வாழைப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1
யோகர்ட் – 1/2 கப்
பால் – 1/2 கப்
ஜாம் – 1 டே.ஸ்பூன்
சீனி – தேவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
பாலைக்காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். வாழைப்பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பழத்தை ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் ஜாம், யோகர்ட், பால், சீனி, ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைச் சேர்த்து ஒரு அடி அடித்து சில்லென்று பருகவும்.
கோகனெட் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பால் – 1 கப்
வாழைப்பழம் – 1
சீனி – தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் – சிறிது
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் தேங்காய்ப்பால், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து, தேங்காய் பூ தூவி ஜில்லென்று பருகவும்.
சோயா கொக்கோ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
சோயாமில்க் – 1 கப்
கொக்கோபவுடர் – 2 டீஸ்பூன்
பால் – 1 கப்
சீனி – தேவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். சோயா மில்க், கொக்கோ பவுடர், சீனி, பால், ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்துப் பருகவும்.
பீட்ரூட் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1
பால் – 1/2 லிட்டர்
வெனிலா ஐஸ்கிரீம் – 1 கப்
சீனி -தேவைக்கேற்ப
வெனிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
ஜெல்லி – 1 கப்
தண்ணீர் – 1 டம்ளர்
செய்முறை
பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். பீட்ரூட் தோலை சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பாலுடன், பீட்ரூட் ஜுஸ், சீனி, வெனிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து, அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் ஐஸ்கிரீம், ஜெல்லி சேர்த்து அலங்கரித்துப் பருகவும்.
சோயா கீர்
தேவையான பொருட்கள்
சோயா சங்க்ஸ் – 100 கிராம்
பால் – 1/2 லிட்டர்
சீனி – 200 கிராம்
முந்திரி – 10
கிஸ்மிஸ் – 10
நெய் – 2 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சிறிது
செய்முறை
முதலில் சோயா சங்க்ஸை (சோயா துண்டு) கொதிக்கும் வெந்நீரில் போட்டு 10 முதல் 20 நிமிடம் வரை கொதிக்க விடவும். பின் கொதி நீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரில் நன்கு கழுவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். பின் ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, கிஸ்மிஸை வறுத்து எடுத்துக் கொண்டு அந்த நெய்யிலேயே அரைத்த சோயாவை போட்டு நன்கு வதக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் கொதிக்கும் பொழுது, நெய்யில் வதக்கிய சோயாவை போட்டு வேக விடவும். நன்கு வெந்தவுடன் சீனியைப் போட்டு அது கரைந்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ்ஸைப் போட்டு இறக்கவும். சிறிது ஆறியதும் வெனிலா எசன்ஸ் சேர்த்து சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றோ பரிமாறவும்.
சாக்லேட் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
பால் – 1 டம்ளர்
கொக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்
சீனி – தேவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் பால், கொக்கோ பவுடர், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து நுரை வரும் வரை அடித்துப் பருகவும்.
நுங்கு மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
இள நுங்கு – 4
பால் – 2 கப்
சீனி – தேவைக்கேற்ப
ரோஸ் எசன்ஸ்- சிறிது
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
நுங்கின் மேல் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் நுங்கு, பால், சீனி, ரோஸ் எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே சிறிது நுங்கை மிதக்க விட்டு பரிமாறவும்.
மேங்கோ ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்
மாம்பழம் – 1
பால் – 1 கப்
சீனி – தேவைக்கேற்ப
வெனிலா ஐஸ்கிரீம் – 1 கப்
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
வெனிலா எசன்ஸ் – சில துளி
செய்முறை
பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். மாம்பழத்தை தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் மாம்பழம், பால், சீனி, எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைப் போட்டு அடித்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே ஐஸ்கிரீமை வைத்து அதன் மேல் மாம்பழத்துண்டுகளை போட்டுப் பரிமாறவும்.
ஆப்பிள் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 1
பால் – 1 கப்
எலுமிச்சம் ஜுஸ் – 1 ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஆப்பிளை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் பால், ஆப்பிள், சீனி, ஜாதிக்காய் பொடி, ஐஸ் க்யூப் முதலியவற்றைப் போட்டு ஒரு அடி அடித்து கடைசியாக எலுமிச்சம் ஜுஸ் கலந்து பருகவும்.
பாதாம் கீர்
தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு – 15
பால் – 2 கப்
சீனி – தேவைக்கேற்ப
குங்குமப்பூ -1 சிட்டிகை
சாரைப்பருப்பு – 2 டீஸ்பூன்
செய்முறை
பாதாம் பருப்பை சிறிது வெந்நீரில் ஊற வைத்து தோலை உரித்து விட்டு அரைத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். பால், பாதாம்பருப்பு, சீனி முதலியவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்கு கொதிக்க விடவும். குங்குமப் பூவை சூடான பாலில் ஊற வைத்து, கொதிக்கும் பாதாம் கீரில் ஊற்றவும். சாரைப்பருப்பைச் சேர்த்து ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரச் செய்து, ஜில்லென்று பரிமாறவும்.
