ஆடையைக் கிழித்துக் கொண்டு தலை விரிகோலமாகத் தெருவில் அலைந்து திரிபவர்கள் மட்டுமே மனநோய் கொண்டவரல்லர். வாழ்க்கையில் ஏற்படும் எத்தனையோ துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் இவற்றால் பாதிக்கப்பட்டு மனமுடைந்து மனமாற்றத்துடன் நடப்பவரும் மனநோய் படைத்தவரேயாவர்.
மனநோய் பற்றிய ஏராளமான மூடநம்பிக்கைகள் தொன்று தொட்டு நம் சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கின்றன. அவற்றுள் முதன்மையானது, மனநோய்க்குக் காரணம் பேய், பிசாசு, பில்லி சூன்யம் முதலியன என்ற தவறான அபிப்ராயமே ஆகும். இதன் காரணமாக மனநோய் மருத்துவரிடம் செல்லாமல் மந்திரவாதிகளிடமும், பூசாரிகளிடமும், கோடாங்கிகளிடமும், கோவில்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கே மேலும் பற்பல துன்பங்கள், பணவிரயம், பொருள் விரயம் தவிர காலமும் கடந்து நோய் முற்றி விடுகிறது. நோய் முற்றிய நிலையில் உளவியல் மருத்துவரிடம் கொண்டு செல்லும் போது சிகிச்சைக்குப் பிறகும் முழுப் பயன் கிடைப்பதில்லை.
நாமனைவரும் மனம் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறோம். ஆனால், மனம் என்றால் என்ன? அது நம்முடலில் எங்கே இருக்கிறது? சிலர் தங்களது மார்பைத் தட்டுகிறார்கள். சிலர் தங்களது தலையைக் காட்டுகிறார்கள். ஆனால் அதுவல்ல மனம், நம்முடைய மூளையின் செயல் திறனையே மனம் என்று குறிப்பிடுகிறோம். உடலையும் உயிரையும் இணைக்கும் கருவியே மனம். நம் செயல்கள் யாவற்றிற்கும் மூல காரணம் மனமே. இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இருப்பிடமாக அமைவது மனமே.
மனத்தின் சக்தி அனுமானிக்க இயலாததாகும். மனத்தின் பலத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் எப்படி எப்படி நம்முடைய மனதைப் பயன்படுத்துகிறோமோ அதைப் பொருத்துத் தான் நம் மனதின் சக்தி அமைகிறது. மனத்தின் சக்தியால் ஆக்கவும் செய்யலாம். அழிக்கவும் செய்யலாம். மனத்தின் நலத்தைப் பொருத்துத் தான் வாழ்வில் இன்பமும், துன்பமும் ஏற்படுகின்றன. மனத்தின் நலக்குறைவு தோன்றும் போது மன நோய்கள் உண்டாகின்றன. மன நோயின் அளவு அதிகமாகும் போது மனிதன் தன் சுயநிலையை இழக்கிறான்.
மனநோயும் ஏனைய உடல் நோய்கள் போன்றதே ஆகும். ஒருவனுக்குக் காய்ச்சலோ, ஆஸ்த்துமாவோ, போன்ற நோய்களோ, புற்றுநோயோ வந்தால் சமூகம் அவனை வேறுபடுத்துவதில்லை, இழிவாகப் பார்ப்பதில்லை, ஆனால் ஒரு மனிதனுக்குச் சிறிது மனக்குழப்பம் ஏற்பட்டால் கூட மற்றவர்கள் ஏதேனும் நினைத்து விடுவாரோ என அஞ்சி வெளியே சொல்வது இல்லை, மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்வதில்லை, சமுதாயம் அக்குடும்பத்தை ஒதுக்குகிறது.
மனநோய் வரக் காரணங்கள்
உடல் அமைப்பு – மூளை, நரம்பு மண்டலம், மூளையில் சுரக்கும் சில கெமிக்கல்கள் இவைகளில் மாறுதல்கள் ஏற்படும் போது மனநோய் வரும்.
பரம்பரை – (Genetics) பெற்றோரில் யாராவது ஒருவருக்கு மனநோய் இருப்பின் குழந்தைகளுக்கும் அதுவர வாய்ப்புண்டு (4 சதவீதம்), இருவருக்குமே மனநோய் இருப்பின் அவ்வாய்ப்பு அதிகப்படும் (14 சதவீதம்).
