இதிலிருந்து பெண்களை காப்பாற்றும் சீந்தில் கொடி

Spread the love

இன்றும் சில கிராமங்களில் பிரசவத்தின் போது சீந்தில் கொடியின் சிறு துண்டை எடுத்து குழந்தை பெற்றெடுக்கும் தாயின் கால் கட்டை விரலில் கட்டி விடுவார்கள், இதனால் பிரசவகாலத்தில் தாய்க்கும், சிசுவுக்கும் எந்த நோய் கிருமி, மற்றும் பாதிப்பு ஏற்படுவதில்லை.

பெண்களை மிக அதிகமாகத் தாக்கக்கூடிய நோய் மார்பக புற்றுநோய். இதிலிருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடி சீந்தில். சித்த வைத்தியத்தில் சீந்தில் வஞ்சிக்கொடி என்று முக்கியத்துவம் பெற்றதாகிறது. பெயரைக் கேட்டாலே நடுநடுங்க வைக்கும் எய்ட்ஸ் மற்றும்  வெட்டை, மேகம் போன்ற கொடிய பால்வினை நோய்களை குணமாக்கும் மருந்து சீந்திலில்  உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு சீந்திலை சாப்பிடக் கொடுப்பது   வழக்கமாகும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதியுள்ளார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியும் மேற்கண்ட மருத்துவ ஆற்றலை உண்மையென்று உணர்ந்துள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக வரும் மஞ்சள் காமாலை மற்றும் காச நோயிலிருந்து பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாவரப்பெயர்   : தினோஸ்போரா கார்டிஃபோலியா 

Tinospora cordifolia

தாவரக்குடும்பம் : மெனிஸ்பெர்மாஸியே 

Menispermaceae

வழக்குப் பெயர்கள்    : அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி,ஆகாசவல்லி போன்றவை

ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்று இதை  குறிப்பிட்டுள்ளது.

பயன் தரும் பாகங்கள் : கொடி, இலை மற்றும் வேர் மற்றும் சீந்தில் சர்க்கரை ஒரு கற்ப மருந்தாகப் பயன்படுகிறது. உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், ஆகியவற்றைப் பெருக்கும்.

வறட்சியைத் தாங்கக்கூடியது. உயரமான மரங்களில் அதிகமாகப் படரும் ஏறு கொடி வகையாகும். இதய வடிவ இலைகளையும், தக்கையான தண்டுகளையும் காகிதம் போன்ற  மெல்லியபுறத் தோலையும் உடையது. தரையுடன் இக்கொடியின் தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி தழைக்கும் தகவமைப்பு பெற்றது. இது கோடையில் பூக்கும் தன்மையுடையது. இதிலும் ஆண், பெண் என்ற இருவகை பூக்கள் உண்டு,    இவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெண் பூ தனியாக இருக்கும். சுண்டைக்காய் அளவிலான காய்களையும் கனிந்த பிறகு பவழ நிறத்திலான பழங்களைக் கொண்டதாய் இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் இருக்கும். இதன் விழுதுகள் முப்பது அடி நீளம் வரை வளரக்கூடியது. விதையை விட, இதன் தண்டுப் பகுதியை நறுக்கி ஊன்றி வளர்த்தால் சிறப்பாக  வளரும் தன்மையுடையது. இது கசப்புச்சுவை கொண்டது, ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு படரக்கூடியது, இதன் கிளைகளிலிருந்து மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் வளர்கின்றன.   மருத்துவச் செடியான சீந்தில் கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.

மருத்துவப்பயன்கள் :

முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம்  வைத்திருந்து பிறகு நீரை வடித்தால் பாத்திரத்தின் அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் அதை நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து பிறித்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடி கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரையாகும். இது ஓரு கற்ப மருந்தாகும்.  உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல உடற்பிணிகளும் நீங்கும்.

சீந்தில் சர்க்கரையானது கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவைகளை வலுவாக்கும். பிற  மருந்துகளின் சேர்த்து நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல், மூர்ச்சை ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையுடையது.

சீந்தில் கொடி, நெற்பொறியை 50 கிராம் எடுத்து அதை ஒரு லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக சுண்டக் காய்ச்சி அதை காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் ஐம்பது மி.லி. பருகி  வந்தால் மேக வெப்பம் மற்றும் தாகம் தீரும்.

முதிர்ந்த சீந்தில் கொடிகளை உலர்த்திப் பொடியாக்கி காலை, மாலை என அரைத் தேக்கரண்டி எடுத்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, அதிக தாகம், உடல் மெலிவு, விரல் குத்தல்  ஆகியவை நீங்கும்.

சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைக்குறைவு,  கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கவும். மேலும் இது வெட்டை நோயை போக்கவும், இந்திரியம் தானாக வெளியேறுவதைத் தடுக்கவும் மருந்தாக தரப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் மற்றும் அதனால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து ஆயுர்வேத மருந்தகங்களில் விற்ப்பார்கள். அதனை பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் ஆர்த்ரைடிஸினால் உண்டாகும் பாதிப்புகள் விலகும். சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களில் தடவினால், கண் பார்வை தெளிவாக இருக்கும். சர்க்கரை வியாதி, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் இதிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு, வறட்டு இருமல் ஆகியவற்றை சரிபடுத்துகிறது. நோய்‏ எதிர்ப்பு சக்தி இவற்றில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, நச்சுக்களை வெளியேற்றுகிறது. கல்லீரல் பாதிப்புகளையும், சிறுநீரக தொற்றையும் குணப்படுத்தும் ஆற்றலுடையது.

