தியானிப்போம்! வாழ்வாங்கு வாழ்வோம்!

Spread the love

எல்லா நாளும் முழு நிலவைப் பார்க்க முடியாது என்பது எவ்வளவு தூரம் உண்மையோ.. அதே போல் பிரச்சனை இல்லாத மனிதனை பார்க்கவே முடியாது. வாழ்க்கை என்றால் பிரச்னைதான். பிரச்சனைக்குள் சிக்கி.. பிரச்சனையில் இருந்து விடுபட்டு.. பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு.. மீண்டும் பிரச்சனைகளில் சிக்கி.. நீண்டு கொண்டே போகிறது மனித வாழ்க்கை.

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது எந்த தேதி என்று யாருக்கும் தெரியாது. அது தெரிந்தால்.. அந்த தேதி வரை தினமும் செத்து, செத்து பிழைத்துக் கொண்டிருப்பான். நடை பிணமாக உலவிக் கொண்டிருப்பான். மரண தண்டனை கைதிகளுக்கு கூட, தண்டனை நிறைவேற்ற கால தாமதம் ஏற்பட்டால், அவனை விடுதலை செய்ய வேண்டும் அல்லது மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம்.. எப்போ சாவு வருமோ என்று அவன் நித்தம் நித்தம் செத்து பிழைப்பதுதான்.

 இதெல்லாம் மனிதர்களுக்கு மட்டும்தான். சித்தர்களுக்கு அல்ல. அவர்கள் அஷ்டாங்க யோகம் என்ற வழிமுறையை பின்பற்றி மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துள்ளனர். தியானம், யோகம், தவம், என்று கூறுவதெல்லாம் தானே கிடைக்கப் பெறுவதுதான். தவத்திற்கு ‘த’ ன்னை அறிந்து (உள்ளுணர்வு) அதற்கான ‘வ’ டிவமைத்து (யோகாசனம்) & ‘ம்’ என்ற ஓங்கார நாதத்தோடு இணைந்ததே தவம் என்றழைக்கப்படுகிறது.

தியானம் என்பது தூக்கநிலையிலும் விழிப்பு நிலையாகும். உயிர் மீது மனம் வைத்தால் தியானம். உடல் மீது மனம் வைத்தால் யோகாசனம். உடலையும், மனத்தையும் தளர்வாக வைத்தலே மிகப்பெரும் தியானம். அதிலும் முறையாக மூச்சை அறிதலும் மென்மையான சிரிப்புமே தியானத்தின் அடிப்படை உண்மை.

ஆலைப் பல்சக்கரங்களில் மாட்டிய பல்லியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரச்சனைகளில் சிக்கி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். கடன் தொல்லை, நோய் தொல்லை, குடும்ப தொல்லை என்று தொல்லைகளோடு தினமும் தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறோம். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பதை மறந்து விடுகிறோம். வாழ்க்கையே போர்க்களம், அதில் வாழ்ந்துதான் பார்க்கணும் என்பதை நினைவில் கொள்ள மறுக்கிறோம்.

நிதானிப்போம்! தியானிப்போம்! வாழ்வாங்கு வாழ்வோம்!


Spread the love