மனிதர்கள் இப்போது அன்றாடம் பயன்படுத்துகிற திரவப் பொருள்களின் ‘லிஸ்ட்’ எடுத்தால், அதில் ‘பால்’ இல்லாமல் போகாது. டீ, காபி, மில்க்ஷேக் என்பவற்றில் ஏதாவது ஒருவகையில் பால் இருந்தே விடுகிறது.
தினசரி வீட்டு உபயோகத்திற்கு என வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளில் உறைகளின் மீதே எத்தனை நாட்களுக்கு உபயோகிக்கலாம் என்ற குறிப்புகள் இருக்கும். சில வகை பால் காலை முதல் மாலை வரை மட்டுமே பயன்பாட்டுக்கு உரியது. மறு நாள் வைத்திருந்து உபயோகிக்க முடியாது. சில வகை பால் மறு நாள் காலை வரை உபயோகிக்க ஏற்றதாக பால் கவர்களில் குறிப்பிடப்படுகிறது.
பாலைப் பொறுத்தவரை ஒரே நாளில் பயன்படுத்தித் தீர்ப்பது நல்லது. மிஞ்சிய பாலை உறைக்கு ஊத்தி தயிராகவோ, மோராகவோ பயன்படுத்தலாம். இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது என்ற அறிவிப்புடன் சந்தைகளில் புழங்கும் பால் வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
பாலின் இயல்பு ஒரே நாளில் கெட்டுப்போவதே. அதை மாற்றி இரண்டு நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க அதனோடு சில வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வாஷிங் சோடா முதல் யூரியா வரை இந்த வேதிப் பொருட்கள் மாறுபடலாம். ஆனால், இவற்றின் பக்க விளைவுகள் மோசமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாலில் கலக்கப்படும் கலப்படப் பொருட்கள் என நிபுணர்கள் அளிக்கும் லிஸ்ட்டைப் பாருங்கள்.
வழக்கமாக கார்ப்னேட்டுகள், பை கார்பனேட்டுகள், ஸ்டார்ச், யூரியா ஹைட்ரேட்டு லைம், ஃபார்மலின் மற்றும் அமோனியம் சல்பேட் உள்ளிட்ட நியூட்ரலைசர்கள் பாலின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தி பாலின் அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி பால் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க பாலோடு கலக்கப்படுகின்றனவாம்.
ஸ்டார்ச் மற்றும் யூரியா போன்ற வேதிப் பொருட்கள் பாலின் நீர்த்த தன்மையைக் கட்டுப்படுத்தி திக்கான பாலாக மாற்ற பாலோடு கலக்கப்படுகின்றன. இந்தப் பொருட்கள் பாலின் கொழுப்பற்ற திடப் பொருட்களின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. இதை எஸ்.என்.எப். கன்டென்ட் என்பார்கள்.இதை வைத்துதான் பாலில் கலக்கப்படும் தண்ணீரின் அளவு கண்டுபிடிக்கப்படுகிறது. 8 சதவீதத்துக்கும் குறைவாக எஸ்.என்.எப். கன்டென்டுடன் பால் விநியோகம் செய்தால் அந்தப் பால் உற்பத்தியாளருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுமாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்,இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பாலில் கலக்கப்படும் இந்தவேதிப் பொருட்களினால் ஃபுட் பாய்சனிங் முதல் பலவிதமான குடல் நோய்கள் வரை மோசமான உடல்நலக் கோளாறுகள் மனிதர்களுக்கு வரலாம் என்று எச்சரித்து உள்ளது. இந்தவேதிப் பொருட்கள் உடலின் புரதத் தன்மையை அழிக்கக் கூடியதாம்.
பாலில் கலக்கப்படும் யூரியாவால் சிறுநீரகங்கள் பழுதடைகின்றன. காஸ்டிக் சோடாவால் இருதயக் கோளாறுகள் மற்றும் அக்யூட் ஹைப்பர் டென்ஷன் போன்ற பிரச்சினைகள் வருகின்றன.
நாம் பயன்படுத்தும் பால் தரமானதுதானா? என்பதை எளிமையாக எப்படி அறிவது?
பாட்டிகள் காலத்தில் முறையாக துணி தைக்கப்பயன்படுத்தும் ஊசியை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிய பின் பால் பாத்திரத்தில் முக்கி எடுத்தால் தரமான பாலாக இருந்தால் பால் ஊசியில் மேலாக ஒரு கோட்டிங் ஒட்டிக் கொண்டு மெதுவாகக் கீழிறங்குமாம்.
அதிக தண்ணீர் கலந்த பாலாக இருந்தால் அப்படியே சரக்கென வழிந்து விடுமாம். இது பாலில் தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறதா என அறிய வேண்டுமானால் பயன்படலாம். பாலின் திடத் தன்மைக்கு இப்போது போல ஸ்டார்ச் பயன்படுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வதாம் என்கிறீர்களா? இருக்கவே இருக்கிறது லாக்டோ மீட்டர் முறை. இதைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம். எந்த பிராண்ட் பாலாக இருந்தாலும் மறு நாள் வைத்திருந்து பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.