளின் வெளிப் புறத்து சருமத்தின் நிறத்தோடு ஷேடோ வின் நிறம் இணைந்து தோன்றும்படி நன்கு நீவி இணைக்க வேண்டும்.

ஐ லைனர் :

ஐ லைனர்கள் லிக்விட்டாகவும், பென்சில் வடிவத்திலும் வருகின்றன. லிக்விட் ஐ லைனருக்கு பிரஷ்அவசியம் தேவை. ஆனால் பென்சிலை உபயோகிக்கும் போது சருமத்தை கீறவோ இழுக்கவோ கூடாது. கண் இமை விளிம்புகளைத் தெளிவாக வரையறுத்துக் கண்களை அதிக அழகுடன் தோன்றச் செய்வதற்கே ஐ லைனர் பயன்படுத்தப்படுகிறது.

மஸ்காரா :

இமை முடிகளுக்கு மஸ்காரா இட்டு நிறமூட்டினால் அது கண்களை மேலும் அழகாக்கிக் காட்டும். மஸ்காராவில் Water Proof Plain  என்று இரண்டு விதங்கள் உண்டு. எல்லோருக்கும் ஏற்றது வாட்டர் புரூப் இல்லாத பிளெய்ன் (Plain) மஸ்காரா தான்.

மஸ்காரா இடும் போது, கண்ணை மூடச் செய்த பின்னர் இமை தொடங்குமிடத்திலிருந்து நுனியை நோக்கி மஸ்காரா இட வேண்டும். பின்னர் கண்ணைத் திறந்த பிறகு கீழிருந்து மேலாக இட வேண்டும். மேல் இமை முடிகளை விடக் கீழ் இமை முடிகளுக்கு சற்றுக் கூடுதலாக மஸ்காரா இடுவது நல்ல தோற்றத்தை ஏற்படுத்தும்.

ஸ்டெப் – 6. லிப் மேக் அப் :

லிப் பிக்ஸ் – லிப் லைனர் – லிப் கலர்

உதடுகளில் லிப்ஸ்டிக் இடுவதற்கு முன்னர் நல்ல முறையில் பவுண்டேஷனும் பவுடரும் இடுவது மிகவும் முக்கியம். உதடுகள் இருக்க வேண்டிய அளவை வரையறை செய்து கொண்டு, கனத்த லிப் பென்சிலால் அவுட் லைன் வரைந்து கொள்ளவும். பிறகு லிப் கலரைக் கொண்டு பிரஷ்உதவியினால் அவுட்லைனின் உட்புறம் தடவிக் கலர் செய்யவும். நன்கு கலர் செய்து முடித்த பிறகு லிப் கிளாஸ் இடலாம்.

ஸ்டெப் – 7 ப்ளஷர் :

சருமத்திற்கு ஏற்ற ப்ளஷரை ( பவுடர் அல்லது கிரிம் ) தேர்ந்தெடுத்து கவனமுடன் பயன்படுத்த வேண்டும். மிகக் குறைவாக பயன்படுத்தி நன்கு மெழுகிச் சமன்படுத்த வேண்டும். எப்போதும் ப்ளஷர் சருமத்தின் நிறத்தை விட 2 ஸ்டெப் ஆழ்ந்த (Dark) நிறமுள்ளதாக இருக்க வேண்டும்.

ஸ்டெப் – 8 பவுடர் :

பவுண்டேஷன் உறுதியாக நிற்கவும், மேக் அப் செய்ய ஏற்றபடி சருமம் எண்ணெய்ப் பசை இன்றி இருக்கவும் பவுடர் பெரிதும் உதவுகிறது. பவுண்டேஷன் இட்டதும், மேலே தூவுவதற்கு ஏற்றது பவுடரே. பவுடர் பப் வைத்து பவுடர் பூசுதல்  வேண்டும். முகத்தில் பவுடர் அதிகமாகத் தென்பட்டால் கனத்த பவுடர் பிரஷ்கொண்டு, கீழ் நோக்கித் தடவி அகற்றி விடலாம். பவுடரைத் தேர்ந்தெடுக்கும் போது சரும நிறத்திற்கு ஏற்ற பவுடரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.


Spread the love