மனத் தொய்வை மாற்ற

Spread the love

Mental Depression என்ற சொல்லுக்கு மனத்தொய்வு, மனச்சோர்வு, மன வாட்டம், மனத் தளர்ச்சி என்று பல பொருள்கள் சொல்லலாம். நடைமுறை வாழ்க்கையில் நாம் அனைவருமே மனத்தொய்வு அல்லது சோர்வினால் பாதிக்கப்படுகிறோம். கவலையும், மனத்தளர்ச்சியும் மனித வாழ்க்கையோடு இணைந்தவைகளே என்றபோதிலும் மாறாத மனத்தொய்வுக்கு ஆட்படுகின்ற போது அது ஒரு உளம்சார் நோயாக மாறுகிறது, (Psychogenic). வாழ்வில் தொல்லைகளும் துன்பங்களும் எதிர்ப்படுகின்ற போது மனம் வாட்டமுறுவது இயற்கை, மாறாக என்றோ நடந்து முடிந்து போனதை எண்ணியோ, அல்லது எப்போதோ வரப்போகின்ற இடர்ப்பாட்டை எண்ணியோ எந்த நேரமும் உள்ளம் சோர்ந்திருப்பது ஒரு மனநோய்.

மனத் தொய்வினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற பலரது கவலைகள் கற்பனையான அதீதமான சிந்தனையால் ஏற்பட்டவைகளே. தக்க காரணம் எதுவுமின்றி தமக்குத்தாமே ஏற்படுத்திக் கொண்ட எண்ணச் சுமைகள். இதை எளிதாக மாற்ற முடியும். இம்முறையை அல்லது என்று உளவியலார் கூறுவர்.

முதல் நிலை

கவனியுங்கள் (Listen)

நமது எண்ணங்களே நம்மை ஆட்சி செய்கின்றன. நமது எண்ணங்களைச் செம்மைப் படுத்திச் சீராக்குவதன் மூலம் நம்மையே நாம் மாற்றிக்கொள்ள இயலும். இதைச் செய்யத் தொடங்கியதுமே நம்மையறியாமலே நம்முடைய சிந்தனையின் மீதும் செயல்பாடுகளின் மீதும் நமக்கு ஒரு கட்டுப்பாடு வந்து விடுகிறது.

ஏதோ ஒரு அழுத்தமான உள் ஒலி (Inner Voice) உங்கள் மனதிற்குள் எழுந்து உங்களை அச்சுறுத்திக் கவலைப்படத்தக்க செய்திகளைச் சொல்வது போல் கேட்கிறதா? அதை எண்ணிக் கவலைப்பட்டு மனம் ஒடிந்து போகிறீர்களா? அது என்ன ஒலி என்று கேளுங்கள். அது என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துகிறதென்று பாருங்கள். குற்றச்சாட்டா, பச்சாதாபமா, பயமுறுத்தலா என்று இனங்கண்டு கொள்ளுங்கள். அவ்வார்த்தைகளை உரக்க சொல்லிப் பாருங்கள்

இரண்டாம் நிலை

அடிக்கோடிடுங்கள்

நான் ஒரு உதவாக்கரை / நான் அதிர்ஷ்டமற்றவன் என்று உங்கள் உள்மனது ஒலிக்கும் போது உங்களது பெருமித உணர்வைச் சிதைக்கும் அந்தத் தீய சொல் எதுவென்று பாருங்கள். உதாரணமாக, மேலே காணும் சொற்றொடரிலுள்ள உதவாக்கரை / அதிர்ஷ்டமற்றவன் என்ற சொல். இந்தச் சொற்றொடர் உங்களை நம்பிக்கையிழக்கச் செய்கிறது.

உங்கள் தற்போதைய எண்ணம் வெளிப்பார்வைக்கு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் தீவிரமான செயலாக்கத்திற்குப் பயன்படுவது நீங்கள் சிறு குழந்தையாக இருந்த போது உங்கள் உள்ளத்தில் படிந்த ஒரு எண்ணமேயாகும்.

எடுத்துக்காட்டாக ஒரு நண்பரை சென்று பார்க்கும்போது என்னப்பா, சுகமாக இருக்கிறாயா என்று உங்கள் வாய் கேட்கிறது. ஆனால் உள்மனதில் நான் வந்தது இவனுக்குப் பிடிக்க வில்லை என்ற ஒலி கேட்கிறது. மனத் தொய்வு உள்ளவர்களிடம் காணப்படும் குறைபாடே இது தான்.உங்களது உள் மனதே உங்களை குறைத்துப் பேசும்போது உங்களுக்கு நரம்புத் தளர்ச்சியோ அல்லது பதட்டமோ ஏற்படுகிறது.

