புதினா தரும் புத்துணர்ச்சி

Spread the love

இந்தி, உருது, பஞ்சாபி, மராத்தி மற்றும் தமிழ் மொழியில் புதினா என்று அழைக்கப்படும் வாசனை தரும் ஒரு மூலிகைச் செடி, சமையல் மற்றும் அழகு மேம்படுத்துவதற்கு சிறந்த ஒன்றாக பயன்படுகிறது.

புதினா அகுலு என்று தெலுங்கிலும், புதினா இலகளு என்று கன்னடத்திலும் புதினா இல என்று மலையாள மொழியிலும் அழைக்கப்படுகிறது.புதினா செடிகளில் பல வகைப் பிரிவுகள் இருந்தாலும் அனைத்து வகைகளும் வியக்கத்தக்க அளவுக்கு நறுமணம் தரக் கூடியவை. புதினாவின் அறிவியல் பெயர் மெந்தா அர்வென்சிஸ்.

உலகம் முழுவதும் எங்கும் காணக் கூடிய களைச் செடியாக இது வளர்வதால், பராமரிப்பதும் அவ்வளவு அவசியமில்லை. உடலில் தோன்றும் அழற்சி, எரிச்சல் போன்றவைக்கு எதிராகவும், ஆண்டி ஆக்சிடெண்ட் ஆகவும் இயங்குகிறது.

நுண்ணுயிர்க் கொல்லி, பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.புற்று நோய், மன அழுத்தம், எக்ஸ்ரே கதிர்களின் பாதிப்புகள் மற்றும் உடல் வலிக்கு எதிராகவும் துணை புரிகிறது.

100 கிராம் அளவு உள்ள புதினாவில் காணப்படும் ஊட்டச் சத்துக்கள்: கலோரி அளவு 48 மி.கி., கால்சியம் 200 மி.கி., இரும்பு 15.6 மி.கி., வைட்டமின் சி 27 மி.கி., ரிஃபோபிளேவின் 26 கிராம் ஆகும். புதினா இலைகளில் 4.8 சதவீதம் புரதம், மிக மிகக் குறைந்த அளவாக கொழுப்புச் சத்து, நார்ச் சத்து 2 சதவீதம், கார்போ ஹைட்ரேட் -5.8 சதவீதம் உள்ளது.

இது போக, வைட்டமின் டி மற்றும் இ சத்துக்களும் உள்ளன. இதன் இலைகளில் இருந்து நீராவி முறை மூலம் புதினா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.புதினா இலைகளைப் போல புதினா எண்ணெயும் மருத்துவ மற்றும் அழகு பொருட்கள் தயாரிப்புத் துறையிலும் வியக்கத் தக்க அளவு பயன்படுத்தப்படுகின்றன.பாரம்பரிய மருந்து தயாரிப்பில் இது கார்மினடிவாக பயன்படுகிறது.

வயிற்றுக் கோளாறை சரி செய்கிறது.

புதினா இலைகளில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடெண்ட் வேதிப் பொருட்கள் இருப்பதால், வயிற்று வலி, வயிறு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.வயிற்று வலி, அஜீரக் கோளாறுகள், வயிற்றுப் புண், குடல் சார்ந்த எரிச்சல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது.

மேலும் பசி உணர்வைத் தூண்டுவதால், சாப்பாட்டிற்கு முன்பு இதனை சூப்பாக அருந்தலாம். புதினா டீயானது மிகச் சிறந்த ஒன்றாக அஜீரணக் கோளாறுகளை குணப்படுத்த அருந்தப்படுகிறது.ஒரு கோப்பை புதினா டி என்று தினசரி மாலையில் அருந்தி வந்தாலே போதுமானது.

வாய் சார்ந்த பிரச்சனைகள் தீர உதவுகிறது

புதினா சாறு பற்பசை தயாரிப்பதில் ஒரு பொருளாகவும், பல் விளக்கி கொப்பளிக்க உதவும் திரவமாகவும் தயாரிக்கப்படுகிறது.இதன் நறுமணம் மற்றும் சுவையானது பாக்டீரியாக் கிருமிகளுக்கு எதிராக செயல்படுவதால் பற்களின் பாதுகாப்பு சிறந்து விளங்குகிற்து.பல் ஈறு, சொத்தை, வாய் நாற்றம் போன்ற பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்த முடிகிறது. வாய் கொப்பளிக்கும் திரவத்தை புதினாச் சாறுடன் கடல் உப்புச் சேர்த்து நாமே வீட்டில் தயாரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சருமத்தை மினுமினுப்பாக்குகிறது

சருமப் பாதுகாப்பில் புதினா மிகச் சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சருமத்தை இயற்கையாக உள்ள நிலையில் பிரகாசமாக்குகிறது.சரும அலர்ஜி உள்ளவர் எனில், முதலில் மாதிரி பரிசோதனையாக பரிசோதித்துப் பார்த்து விட்டுப் பயன்படுத்தவும்.

