மாதவிலக்கா ? விலக்க வேண்டியவை, விலக்க கூடாதவை!

Spread the love

அந்த நாட்களா பெண்கள் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பெண்ணாய் பிறந்து விட்டால் பூப்பெய்துவது என்பது மிக இன்றியமையாதது. அதன் தொடர்ச்சியாக மாதா மாதம் மாதவிடாய் என்ற ஒரு கட்டத்தை கடந்து தான் வரவேண்டும். பெண்மைத்தன்மையை உணரச்செய்து, தாய்மை அடைய உடலளவிலும் மனதளவிலும் தயார் செய்யும் முதல் படி தான் இந்த மாதவிடாய். பூப்படைவதிலிருந்து  மாதவிடாய் நிற்கும் காலம் வரை மாதா மாதம் மாதவிடாயை கடந்து தான் வர வேண்டும். அதுதான் ஒரு பெண்ணின் ஆரோகியத்திற்கு மையமாக அமைகிறது. மாதவிடாயை வைத்தே ஒரு பெண்ணின் தாய்மை அடையும் திறனை அறிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் என்பது என்ன?

பூப்படைந்த பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் முதிர்ந்த ஒரு கருமுட்டை சினைக்குழாய்க்கு வந்தடையும். இரு சினைப்பைகள் இருப்பினும். ஒரு மாதம் ஒரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை மட்டுமே வெளிவரும், அடுத்த மாதம் மற்றொரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளிவரும். கருப்பையை விட்டு வெளியேறும் முதிர்ந்த கருமுட்டையானது ஆணுடைய விந்துடன் இணைந்தால் கருப்பையில் தங்கி குழந்தையை உருவாக்கும். கருவின் வளர்ச்சிக்காகக் கருப்பையின் உட்புறத்தில் ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறை சிகப்பு கம்பளம் விரித்தாற்போல் மாதா மாதம் உருவாகும். இந்த ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறையும் கருவுறாதபோது கருமுட்டையுடன் சிதைந்து கருப்பை வாய் வழியே வெளியேறிவிடும். இந்த உதிரப்போக்கையே மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்கிறோம்.

முதன்முதலாய் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் இந்த நிகழ்வையே சமைதல்,பூப்பெய்தல், பருவமடைதல், வயதிற்கு வருதல் என்று பலவாறு அழைக்கிறோம். இந்த நிகழ்வானது 10-ல் இருந்து 16 வயதிற்குள் நிகழ்கிறது. 18 வயது நிரம்பியும் ஒரு பெண் பருவமடையவில்லை என்றால் மகப்பேறு மருத்துவரை கட்டாயமாக சந்தித்து ஆலோசிப்பது அவசியம். மாதவிலக்கு 3-6 நாட்கள் வரை நீடிக்கலாம். உதிரப்போக்கு நாட்கள் அளவிற்கு அதிகமானாலும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும்.

மாதவிலக்கும் ஹார்மோன்களும்

ஒரு பெண் பருவமடைவதற்கும், அவளுடைய இனப்பெருக்க உறுப்புகள் சரிவர செயல்பட ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது. உடலின் வளர்ச்சியையும் , செயல்பாட்டையும் ஹார்மோன்களே கட்டுப்படுத்துகின்றன. மாதா மாதம் முதிர்ச்சியடைந்து வெளியாகும் முட்டை ஆணுடைய விந்துடன் இணைந்து கருவாக வளர்ச்சியடையத் தேவையான ஏற்பாடுகளையும் இந்த ஹார்மோன்களே செய்கின்றன. 45 வயதை கடக்கும் பொழுது இந்த ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் திறனில் படிப்படியாக குறைகிறது. ஒரு கட்டத்தில் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவதும் நின்றுவிடுகிறது. மாதவிலகிலிருந்து விலகும் இந்த நிலையை தான்  ‘மெனோபாஸ்’ (Menopause) என்கிறோம்.

மாதவிலக்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டியது

சுத்தமான தண்ணீரில் தினசரி குளிப்பது அவசியம். மேலாடையை மாற்றவில்லைஎனினும்  உள்ளாடைகளை அவசியம் மாற்ற வேண்டும். தேங்கிய நீர் நிலைகளான ஆறு , ஏரி, குளம், குட்டை, கிணறுகளில் குளிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். கருப்பையின் வாய்ப் பகுதி திறந்து இருக்கும், பொழுது சுத்தமான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். பிறப்புறுப்பை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும் இல்லையெனில் கிருமிகள் பிறப்புறுப்பை பாதிக்க வழிவகுக்கும். உள்ளாடைகள் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம்.. ரத்தப்போக்கை உறிஞ்சுதற்கு தகுந்த நாப்கின்களை பயன்படுத்துத வேண்டும். துணிகள் பயன்படுத்தினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு நிச்சயம் மாற்றி விட வேண்டும். அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது மாற்றி விட வேண்டும்.

இந்த நேரத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உளைச்சலையும் தருகிறது அதனால் மிகவும் கடினமான வேலைகளை செய்யக்கூடாது. வேலையே செய்யாமல் ஒரே இடத்தில் இருக்கவும் கூடாது. அதிக சிரமமான  எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது நல்லது.

வேளா வேளைக்கு சத்தான உணவு உண்ண வேண்டும் உணவு உண்ணாமல் இருக்கக் கூடாது. தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவதன் மூலமே ரத்த போக்கினால்  உடல் இழக்கும் சத்தினை உங்களால் திரும்பப் பெற முடியும்.

உடல் சுத்தம் மிக மிக முக்கியம். மேலும் பெண்ணை பெண்ணாய் உணரச்செய்யும் இது ஒரு புனிதமான நிகழ்வு, அதனால் அதை ஒரு சாபமாக கருதி வெறுப்பது கூடாது. சரியான பராமரிப்பு மற்றும் முறையான மனப்பாங்குடன். இந்தக் காலகட்டத்தை மிகவும் எளிதாகக் கடந்து விடலாம்.

மாதவிடாய் காலத்தில் எதற்கு எடுத்தாலும் எரிந்து விழுவது சகஜமான ஒன்று ஆனால் அதை தவிர்த்து நல்ல இசை கேட்பது , கை வினை வேலைகள் செய்வது போன்றவற்றின் மூலம் மன நிலையை சீர் செய்யலாம்.

மாதவிலக்கின் போது  உணவு பிடிக்கவில்லை என்றால் பழங்கள் , பழச்சாறு. சூப் வகைகள் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

மாதவிலக்கின் போது இனிப்புகள், சத்தான உணவுகள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் உதிரப்போக்கு அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பல பெண்களுக்கு உள்ளது. இது முற்றிலும் தவறு.

ரத்த இழப்பு ஏற்படுவதால் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், கீரை வகைகள் மற்றும் சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.


Spread the love