உங்கள் செயலின் வெற்றி உங்கள் வாயிலிருந்து வரும் சொல்லில் இல்லாமல் மனத்தில் எழுகின்ற ஒலியைப் பொருத்தே அமைகிறது. நான் கணக்குப் பாடத்தில் மட்டம் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும்போது அந்த மட்டம் என்ற சொல் உங்களது தன் மதிப்பை மட்டம் தட்டுகிறது.

மூன்றாம் நிலை

நிறுத்துங்கள்

ஸ்டாப் என்று சொல்வது எளிது. செய்கையில் கடினம். இருந்தபோதிலும் முயன்றால் முடியும், நிறுத்து என்ற ஒரு வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மதிப்பைக் குறைக்கின்ற வகையிலோ, உங்கள் ஆர்வத்தைத் தணிக்கின்ற வகையிலோ உங்களை நம்பிக்கை இழக்கச் செய்கின்ற வகையிலோ ஒரு வார்த்தை, ஒரு ஒலி, ஒரு சொல்லை உங்கள் உள்மனது சொல்லத் தொடங்கும்போது நிறுத்து என்று சொல்லி அதை அடக்குங்கள். திடம் என்ற இரண்டாவது சொல்லை சொல்லப்பழகுங்கள். திடத்தோடு செய்வேன், திடத்தோடு சொல்வேன், திடம்பட நடப்பேன் என்று சொல்லுங்கள். உங்களுடைய எதிர்மறைச் சிந்தனைகள்தான் உங்கள் எதிரி. நீங்கள் வெற்றி கொள்ள வேண்டியது அதைத்தான்.

நான்காம் நிலை

மாற்றுங்கள்

தீய சொற்கள், நம்பிக்கையைத் தகர்க்கும் சொற்கள் உள் மனதில் எழும்போது நிறுத்து என்று சொல்லப் பழகிய பின்னர் எதிர்மறையான எண்ணங்களை உடன்பாடான சொற்களால் மாற்றுங்கள். உதாரணமாக, எனக்கு கணக்கே வராது என்று உள்மனது ஒலிக்கத் தொடங்கியதும் நிறுத்து நிறுத்து நிறுத்து என்று சொல்லப் பழகிவிட்ட நீங்கள் எனக்கு கணக்கு வரும். எனக்கு கணக்கு நன்றாக வரும் என்ற உடன்பாடு வாக்கியத்தை சொல்லப்பழகிக் கொள்ளுங்கள்.

ஐந்தாம் நிலை

சீரமையுங்கள்

நீங்கள் எப்போதாவது களைப்புற்றுச் சோர்வாகப் படுத்திருந்தபோது வா வெளியே போய்விட்டு வருவோம் என்று உங்களுக்கு வேண்டிய யாராவது கூறியிருக்கிறார்களா? அப்போது உங்கள் மனநிலை மாறுபட்டு. உற்சாகத்துடன் எழுந்திருந்து முகம் கழுவி, உடைமாற்றிக் கொண்டு புறப்பட்டதில்லையா? அதற்குப் பெயர்தான் சீரமைப்பு (Re-orient)

உங்களது கற்பனையை, சிந்தனையை, அணுகு முறையைச் சீரமையுங்கள். உங்களுடைய மனோபாவத்தை, செயல்முறையைச் சீரமையுங்கள், குறிப்பாகச் சொல்லப்போனால் இதற்கு முன் நான்காம் நிலையில் சொல்லப்பட்ட மாற்றுங்கள் என்ற சொல்லுக்கும் சீரமையுங்கள் என்ற சொல்லுக்கும் வேறுபாடு அதிகமில்லை. இருப்பினும் சீரமைப்பு என்பது உங்கள் சிந்தனை, செயல், வாழ்க்கை அனைத்திலும் விரவிச் செயல்படக் கூடிய ஒன்று.

உங்களைப் பற்றிய உயர்வான செய்திகளை, சிறப்பான திறமைகளை நீங்கள் வெற்றிகண்ட இரக்கங்களை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வாருங்கள். உங்களை உயர்த்துகின்ற எண்ணங்களுக்கு உள்ளத்தில் இடங்கொடுங்கள். தாழ்த்துகின்ற எண்ணங்களை துரத்திவிடுங்கள்.

உண்மையிலேயே உங்களை ஒருவர் பாராட்டியதை நினைவுக்கு கொண்டு வாருங்கள்,

உண்மையிலேயே உங்களுக்கு எது முக்கியமானதோ அதைப் பற்றி எண்ணுங்கள்.

ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஊட்டக்கூடிய செயல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.

இவற்றின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளுங்கள்.

உங்களது எண்ணங்களின் விளைவாகவே முன்பு நீங்கள் வருத்தமுற்று மனம் சோர்ந்து இருந்தீர்கள். இப்போது உங்களின் உத்வேகமான, புதிய உடன்பாடான எண்ணங்களால் மகிழ்வோடும் பொலிவோடும் இருப்பீர்கள்.


Spread the love