பெண்களும் மலர்களும் ஒரே ஜாதி தான் என்று கவிஞர்கள் கவிதையில் உணர்த்துவதற்கு பொருத்தம் ஒன்று உள்ளது. வசந்த காலத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். பலன் தரும் காலத்தில் பலனைத் தந்து விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளும். அது போலத்தான் பெண்கள் தங்கள் இளம் வயதில் பூப்படைந்து மத்திய வயதில் தீட்டு நிற்கும் காலத்தைத் தான் அவர்கள் ஓய்வெடுக்கும் காலமான மெனோபாஸ் என்றழைக்கிறோம். மாதவிலக்கு முற்றிலும் நின்று போகும் நிலையை அவ்வாறு கூறுகிறோம்.
மகளிராக பிறந்த அனைவருக்கும் நிகழும் இயற்கையான ஒரு நிகிழ்வு இது. மெனோபாஸ் காலத்திற்கு முந்தைய ஒரு சில ஆண்டுகளிலிருந்து அதாவது 40 வயதில் ஆரம்பித்து நான்கு அல்லது 10 வருடங்கள் வரை காணப்படும். ஒரு பெண்ணினுடைய உடல்வாகு, அவள் வாழும் இடத்தின் சீதோஷ்ண நிலை, அவள் இனம், வாழ்ந்த விதம், அவள் எந்த வயதில் ருதுவானாள்? புருஷ சுகம் அனுபவித்து வந்த அளவு, எத்தனை முறை கருவுற்றாள் என்பதையெல்லாம் பொறுத்து அவள் மாதவிடாய் ஆகும் சக்தியை இழப்பதைக் கூறலாம்.
மாதவிடாய் நிற்றல் என்பது இக்காலத்தில் 35, 36 வயதிலேயே பெண்களுக்கு ஆரம்பித்து விடுகிறது. 50 வயது 52 வயதில் மாதவிடாய் நிற்றல் ஒரு சில நாடுகளில் காணப்படுகிறது. எவ்வித அறிகுறியும், நோய் அறிகுறியும் தோன்றாமல், உடல் ரீதியாக அல்லது உடலுறுப்புகள் இயங்காத நிலையிலும் வயதின் அடிப்படையில் அமையாத மாதவிடாய் நிற்றல் கண்டு இது உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை என்று எண்ணி மனம் கலங்க வேண்டியதில்லை. 4 மாதங்களிலிருந்து ஒரு சில வருடங்களாக ஏதேனும் உடல் நலம் குன்றி காணப்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியமாகும். ஆயுர்வேதத்தில் மெனோபாஸ் நிகழும் காலத்தை நசோநிவர்த்தி காலம் என்று அழைக்கப்படுகிறது. நசோ என்றால் மாதவிலக்கு, நிவர்த்தி என்றால் ஓய்வு பெறுதல், கால என்பது நேரத்தைக் குறிக்கிறது.
மெனோபாஸ் நேரத்தில் என்ன நேரிடுகிறது?
மாத விலக்காகும் பொழுது சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிரப்பெருக்கு ஏற்படுகிறது. இவ்வாறு அதிக இரத்தப்பெருக்கு காணப்பட்டால், அது புற்று நோய்க்கு அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெண்ணின் சினைப்பை மெலிவுற்று, சக்தி இழந்து முடங்கிவிடுகிறது. அதன் பின்னர் படிப்படியாக கர்ப்பப்பை, பெண்குறி, பெண் உறுப்புகள் சுருங்கி குன்றி விடுகின்றன. இந்த உறுப்புகளில் மாற்றம் நிகழ்வதற்கு முன்னர், அந்த மாற்றத்துக்கு வேண்டிய முன்னேற்பாடுகள் இதற்கு முன்னரே ஆரம்பமாகி விடுகிறது.
உடலில் உள்ளே அமைந்திருக்கும் சுரப்பிகளின் இரசாயனத் திரவத்தில் தான் முதலில் இந்த மாற்றம் ஏற்படும். இது இரத்தக் குழாய்களையும், நரம்புகளையும் பாதிக்கிறது. இரத்தித்தில் இருந்த உடல் வளர்ச்சிக்குரிய தாதுக்கள் குறைந்து மறைய ஆரம்பிக்கின்றன. தீட்டு நிற்கும் பருவத்தில் பெரும்பாலான பெண்களின் உடல் எடை குறைந்து விடும். தீட்டு நின்ற பின்னர் மீண்டும் இயற்கையான உடல் எடையை அடைகிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில், தைராயிடு சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பியிலும் ஏற்பட்ட மாறுதல் காரணமாக 30 சதவீத பெண்களுக்கு இடை, புட்டம் பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து பருத்துவிடுகின்றன.
