விட்டமின்களைப் போல் கனிமச்சத்துகளும் உடல் நலத்துக்கு இன்றியமையாதவைகளாகும். ஆண்மைக்கு வலிமை தருகிறது துத்தநாகம். தோலுக்கும், முடிக்கும், நகங்களுக்கும் பளபளப்புத் தருகிறது. சிலிகன் எடைக் குறைவையும், உடல் வளர்ச்சியின்மையையும் உடனடியாக நேராக்குகிறது பாஸ்பரஸ். இப்படி எத்தனை எத்தனையோ பயன்பாடுகள்.
எளிய கனிம வடிவில் இருக்கும் இப்பொருள்களை கனிமங்கள் என அழைக்கின்றனர். உணவியலார் அவற்றைக் கனிமச் சத்துக்கள் என்கின்றனர். விட்டமின்களைப் போல் அமினோ அமிலங்களைப் போல் கனிமச்சத்தும் உடலிலுள்ள பலகோடி செல்களின் சீரான இயக்கத்திற்குத் தேவைப்படுகின்றன.
கால்ஷியம்
மனித உடலுக்கு அதிகமாக தேவைப்படுகின்ற கனிமம் கால்ஷியம். 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதனின் உடலில் சுமார் 1 கிலோ கால்ஷியம் உள்ளது. எலும்புகளை உருவாக்குகின்ற பணி தவிர வேறு பல பணிகளையும் செய்கிறது கால்ஷியம். இது இவ்வாறு போனால் இதயம் சுருங்கி விரிவதில் குறையேற்படக் கூடும். செரிமானப் பணியில் பயன்படும் பல நொதிப்பொருள்கள் உருவாக இது உதவுகின்றது.
கணிசமான அளவில் கால்ஷியம் காணப்படும் பொருள்கள் பால், பால் பொருள்கள், தீட்டாத கோதுமை, லெட்டூஸ், பசளி முட்டைக்கோசு, கேரட், ஆரஞ்சு, எலுமிச்சை, பாதாம், அத்தி, அக்ரூட் போன்றவைகள்.
பாஸ்பரஸ்
கால்ஷியத்தோடு சேர்த்து செயலாற்றுவதற்குப் பாஸ்பரஸ் தேவை. எலும்பு, பல், நரம்பு போன்றவற்றின் நலத்திற்கு இது மிகவும் அவசியம். பாஸ்பரஸ் பற்றிப் பேசும் போது பழங்கள் பழச்சாறுகள் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் நேர்கிறது. பழங்களில் பாஸ்பரஸ் சத்து மிகுந்துள்ளது. தானியங்களிலும், பருப்பு வகைகளிலும், பால் பொருள்களிலும் இது காணப்படுகிறது. உடலில் இது குறையும் போது எடைக் குறைவு, வளர்ச்சியின்மை, பால் உணர்வு குன்றுதல் முதலிய குறைபாடுகள் ஏற்படக் கூடும்.
அயன்
அயன் எனப்படும் இரும்புச்சத்து இரத்தத்தின் உற்பத்திக்கும் சீரான செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியம். திராட்சை வகைகள், மாம்பழம், பேரீச்சம்பழம், தர்பூசணி, சீதாப்பழம் போன்ற பழங்களிலும் வாழைக்காய், சுண்டைக்காய், பருப்பு கீரை, பசலை கீரை, முள்ளங்கி, டர்னிப் கீரை போன்ற காய்கறிகளிலும், கடலைப்பருப்பு, உளுந்து, காராமணி, கொள்ளு, பட்டாணி போன்றவற்றிலும் அயச்சத்து நிறைந்த அளவில் காணப்படுகிறது.
மக்னீஷியம்
மனித உடலின் அனைத்து திசுக்களிலும் காணப்படுகின்ற கனிமச்சத்து மக்னீஷியம். மனதிற்கு அமைதியும் ஓய்வையும் தரக்கூடியது. கொலஸ்ட்ரால் உருவாவதைத் தடுக்கும் சக்தி கொண்டது. தாவரங்கள் உண்டாக்குகின்ற குளோரோபில் என்னும் பச்சையத்தின் ஒரு பகுதி மக்னீஷியத்தால் ஆனது.
ஆப்பிள், சோயா பீன்ஸ், ஆல்பால்பா, அத்தி, நாரத்தை, பீச்சஸ் போன்ற காய்கறி மற்றும் பழங்களிலும், பச்சைக் கீரை வகைகளிலும், கொட்டைகள், விதைகள் போன்றவற்றிலும் தீட்டாத கோதுமை, மட்டை அரிசி போன்றவற்றிலும் சூரியகாந்தி, எள் போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.