முகப் பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.ஆனால் புதிதாக எடுக்கப்பட்ட இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட அரைத்த கலவையை முகம் மற்றும் பருக்களில் பூசும் பொழுது எரிச்சல் ஏற்படும் என்பதால் எச்சரிக்கிறோம்.

நோய் எதிர்ப்புச் சக்தி தரும் புதினா

புதினாவில் ஏராளமான ஊட்டச் சத்துக்களும் விட்டமின்களும் இருப்பதுடன் ஏராளமான ஆண்டி ஆக்சிடெண்ட் வேதிப் பொருட்களும் உள்ளன. பொதுவாக அடிக்கடி புதினாவினைப் பயன்படுத்த வேண்டி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

சளி மற்றும் இருமலைக் குணப்படுத்த புதினா

புதினா இலையில் உள்ள மெந்தால் என்னும் வேதிப் பொருளானது, மூக்கடைப்பை சரி செய்து சளித் தொந்தரவுகளிலிருந்து பாதுகாப்பு தருகிறது.சளி மற்றும் இருமலில் சிரமப்படும் பொழுது புதினா டீ அருந்துவது நல்ல பலனைத் தருகிறது.

வலி நிவாரணியாக பயன்படும் புதினா

உடலில் ஏற்படும் வலி, தலை வலி மற்றும் மாதவிடாய்க் காலத்தில் தோன்றும் சூதக வலி, ஆஸ்துமா, அழற்சி, மன நிலை மாற்றத்தினால ஏற்படும் மன அழுத்தம் போன்றவைகளைக் குணப்படுத்த புதினா டீ மிகச் சிறந்த ஒன்றாகும். இதற்கு மிகச் சிறந்த வழியாக, புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட புதினா இலைகளை சுத்தம் செய்த பின்பு, நிழலான பகுதியில் உலர வைத்து பின்னர் பொடி செய்து கொள்ள வேண்டும்.

வாந்தி மற்றும் வாய் துர்நாற்றம் தவிர்க்க புத்தம் புதிய புதினா இலைகள் ஒன்றிரண்டு வாயிலிட்டு மென்று வந்தால் போதுமானது. மேலும் புத்தம் புதிய புதினா இலைகளுடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து, சாதாரணமாக குடி நீராக அருந்துவது போல அருந்தியும் வரலாம்.

புதினாவில் பக்க விளவுகள் உண்டா?

புதினாவைப் பயன்படுத்துவதானால் உங்களுக்கு அலர்ஜி எனில் தவிர்த்து விட வேண்டும். மேலும் புதினா எண்ணெயை கை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் சருமத்தில் எங்கும் நேரிடையாக பயன்படுத்துதல் கூடாது.அதிலும் நீங்கள், முகத்தில் பயன்படுத்தி விட்டால் அதனுடைய வாசனையானது குழந்தை மூச்சு விட முடியாமல் சிரமத்தைத் தரும்.பித்தப் பை, கல்லீரல் சார்ந்த நோயாளியாக நீங்கள் இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே புதினா டி தயாரித்து அருந்தக் கூடாது.

புதினாவில் இருந்த நமக்கு நாமே தயாரித்துக் கொள்ளக் கூடிய மருந்துகள்

புதினா பல் பொடி

இயற்கை முறையில் செயற்கை உரம் இடாத புத்தம் புதிய புதினா இலைகளை தேவையான அளவு பறித்துக் கொண்டு, சுத்தம் செய்த பின்பு நிழல் பகுதியில் வைத்து நன்றாக உலர வைக்கவும்.அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சமையல் உப்பு தேவையான அளவு எடுத்துக் கொண்டு நன்றாக பவுடராக ஆக்கிக் கொள்ளவும்.உலர்ந்த புதினா இலைகளையும் பொடி செய்து, சமையல் உப்புப் பொடியுடன் சேர்த்து நன்றாகக் கலந்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

புதினா பல் பொடியை எவ்வாறு பயன்படுத்துவது?

தேவையான அளவு தயாரிக்கப்பட்ட புதினா பொடியை ஒரு கோப்பையில் எடுத்துக் கொள்ளவும். டூத் பிரஷ்ஷை தண்ணீரில் நனைத்த பின்பு, மேற்படி பொடியை வைத்து பற்களை துலக்கிப் பின்பு கொப்பளித்து விடவும். இப்பொடியானது உங்கள் பற்களுக்கு இயற்கையான, பளபளப்பான ஒளி வீசும், வாய் துர்நாற்றத்தை போக்கும்.இதன் மூலம் பற்சிதைவு, ஈறுப் பிரச்சனைகள் வராது தடுக்கும்.

