நல்ல விஷயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்தி பார்ப்பது நமக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கும். நம்மில் பலர் கெட்டதை நினைத்தே புத்தி கெட்டுப் போவார்கள். அவர்களுடைய மன வீட்டில் தூசும், தும்பும், குப்பைகளுமாய் குவிந்து கிடக்கும். புதிதாக முயற்சி செய்கிற எந்த நல்ல பழக்கத்தையும் நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதுதான் அதன் முக்கியத்துவத்தையும், தேவையையும் அதிகப்படுத்தும். அந்தச் செயலை ஞாபகப்படுத்திக் கொள்வதை விட அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு செயல் பழக்கமாக மாறுவதற்கு ஆரம்ப காலங்களில் ஞாபகப்படுத்திக் கொள்வது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
ஒருவர் செய்த உதவியை நாம் நினைவுபடுத்தி பார்த்தால், ‘நமக்கு அவர் உதவினாரே.. நாம் அவருக்கு உதவ வேண்டாமா?, நமக்கு அவர் உதவியதைப் போல், நாம் மற்றவருக்கு உதவ வேண்டாமா? என்ற நல்ல சிந்தனை மேலோங்கும். மனசெங்கும் பூ மலரும்.
அடிப்படையில் நாம் அனைவரும் நல்லவர்களே. மனம் இருப்பதால்தான் மனிதன். நல்ல மனம் படைத்தவர்கள் சிறந்த மனிதர்கள். பகலிலேயே டூவீலரில் வருபவர் பகலிலேயே ஞாபக மறதியாக ஹெட்லைட் எரிய விட்டுக் கொண்டு வந்தால், ‘பகலிலியே லைட்டை போட்டுக் கொண்டு போகிறான் பார் பைத்தியக்காரன்’ என்று எண்ணி பேசாமல் போக மாட்டோம். லைட் எரிவதை சுட்டிக் காட்டி, அதை அணைக்கச் சொல்வோம். டூவீலர் ‘சைட் ஸ்டாண்டை’ எடுக்காமல் ஓட்டி வருபவரிடம் அதை எடுக்கச் சொல்லி அறிவுறுத்துவோம். ஸ்பீட் பிரேக்கரில் சிக்கி, விபத்துக்கு ஆளாகி, அடிபட்டு, காயம்பட்டால் நமக்கென்ன என்று சும்மா இருக்க மாட்டோம். ‘சைட் ஸ்டாண்டை எடுத்து விடுங்கள்’ என்று அவரிடம் சுட்டிக் காட்டுவோம். இப்படிச் செய்வதால் நமக்கு என்ன பலன்? அதிகபட்சமாக சிலர், ‘நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். பலர், புன்னகையாலேயே பாராட்டி விட்டு போவார்கள். இவ்வாறு செய்வது எல்லாம், பத்து காசுக்கு பிரயோசனப்படாமல் இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு உதவுவதுதானே மனித பண்பு. அந்த பண்பு நம்மிடம் நாளுக்கு நாள் மேலோங்கும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது தீமைக்கு மட்டுமல்ல. நன்மைக்கும் கூடத்தான். நல்லதையே நினைப்போம்! நல்லதையே செய்வோம்! நலமாக வாழ்வோம்.