மனம், அறிவு, உணர்வு, நினைவாற்றல், விரும்பு, ஒழுக்கம், நடவடிக்கை, செயல் இவற்றின் மாறுபாட்டை மனநோய் என அறிந்து கொள்ள வேண்டும்.
– சரக சம்ஹிதை
உடல் வெளுக்க வழி உண்டு எங்கள் முத்து மாரியம்மா,
மனம் வெளுக்க வழி இல்லையே எங்கள் முத்து மாரி
– பாரதியார்.
மனநோய் என்றால் ஆயுர்வேதத்தில உன்மத்தம். எந்த வியாதி வந்தாலும் வரலாம் ஆனால் மனநோய் மற்றும் வரக்கூடாது என்பார் பலர். அதுவும் பழங்காலத்தில் மனநோய்கள் உள்ளவர்களை சங்கிலியால் கட்டி, கோயிலை சுற்றி வலம் வர வைப்பது, அடிப்பது இவை தான் சிகிச்சை. திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) இந்த மாதிரி நோயாளிகள் சுற்றி வந்தால் உடனே குணமாகி விடுவார்கள் என்பது ஐதிகம். நம் நாட்டில் மன நோயாளிகள் சரிவர நடத்தப்படுவதில்லை என்பது உண்மை. சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனநோயாளிகள் திடீரென்று ஏற்பட்ட நெருப்பினால் எரிந்து போனது எல்லோருக்கும் தெரிந்த ஒரு பயங்கர சம்பவம். மனநோயாளிகளை உறவினர்கள் வைத்தியர்களிடம் சரியான சமயத்தில் அழைத்துச் செல்வதில்லை. காரணம் குடும்பத்திற்கு ஏற்படும் களங்கம் (Stigma) மேல் நாட்டில் கூட கிட்டத்தட்ட இதே நிலைமை தான். சமூகத்தில் மனநோயைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.
ஆயுர்வேதத்தை பொறுத்த வரை ‘மனஸ்’ (மனது தான்) மனித சிந்தனைகளின் பிறப்பிடம். மனிதன் இறந்தால், மூளையும் இறந்து விடும். ஆனால் மனது இறப்பதில்லை. வேறு சரீரத்திற்கு மாறுகிறது. நவீன மருத்துவ முறைகளை பொறுத்த வரை மூளை தான் பிரதானம். மனதுக்கும் மூளைக்கும் வித்தியாசமில்லை. மனது, அதாவது எண்ணங்கள் தோன்றுவதெல்லாம் மூளையின் செயல்பாடு தான்.
மனோ வியாதி இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. ஒன்று நியூரோசிஸ் (Neurosis) மற்றொன்று சைகோசிஸ் (Psychosis). நியூரோசிஸ் உள்ளவர்களுக்கு தங்கள் குறைபாடு தெரியும். இந்த பிரிவில் வருபவை மனச்சோர்வு (Depression), மனப்பதற்றம் (Anxiety), ஆழ் பயம் (Phobia), கருத்து ஆவேசம் அல்லது எண்ணச் சுழற்சி (Obsession), அதிக உணர்ச்சி வசப்படுதல் அல்லது சிறிய மனநல பாதிப்பு (Hyteria), தன் உடலைப்பற்றி அதீதமான கவலை (Hypocjondria).
சைகோஸிஸ் தீவிரமான மனவியாதி. நோயாளிகளுக்கு தன் குறைபாடு தெரியாது. தன்னைச் சுற்றியுள்ள நிஜ வாழ்க்கை புரியாது. எண்ணச் சிதைவு ஏற்படும். உச்சக்கட்ட மனநோய் வியாதியான “மனச்சிதைவு” (Schizophrenia) இந்த பிரிவை சேர்ந்தது. ‘மன எழுச்சி’ (Mania) நோயும் சைகோஸிஸ் வியாதி தான். இவை தவிர குழந்தைகளுக்கு வரும் மனவியாதிகள், ஆளுமை கோளாறுகள் (Personality disorders) போன்ற பல மனோ வியாதிகள் உள்ளன.
ஆயுர்வேதம் சொல்லும் மனநோய் வருவதற்கான காரணங்கள்.
வாதத்தினாலும், பித்தத்தினாலும், கபத்தினாலும், இந்த மூன்றின் சேர்க்கையாலும் (சன்னி பாதம்) எதிர்பாராத விதமாக ஏற்படும் உடல் மன நலிவுகளாலும் மனநோய் உண்டாகும்.
கீழ்கண்டவர்களை மனநோய் சுலபமாக தாக்கும்.
கோழைகள், நடைமுறைக்கு எதிரான செயல்களை செய்பவர்கள்.
பேராசை, மகிழ்ச்சி, பயம், வருத்தம், மன எழுச்சி இவற்றால் அடிக்கடி அல்லல்படுபவர்கள்.
மூளையில் அடிபடுவது.
மனோவாஹ நாளங்கள் எண்ணங்களை கொண்டு செல்பவை. இவை கோபம், துக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மனோ வியாதி ஏற்படும்.
சரிவர உடலை பராமரிக்காததாலும், தவறான உணவுகளை உட்கொள்ளுதல்.
சிகிச்சை முறை
முதலில் உடலுக்கு எண்ணை ‘பதமிட’ வேண்டும். எண்ணை பசையினால் உடல் வழ வழப்பாக வேண்டும். பிறகு கழிவுப் பொருட்களின் வெளியேற்றம். இது வாதத்தால் வரும் உன்மத்ததிற்கு. கப, பித்த கோளாறுகளுக்கு எண்ணை சிகிச்சைக்கு பின், வாங்கி மற்றும் பேதியை உண்டாக்கி கழிவுப் பொருட்களை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். எண்ணையற்ற எனிமா பிறகு கொடுக்க வேண்டும். அப்படியும் தோஷங்கள் ஏறுமாறாகவே இருந்தால் இந்த சிகிச்சையை திரும்பவும் செய்யவும். ஆயின்மென்ட், மசாஜ், மூலிகை புகை, நெய்யை உள்ளுக்கு கொடுத்தல், இவை மனத்தை சாதாரண நிலைக்கு கொண்டு வரும்.
இவற்றின் பிறகு நிருஹ பஸ்தி (மூலிகை கஷாயம் குதம் வழியே செலுத்துதல்), ஸ்நேக பஸ்தி (மூலிகை தைலம் குதம் வழியே செலுத்தப்படுதல்) சிரோ விரேசனம் (மூக்கின் வழியே மருந்துகளை செலுத்தி மூளை, கழுத்து இவற்றை சுத்தீகரித்தல்) செய்யப்படும்.
சரக மனநோய்க்கு, பல நெய்யால் ஆன மருந்துகளை குறிப்பிடுகிறார்.