இச்சமயத்தில் பெண்களுக்கு நரம்புத்தளச்சி, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி உள்ளவர்களுக்கு வாய்ப் பேச்சில் திக்குதல், குளறுதல் ஏற்படுவதுமுண்டு. இவர்கள் பாஸ்பரஸ் சத்து அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும். நரம்புகளைப் பலப்படுத்த உதவும் வைட்டடமின்கள் அடங்கிய உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். தோலின் மீது சூரியனின் கதிர்கள் பட்டால், அதிலுள்ள வைட்டமின்களை தோல் கிரகித்து நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது. சூரிய ஒளியில் ஓரு மணி நேரம் உடல் படுவது நல்லது.
கருப்பையில் நடைபெறும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உற்பத்தியானது சிறிது சிறிதாக குறையும் பொழுது கீழ்க்கண்ட அறிகுறிகளுக்கு காரணமாக அமைகின்றன.
ஒழுங்கற்ற மாதவிலக்கு
நீண்ட காலமாக இரத்தப் பெருக்கும், துர்நாற்றத்துடன் கூடிய மாதவிலக்கு நடைபெறும்.
குறிப்பிட்டுச் சொல்ல முடியாத முதுகுவலி
முதுகுப் புறத்தில் ஏற்படும் வலி. இடுப்பெலும்புக் கூட்டில் அமைந்துள்ள உறுப்புகள் சம்பந்தப்பட்ட நரம்புகள் எல்லாம் முதுகெலும்புடன் தொடர்புள்ளவை. தீட்டு நிற்கும் காலத்தில், இந்த நரம்புகள் அதிகம் வேலை செய்ய வேண்டியுள்ளதால் இரத்தத் தேக்கம் ஏற்பட்டு முதுகில் வலி ஏற்படுகிறது. இடுப்பு எலும்புக் கூட்டில் நோய் எதுவும் உண்டாகாமல் இருக்க மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. இக்காலக் கட்டத்தில் ஒரு சிலருக்கு அதிகமான இரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு முதலியவையும் ஏற்படும்.
தலைவலி
50 சதவீதம் பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் தலைவலி ஏற்படுகிறது. தலைவலி ஒரு பக்கமாக இருக்கலாம். நெற்றிப் பகுதியில், கழுத்து ஓரமாகக் கூட ஏற்படலாம். சாதாரண தலைவலி மருந்துகளை உபயோகித்தால் போதும்.
நெஞ்சுத்துடிப்பு
தீட்டு நிற்கும் பருவம் ஆரம்பமாகும் காலத்தில் சில பெண்களுக்கு நெஞ்சில் படபடப்பு, அல்லது மார்புக் குத்து மாதிரியோ ஏற்படும்.
அரிப்பு
கைகளில் ஒரு விதமான அரிப்பு ஏற்படலாம். சில சமயங்கள் கண்களிலோ, மூக்கிலோ அரிப்பு ஏற்படுவது போன்று தெரியும். இதற்கு காரணம் இந்தக் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் காரணமாக உடம்பிலே விஷ நீர் சேர்வதால் தான்.
உஷ்ணப் பாய்ச்சல்
இது ஒரு சில பெண்களுக்குத் தான் ஏற்படும். உடம்பின் சில பாகங்கள் மட்டும் உஷ்ணத்தால் கொதிக்கும். சில பகுதிகளில் திடீரென சில்லிட்டுப் போகும்.
மூத்திரப்பை எரிச்சல்
இந்தக் காலத்தில் ஏற்படும் நரம்புக் கோளாறுகளால் மூத்திரப்பையும் பாதிக்கப்படுகிறது. இடுப்பு எலும்புக் கூட்டில் உள்ள உள் உறுப்புகளால் மூத்திரைப் பைக்கு அழுத்தம் ஏற்படுவதாலும் மூத்திரப்பைக் கோளாறு ஏற்படும்.