குடும்பத்தின் குறைபாடுகள் – குழந்தை வளர்ப்பில் பெற்றோரின், குறிப்பாகத் தாயின் தவறுகள் மனநோய் வருவதற்கான முக்கியமான ஒரு காரணமாகும். மிகுந்த கட்டுப்பாடுகளுக்கிடையே வளர்ந்தாலும், அல்லது எவ்வித அக்கறையுமின்றி வளர்க்கப்பட்டாலும், தாய் அற்ற நிலையில் குழந்தையின் ஆரம்ப வளர்ச்சிப் பருவம் அமைந்தாலும் பிற்காலத்தில் அக்குழந்தைக்கு மனநோய் வர வாய்ப்புண்டு. வளரும் பருவத்தில் பெற்றோரின், குறிப்பாகத் தாயின் அன்பும், அரவணைப்பும் அவசியம் தேவை. சதா சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் குடும்பங்கள், தாய் தந்தையருக்கு இடையே ஒற்றுமை இன்மை, விவாகரத்து, சரிவர மன பக்குவம் இல்லாத பெற்றோர் ஆகிய பல காரணங்களால் சீர்குலைந்த குடும்பச் சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் மனநோய் வர வாய்ப்புண்டு.
சமூக, பொருளாதாரக் குறைகள் – மனநோய் வருவதற்கு வறுமை ஒரு முக்கிய காரணமாகும். அது தவிர அதிக வேலைப்பளு, வேலையில் திருப்தியின்மை, பதவி உயர்வு கிட்டாமை, பதவி நீக்கம், கட்டுப்படுத்த முடியாத செலவினாங்கள், அதிகக் குழந்தைகளைப் பெறுதல், அடிக்கடி இடமாற்றம் போன்ற பல்வேறு காரணங்களாலும் ஒரு மனிதனுக்கு மனநோய் வரலாம்.
பிற காரணங்கள் – இவை தவிர உறவினர், நண்பர்களது திடீர் மரணம், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள், வேலையின்மை, தனிமை போன்றவையும் மனநோய் ஏற்படக் காரணங்களாகும். மேலும், உடலில் சுரக்கும் சுரப்பிகளில் (Harmones) மாற்றங்கள், குழந்தைப் பேறு, உடல் தளர்ச்சி, வைட்டமின் சத்துப் பற்றாக்குறை போன்றவைகளும், வலிப்பு நோயும், தலையில் ஏற்படும் காயங்களும் மனநோய்க்கு காரணமாக அமைகின்றன. கடைசியாக மது, கஞ்சா, அபின் மற்றும் போதை மாத்திரைகளைத் தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தினாலும் மனநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
மேற்கூறிய பலவிதமான காரணங்களால் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைச் சமாளிக்கும் மனப்பக்குவம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒவ்வொருவருடைய மனநிலையின் அமைப்பைத் பொறுத்தும் மனோ உறுதியைப் பொறுத்துமே அவரது மனநலம் அமைகிறது. இத்தகைய மன உறுதியற்றோர் தோல்வியைத் தழுவி எண்ணத்திலும், உணர்ச்சியிலும், செயலிலும் மாறுபாடு ஏற்பட்டு, குழப்பமடைந்து மனநோய்க்கு ஆளாகின்றனர்.
மனநோயின் அறிகுறிகள்
சிந்தனையில் குழப்பங்கள் – மனநோய் உள்ளவரது சிந்தனை அவரது அறிவிற்கும் அனுபவத்திற்கும் சம்பந்தமில்லாததாக இருக்கும். பெரும்பாலும் கற்பனை உலகத்திலேயே இவர்கள் சஞ்சரிப்பார்கள். கூறும் விஷயத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பிருக்காது. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் போது அதை விட்டு விட்டு வேறு ஒன்றைப் பேசுவார்கள். திடீரெனப் பேச்சை நிறுத்திவிட்டு அமைதியாய் இருப்பர். இது தவிர ஒரு தினுசாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
சிந்தனையில் அகற்ற முடியாத போலி நம்பிக்கைகள் (Delusions) ஏராளமாக உருவாகும். தன்னைப் பிறர் துன்புறுத்தவோ, கொல்லவோ முயற்சிப்பதாக நம்புவர். தன்னால் எதையும் சாதிக்க முடியும். தான் மிகவும் சக்தி வாய்ந்தவன் என நம்புவர். தன்னைப் பிறர் அவதூறாகப் பேசுவதாகவும், கெட்ட நோக்கத்துடன் பார்ப்பதாகவும் நம்புவர். சிலர் தாங்கள் மிகவும் கெட்டவர்கள், பாவம் செய்தவர்கள், ஆகவே தாங்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என எண்ணுவர், சிலர் தங்களது மனைவியோ, கணவனோ நடத்தைக் கெட்டவர் எனக் கூறுவர், தமது உணவில் விஷம் கலக்கப்படுகிறது என்றும், எதிரிகள் தமக்குச் செய்வினைகள் செய்து கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்றும் கூறுவார்கள். எதற்கெடுத்தாலும் சந்தேகம் உடையவர்களாக நடந்து கொள்வார்கள். சிலர் தேவையின்றி அளவுக்கு அதிகமாக அர்த்தமின்றிப் பய உணர்வு கொண்டவர்களாயிருப்பர். சிலருக்கு எவ்வளவு முயன்றாலும் மனதில் கெட்ட எண்ணங்களும், உணர்ச்சிகளும் தோன்றி கொண்டிருக்கும்.