லஸ்ஸி
தேவையான பொருட்கள்
தயிர் – 2கப்
சீனி – தேவைக்கேற்ப
ரோஸ் எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
ஒரு மிக்ஸியில், தயிர், சீனி, ரோஸ் எசன்ஸ், ஐஸ்கட்டிகள் சேர்த்து ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பருகவும்.
வெள்ளரிக்காய் ஸ்வீட் லஸ்ஸி
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1
தயிர் – 1 கப்
சீனி – தேவைக்கேற்ப
புதினா இலை – சிறிது
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
வெள்ளரிக்காயின் தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு மிக்ஸியில் வெள்ளரிக்காய், தயிர், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே புதினா இலை தூவி பரிமாறவும்.
வெள்ளரிக்காய் மசாலா லஸ்ஸி
தேவையான பொருட்கள்
தயிர் – 2 கப்
வெள்ளரி -1
புதினா இலை – 1/2 கப்
பச்சைமிளகாய் – 1
சீரகம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
வெள்ளரிக்காயை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். வெள்ளரிக்காய், புதினா இலை, பச்சை மிளகாய், சீரகம், உப்பு முதலியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் தயிர், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி, டம்ளரின் விளிம்பில் ஒரு வெள்ளரிக்காய் ஸ்லைஸை சொருகிப் பரிமாறவும்.
மசாலா வெஜிடபிள் லஸ்ஸி
தேவையான பொருட்கள்
புளிப்பில்லாத தயிர் – 2 கப்
கேரட் – 1 டே.ஸ்பூன்
மாங்காய் – 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் – பாதி
வெள்ளரிக்காய் – 1 டே.ஸ்பூன்
இஞ்சி -1/2 இன்ச்
உப்பு -தேவைக்கேற்ப
சீனி – 1 டீஸ்பூன்
வறுத்துப் பொடித்த சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
கடுகு -சிறிது
எண்ணெய் – சிறிது
கொத்தமல்லி -சிறிது
செய்முறை
கேரட், மாங்காய், வெள்ளரிக்காய் முதலியவற்றை துருவி மேற்சொன்ன அளவு எடுத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் தயிர், உப்பு, சீனி, அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு அடி அடிக்கவும். பின்னர் அதில் துருவிய வெஜிடபிள்களைச் சேர்த்து கலக்கி, வறுத்துப் பொடித்த சீரகத்தூள் 1/2 டீஸ்பூன் சேர்க்கவும். எண்ணெய்யில் கடுகை தாளித்துக் கொட்டவும். ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகளைப் போட்டு மசாலா வெஜிடபிள் லஸ்ஸியை ஊற்றி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பீட்ரூட் லஸ்ஸி
தேவையான பொருட்கள்
தயிர் – 1 கப்
பீட்ரூட் சிறியது – 1
சீனி – தேவைக்கேற்ப
ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி துருவி வேக வைத்துக் கொள்ளவும். சிறிது பீட்ரூட் துருவலை அலங்கரிக்க வைத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் தயிர், வேக வைத்த பீட்ரூட் துருவல், சீனி, ஜாதிக்காய்ப் பொடி, ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைப் போட்டு ஒரு அடி அடித்து மேலே பீட்ரூட் துருவலை தூவி பரிமாறவும்.
ட்ரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
தேவையான பொருட்கள்
தயிர் – 2 கப்
பாதாம் – 5
முந்திரி – 5
பிஸ்தா – 5
கிஸ்மிஸ் – 10
குங்குமப்பூ – சிறிது
பேரீட்சை – 3
சீனி – தேவைக்கேற்ப
ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
பாதாம், முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ், பேரீட்சை முதலியவற்றை தண்ணீரில் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் தயிர், அரைத்த விழுது, சீனி, ஏலக்காய்ப் பொடி, ஐஸ்கட்டி போட்டு ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே குங்குமப் பூவைப் போட்டு பரிமாறவும்.
நீர் மோர்
தேவையான பொருட்கள்
கெட்டித்தயிர் – 1 கப்
பச்சைமிளகாய் – 1
இஞ்சி – சிறிது
மாங்காய் – சிறு துண்டு
கொத்தமல்லி -சிறிது
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – சிறிது
பெருங்காயம் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
பச்சைமிளகாய், இஞ்சி, மாங்காய், சீரகம், பெருங்காயம் முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். தயிரில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்புப் போட்டு கடைந்து கொள்ளவும். அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி தூவி ஃப்ரிட்ஜில் வைத்து குளிரச் செய்து பரிமாறவும்.
மேங்கோ லஸ்ஸி
தேவையான பொருட்கள்
மாம்பழம் – 1
தயிர் -2 கப்
தேன் – 1 டே.ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
சீனி – தேவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
மாம்பழத்தை தோலை சீவி, கொட்டையை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் தயிர், மாம்பழம், தேன், உப்பு, சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து ஜில்லென்று பரிமாறவும்.