வந்தாலும், வராவிட்டாலும் பெண்களுக்கு தீராத பிரச்சனை

Spread the love

பெண்ணாக பிறந்தால் மாதம் ஒரு முறை வயிற்றைப் புரட்டி வலிக்கும் மாதவிடாய் ஒரு பக்கம் பயமூட்டுகிறது.அதிகமான இரத்தப் போக்கு ஏற்பட்டாலும் பிரச்சனை தான்… வராமல் தள்ளிப் போனாலும் பிரச்சனை தான்.இது மட்டுமின்றி வெள்ளைப்படுதல் இன்னுமொரு பிரச்சனையாக அமைகிறது.

இப்போதைய டிஜிட்டல் வாழ்க்கையில் நாம் மாற்றிக் கொண்ட வாழ்க்கைச் சூழல், நேரம் கெட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளுதல், உடலுக்கு தீங்கு தரும் வெள்ளை உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், பிட்சா, பர்கர், ஃபாஸ்ட் ஃபுட் என்று உணவு பழக்கத்தையும் மாற்றிக் கொண்டதுடன் எப்பொழுதும் ஓய்வின்றி வேலை பார்த்தல், பணிச் சுமை, சொந்த காரணங்களினால் ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் காரணமாக இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு குறிப்பாக 20 முதல் 35 வயது இடையில் உள்ளவர்களுக்கு மாதவிலக்குப் பிரச்சனைகள் ஏராளமாகி விட்டன. மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளை படுதல் போன்றவைகளுக்கு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் எண்ணிலடங்கா மூலிகைகள் மருந்தாக நமக்கு பயன்படுகின்றன. அவற்றில் ஒரு சில மருத்துவ சிகிச்சைகளை தெரிந்து கொள்வோமே!

1.ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளை சரி செய்ய கருஞ்சீரகம் 25 கிராம் அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்து கொண்டு அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை, மாலை என இரு வேளை உட்கொண்டு தண்ணீர் அருந்தி வரவும்.

2.சதக்குப்பை 100 கிராம் அளவு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) எடுத்து பொன் நிறமாக வறுத்து பொடி செய்து கொண்டு இதோடு 100 கிராம் பனை வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளவும். இதனை நெல்லிக்காய் அளவு எடுத்து தினசரி காலை, மாலை இரு வேளை உட்கொண்டு நீர் அருந்தி வரவும்.

3.மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, வயிற்றுப் புண் வந்து சிரமம் தருவதுண்டு.இதற்கு மிகவும் எளிமையான மருந்து குப்பைமேனிக் கீரை தான்.குப்பை மேனிக் கீரையை எடுத்து நீர் விட்டு அலசி சுத்தம் செய்து வேக வைத்து கடைந்து சாப்பிட்டு வர வேண்டும்.

4.அதிக இரத்தப் போக்கு ஏற்படுகிறதா?நாயுருவி இலைகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொண்ட பின்பு இடித்து 100 மி.லி.அளவுக்கு சாறு எடுக்கவும்.மேற்கூறிய சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து தினசரி காலை வேளை மட்டும், வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.மேற்கூறிய சாற்றை அருந்திய பின்பு இரண்டு மணி நேரம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும்.

5.ரத்தபோக்கு நிறுத்துவதற்கு மேல் தோல் நீக்கிய நாவல் பட்டை 50 கிராம் அல்லது அதே அளவு உள்ள அத்திப்பட்டை எடுத்து தயிர் சேர்த்து அரை டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய சாற்றை வெறும் வயிற்றில் காலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தி வர வேண்டும்.

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மலை வேம்பு தழை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து அரை டம்ளர் சாறு வருவதற்கு ஏற்றார் போல இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.மேற்கூறிய சாறை தினசரி காலையில் மட்டும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் வரை அருந்தி வர வேண்டும்.

தாமதமான மாதவிடாய் ஒழுங்காக வருவதற்கு

பெருந்துத்தி இலை 5 எண்ணம் எடுத்துக் கொண்டு, அதனுடன் மிளகு 5 எடுத்துக் கொண்டு வெறும் வயிற்றில் காலை வேளை மென்று உட்கொள்ள வேண்டும். மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட பலன் கிட்டும்.

மாவிலங்கப் பட்டையை எடுத்து மை போல அரைத்துக் கொண்டு நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொண்டு தினசரி காலை வேளையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட தாமதமான மாதவிடாய் தடையின்றி ஏற்படும்.

வல்லாரை இலைச் சூரணம் கால் ஸ்பூன் எடுத்து நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வரலாம்.

கல்யாண முருங்கை இலைச் சாறு 10 மி.லி. எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.

வெள்ளைப்படுதல் தீர

வால் மிளகு 10 கிராம் எடுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் 5 தேக்கரண்டி தேன் கலந்து அரைத் தேக்கரண்டி அளவு தினமும் காலை, மாலை உட்கொண்டு வர வேண்டும்.

நன்கு காய்ந்த அசோகப் பட்டையை எடுத்து இடித்து தூள் செய்து கொள்ளவும். இத்தூளில் 10 கிராம் அளவு எடுத்து 200 மி.லி.நீரில் இட்டுக் காய்ச்ச வேண்டும்.100 மி.லி.யாக கிடைக்கும் வண்ணம் சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.ஆறின பின்பு இதில் 25 மி.லி.அளவு என தினசரி காலை, மாலை இருவேளை குடித்து வர வேண்டும்.

ஆனை நெருஞ்சில் இலைகள் 5 எண்ணம் எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அலசும் பொழுது கொழகொழவென்று இருக்கும். இதனை காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அருந்தி வர வெள்ளைப்படுதல் நீங்கி விடும்.இதனை அருந்திய பின்பு இரண்டு மணி நேரம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும்.உணவில் புளி சேர்க்கக் கூடாது.புளிப்பு வேண்டுமெனில் தக்காளியைச் சேர்த்துக் கொள்ளவும்.

அத்திக்காயை துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்புடன் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட்டு வரலாம்.


Spread the love