சீந்தில், கொடி வகையைச் சார்ந்தது. சம்பங்கிக் கொடியின் இலையின் வடிவத்தைப் போன்ற இலைகளைக் கொண்டது. மிகுந்த கசப்புச் சுவை உடையது. அக்கம்பக்கம் படர்ந்து தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளக்கூடியது. எங்கும் வளரக்கூடியது. சிறிய மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்டது.

நமது நாட்டில் தென்மாநிலங்கள், வங்காளம், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் சாதாரணமாகவே  சீந்தில் அதிகம் வளர்கிறது.  

பெரிய மரங்களைப் பற்றிப் படரக்கூடிய இந்த சீந்தில் கொடி, வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சீந்திலின் மருத்துவப் பயன்பாடுகள் Tinospora cordifolia என்பது சீந்திலின் தாவரப் பெயர். Menispermaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.

இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வரும் காய்ச்சலைத் தீர்க்கும். வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. மூட்டு வலிகளை நீக்கவும், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், கல்லீரலைப் பலப்படுத்தவும், உடல் தேற்றியாகவும், காம உணர்வைத் தூண்டக் கூடியதாகும்.

 வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி. சீந்தில் கொடித் தீநீர் வாத சுரத்தையும், பித்த சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்தக்கூடியது. சீந்தில், நாவறட்சியையும் உடற்சூட்டையும் போக்குகிறது.

ஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரைக்கிறது.

சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை சாப்பிட்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது முதல் பால் வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை நீங்கும். மேலும் சீந்தில் கொடியின் சர்க்கரையால் பதினெட்டு வகையான சரும நோய்களை போக்க முடியும் என்கிறார்  சித்தர்கள்.

சீந்தில் மருந்தாகிப் பயன்தரும் விதம்

சீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்தி இலைகளைப் பொடி செய்து, அதை  நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

சீந்தில் தண்டுகளைக் காய வைத்து போடி செய்து, இந்தப் பொடியை நான்கு கோப்பை நீர் விட்டு காய்ச்சி அதை ஒரு கோப்பையாக சுண்டி அதை காலையில் வெறும் வயிற்றில் பருகி வர பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை நீங்கும். காய்ச்சலுக்கும் இது மாமருந்து.

சீந்தில் சர்க்கரையை (சீந்தில் சர்க்கரை, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.) ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இது  நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வாகும்.

சீந்தில் இலையை அனலில் வாட்டி, இளஞ்சூடாக புண்களின் மேல் பற்றுபோல போட்டு வர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும். சீந்தில் கொடி 35 கிராம் எடுத்து நசுக்கி அதனுடன்  கொத்தமல்லி, அதிமதுரப்பொடி முதலியவற்றை 4 கிராம் சேர்த்து அதனுடன் 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர் ரோஜாப்பூ ஆகியன தலா 10 கிராம் சேர்த்து, இரண்டு கோப்பை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி அதை 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினமும் காலையில் பருகிவந்தால் வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றைப் நோய்கள் விலகும்.

சீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி, 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினமும் இருவேளை 50 மி.லி. அளவு குடித்துவர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். சாதரணமாக வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் என்னும் அமிர்தக் கொடியை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ரா. கோபால்

சீந்தில் சர்க்கரை:

சீந்தில் கொடியை இடித்து குளிர்ந்த நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து சக்கையை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்து விடும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட காய வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படுகிறது.

இந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்தி வர கடும் ஜுரத்துக்கு பின்பு ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியவை குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் இது உதவுகிறது. கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட பலம் பெறும். உடல் எடை, வலிமை அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வர பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.

எந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம்-.

                                                                                      சீந்தில் டீ

தேவையான பொருட்கள்:

சீந்தில்தண்டு-50கிராம்                                                            

மிளகுதூள்-½டீஸ்பூன்                                                          சீரகம்-1டீஸ்பூன்                                              பனங்கற்கண்டு-1டீஸ்பூன்                                                           

நீர் – 500 மி.லி.

செய்முறை:

சீந்தில் கொடியை நன்கு நசுக்கி, நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் மிளகுத்தூள், சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி, சுவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகி வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஜீரணம் மேம்படும், மலச்சிக்கல் தீரும். இதனை தினசரி 100 மி.லி. அளவு பருகி வரலாம்.

சீந்தில் சூப்

தேவையான பொருட்கள்:

சீந்தில்சர்க்கரை-1கிராம்                               வெந்தயபொடி-1டீஸ்பூன்                                   

கறிவேப்பிலைபொடி-½டீஸ்பூன்                                                  

 மிளகுதூள்-½டீஸ்பூன்                                                      தண்ணீர்-300மி.லி                                                     

உப்பு  – தேவையான அளவு  

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி,  அதில் எல்லா பொடிகளையும் இட்டு கொதிக்க வைத்து, தினம் 100 மி.லி. பருக வேண்டும். சர்க்கரை நோயால் உண்டாகும் கை, கால் எரிச்சல், பாதங்களில் உண்டாகும் மதமதப்பு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை நீங்கும். சர்க்கரையின் அளவும் குறையும்.

டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)


Spread the love