மேலும் சில அறிகுறிகள்
உடல் வலி, உடல் உறுப்புகள் மரத்துப் போதல், அசதி, அதிக களைப்பு, வாந்தி, உணவு உட்கொள்ளும் பொழுது சுவை உணவு அற்றுப் போதல், அளவுக்கு அதிகமாக வியர்த்தல், தாழ்வு மனப்பான்மை, தன்னைப் பற்றி துக்கம் கொள்தல், மனநிலை மாறுபாடுஅடைதல், பதட்டம் கொள்வது, சிறுகுடல் சார்ந்த பிரச்சனைகள், அதிகமான அல்லது குறைவான பசி, அடிவயிறு பிரச்சனை, வயிற்றில் அமிலச் சுரப்புச் சிக்கல்கள், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, தூக்கம் வராமல் தவித்தல் அல்லது தூங்குவதால் ஏற்படும் தடைகள், மிருதுத்தன்மை அடைதல், மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு முன் தோன்றும் கடுமையான வலி அறிகுறிகள், உடலுறவில் நாட்டம் குறைதல், உடலுறவுக் காலங்களில் முழுவேகத்துடன் செயல்படுவது குறைதல், பெண் குறியில் உலரும் தன்மை, உடலுறவின் போது உராய்வின் காரணமாக பெண் குறியில் வலி ஏற்படுதல், இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் சிறுநீர் கசிதல், அடிக்கடி சிறு நீர் கழிக்கும் அவசர உணர்வு.
மெனோபாஸ் காலத்தில் மேற்கூறியவற்றில் ஒன்றோ அல்லது பல அறிகுறிகளினால் ஒரு பெண் பாதிக்கப்படலாம். வலி அறிகுறிகளின் பாதிப்பானது பெண்ணுக்குப் பெண் மாறுபடும்.
மாதவிலக்கு நிற்கும் காலத்திற்கு முன்பு என்ன சிசிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்? எப்பொழுது சிகிச்சை எடுத்தல் கூடாது?
மெமெனோபாஸ் காலகட்டம் எப்போது உருவாகிறது? அதன் அறிகுறிகள் என்ன என்ற விழிப்புணர்வானது நாம் அறிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயமாகும். நமது அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் உடல் வலிக்காக ரெகுலராக எண்ணெய் மசாஜ் போன்றவைகளை செய்வதன் மூலம் மேற்கூறிய அறிகுறிகள் குணம் பெறக் கூடிய நிலையிருந்தால் மருந்து சிகிச்சை தேவையில்லை. ஆனால் அளவுக்கு மீறிய வேர்வை உடலில் ஏற்படுவது, மன அழுத்தம், சோர்வு, அதிக அளவு இரத்தம் திட்டுத் திட்டாக வெளியேறுதல் போன்ற தீவிரமான அறிகுறிகள் பெற்றால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கண்டிப்பாக தேவை.
குடும்பத்தினரின் ஆதரவு அவசியம்
மெனோபாஸ் காலத்தை ஆரம்பிக்கும், கடக்கும் பெண்களுக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. குறிப்பாக கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் போன்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெண்ணின் உடல் நலத்திலும் மன நலத்திலும் சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்ணில் உடலில் ஏற்படும் ஹார்மோனின் சமநிலை மாற்றம் காரணமாக அவளது உடலும், உள்ளமும் மெனோபாஸ் காலத்தில் பாதிப்படையச் செய்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டு ஆறுதலாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்ள வேண்டும். சிறு சிறு குறைகளையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது
அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பு, உடற்பயிற்சி, அவசியம்
மெனோபாஸ் காலத்தில பெண்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள ஓரிரு செயல்களில் இறங்கலாம். இதற்கு அவர்கள் தங்களுக்கு பிடித்த சமையல் கலை, தையல், உடற்பயிற்சி, போன்றவைகளை மேற்கொள்ளும் பொழுது அவர்கள் உடல் நலமும் மன நலமும் ஆரோக்கியம் பெறும். புத்தகம் படித்தல், சமூகச் சேவையில் பங்கேற்றல், நண்பர்கள், உறவினர்களுடன் சந்திப்பு, உரையாடல், இசை கேட்டல், குவிஸ் போன்று மனதிற்கு வேலை தரும் பழக்க வழக்கங்களில் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளலாம்.
தினசரி அதிகாலை நடைப்பயிற்சி 15 முதல் 20 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம். வெளி அரங்கு விளையாட்டுகளில் கலந்து கொள்ளலாம். பொம்மை தயாரித்தல், பின்னல் வேலை, நெசவு, வடிவமைப்பு போன்ற பழக்கங்கள் உங்கள் உடலுக்கு போதுமான பலத்தை தரும். மனநலம் சீராக அமைய பிரணாயாமம், யோகா செய்வதால் மன அழுத்தம், மனம் பரபரப்பாக அலைபாய்வது போன்றவைகளை சரி செய்து கொள்ளலாம்.