சோடியம்
சமையல் உப்பில் 40 சதவிகிதம் சோடியம் என்னும் கனிமப் பொருள் உள்ளது. 65 கிலோ எடையுள்ள ஒரு மனிதனின் உடலில் 256 கிராம் சோடியம் குளோரைடு உள்ளது. அமில கார விகிதத்தை நெறிப்படுத்துவது, செய்திகளை நரம்பணுக்களுக்கு அனுப்புவது, தசைகளில் இறுக்கம் தவிர்ப்பது ஆகியவை தான் சோடியத்தின் முக்கிய பணிகள். நாம் உண்ணுகின்ற உணவுப் பொருள்கள் பலவற்றிலும் சோடியம் குளோரைடு இயற்கை வடிவில் கிடைக்கிறது.
செலரி, வெள்ளரி, தர்பூசணி, நாரத்தை, எலுமிச்சை, பீட்ரூட், முட்டைக்கோசு, லெட்டூஸ், வெண்டைக்காய், ஆப்பிள், பரங்கி போன்ற காய்கறிகளிலும் பாதாம், அக்ரூட், பிஸ்தா போன்றவைகளிலும் இது குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது.
பொட்டாஷியம்
திசுக்களின் வளர்ச்சிக்குப் பொட்டாஷியம் மிகவும் அவசியம். சராசரி மனித உடலில் 120 கிராம் பொட்டாஷியமும், 245 கிராம் பொட்டாஷியம் குளோரைடும் உள்ளது. இரத்தத்திலும், திசுக்களிலும் அமில கார விகிதத்தை இது நெறிப்படுத்துகிறது. நரம்புகளின் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவுகிறது. குழப்பமின்றிச் சிந்தனை செய்வதற்கும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் இது உதவுகிறது.
எல்லாவிதமான காய்கறிகளிலும் குறிப்பாகக் கீரை வகைகளிலும், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பலாக்காய், தாமரைத் தண்டு, பாடா அவரை, பாகற்காய் போன்றவற்றிலும் திராட்சை, ஆரஞ்சு, வாழைப்பழம், எலுமிச்சை போன்ற பழங்களிலும், பால், மோர் போன்றவைகளிலும் பொட்டாஷியம் நிறைந்து காணப்படுகிறது.
அயோடின்
தைராய்டு சுரப்பியின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமான கனிமம் அயோடின். இது தவிர உடலின் பல இயக்கங்களையும் இது நெறிப்படுத்துகிறது.
டர்னிப் கீரை, பூண்டு, அன்னாசிப்பழம், பேரிக்காய் போன்றவற்றில் அதிகம் கிடைக்கிறது.
காப்பர்
மனித உடலில் 75 முதல் 150 மி.கி. வரை காப்பர் உள்ளது. இது அயச்சத்து ஹிமோகுளோபினாக மாற உதவுகிறது. உடலினுள் விட்டமின் சி சுவர்வதற்கு இது அவசியமாகிறது. ஏறக்குறைய இரும்புச்சத்துக் காணப்படும் எல்லா இயற்கைப் பொருட்களிலும் இது காணப்படுகிறது.
மாங்கனீஸ்
மனித உடலில் 30-35 மி.கி. மாங்கனீஸ் காணப்படுகிறது. இது நரம்புகள், மூளை ஆகியவற்றின் செயல்பாட்டிற்கு இது அவசியமானது. உடற்களைப்பை போக்கி மன அமைதி தரக்கூடியது. இது உண்ணத் தகுந்த எல்லாப் பச்சைக் கீரைகளிலும், தானியங்களின் தோல்களிலும் காணப்படுகிறது.
ஜிங்க் (துத்தநாகம்)
இது ஒரு உயர்ந்த, சிறந்த கனிமப் பொருள். இது மனிதனுக்கு மிகக் குறைவான அளவிலேயே தேவைப்பட்டாலும் மிகச் சிறந்த காரியங்களைச் செய்கிறது. ஆண்மையுணர்வை ஊக்குவிக்கவும், மகப்பேறு உண்டாகவும் பயன்படுகிறது. நோய் எதிர்ப்புத் திறனைத் தருவதுடன் புண்கள், காயங்களை எளிதில் ஆறச் செய்கிறது. மனிதனின் தேவை நாள் ஒன்றுக்கு 15 மி.கி.
இது பால், பீன்ஸ் வகைகள், தீட்டப்படாத தானியங்கள் கொட்டைகள், விதைகள் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது.
சிலிகன்
இதை அழகு தரும் கனிமப் பொருள் என்பார்கள். சருமப் பொலிவிற்கும், கேசப் பளபளப்பிற்கும், நகத்தின் ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் அவசியம். கண்களின் பொலிவை நிலைப்படுத்திப் பற்களின் எனாமலைப் பாதுகாக்கிறது. இது ஆப்பிள், செர்ரி, திராட்சை போன்ற பழவகைகளிலும் பீட்ரூட், வெங்காயம், அஸ்பரகஸ் போன்ற காய்கறிகளிலும் எல்லாவிதமான கீரைகளிலும், பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா போன்ற பருப்புகளிலும் தேனிலும் அதிகமாகக் காணப்படுகிறது.