புதினா டீத் தூள்

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட அல்லது உலர வைத்துப் பொடி செய்யப்பட்ட புதினா இலைகளை கோப்பை ஒன்றில் எடுத்துக் கொண்டு கொதிக்கும் நீரின் மேல்பகுதியில் இட வேண்டும்.பின்பு நன்றாக கலக்கிக் கொள்வதுடன், இனிப்பு தேவையெனில் தேன் கலந்து அருந்தி கொள்ளலாம்.இதனையே க்ரீன் டி மற்றும் லெமன் டி என்று நீங்கள் உங்கள் விருப்பப்படி தயாரித்துக் கொள்ளலாம்.

உதடுகளைப் பாதுகாக்க லிப் லைட்டனர்

புதினாச் சாறு தயாரித்துக் கொண்டு அதனுடன் சுத்த தேன் கலந்து உதடுகளின் மேற்பரப்பில் பூசி கொள்வதே லிப் லைட்டனர் ஆகும்.இதனால் உதடுகள் மிருதுவாகவும் பளபளப்பாகவும் அமையும்.தேவையான அளவு புதினா இலைகளைப் பறித்து சிறிதளவு நீர் விட்டு மை போல அரைத்துக் கொள்ளவும்.ஒரு தேக்கரண்டி புதினா கலவைக்கு கால் தேக்கரண்டி தேன் கலந்து உதடுகளின் மேற்பகுதியில் பூசவும்.

புதினா முகப் பூச்சுக் கலவை

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட புதினா இலைகளை அரைத்து அதனுடன் தேவையான அளவு புத்தம் புதிதான கெட்டித் தயிரைச் சேர்த்து நன்றாக கலந்து பருக்கள் உள்ள பகுதி மற்றும் முகத்தில் பூசி வர சரும அழகு அதிகரிக்கும்.பருக்கள் மறைந்து விடும்.பொதுவாக புதினா இலையுடன் இதனைப் பயன்படுத்தும் பொழுது சருமத்திற்கு அலர்ஜி ஏற்படுகிறதா, இல்லையா என்று பரிசோதித்துப் பின்னர் தான் முழு அளவில் பயன்படுத்த வேண்டும்.

உடல் பருமன் குறைக்கபுதினாச் சாறு

கோடை காலங்களில் புத்துணர்ச்சி தரும் ஒரு குளிர் பானமாக புதினாச் சாறு மிகச் சிறந்ததாக உள்ளது. இதில் பலவித விட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளது என்பதுடன் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு முன்பு அருந்தக் கூடிய பொதுவான பானங்களை விட புதினா பழச்சாறு கலவை சிறந்ததாக இருக்கும்.

அரை கோப்பை அளவு புதிதாக பறிக்கப்பட்ட புதினா இலைகளை ஒரு தேக்கரண்டி அளவு புதிய எலுமிச்சம் பழத்தின் சாறை மற்றும்  கால் தேக்கரண்டி கரும் உப்பையும், குளிர்ந்த நீரும் சேர்த்து மிக்ஸியில் இட்டு கலக்கவும். பின்னர், அதனை வடிகட்டி எடுத்துக் கொண்டு, சுவைக்கு தேன் சேர்த்து கலந்து அருந்தி வரவும்.இந்தப் பழச் சாறு உடல் பருமனைக் குறைக்கிறது.

தலைப் பொடுகு, பேன் வெளியேற உதவும் புதினா ஷாம்பூ

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட புதினா இலைகளை சிறிது நீர் விட்டு மை போல அரைத்துக் கொள்ளவும்.அதனை மெல்லிய துணியால் வடிகட்டிக் கொள்ளவும்.வடி கட்டிய புதினாச் சாறின் அளவுக்குச் சமமாக எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு மேற்கூறிய கலவையை தலைப் பொடுகு, பேன் உள்ள பகுதியில் நன்றாக தடவி தேய்த்து பத்து நிமிடம் கழித்து நீரினால் கழுவிக் கொள்ளவும். புதினா மற்றும் எலுமிச்சையானது ஒன்று சேர, இயற்கையாகவே தலையில் காணும் பொடுகை வெளியேற்றி விடும்.

பா. முருகன்

புதினா ஜூஸ்

தேவையானவை

சுத்தமான புதினா இலை &1 1/2 கப்

சர்க்கரை-& சுவைக்கேற்ப

தண்ணீர்  & 1/2 கப்

கருப்பு உப்பு- &1/2 தேக்கரண்டி

சீரகத் தூள் -& 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு- & 3 அல்லது 4 தேக்கரண்டி

செய்முறை

சுத்தமான புதினா இலைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

சுத்தம் செய்த இலைகளை மிக்ஸரில் போட்டு பேஸ்ட் போல செய்து கொள்ளவும்.பின்னர் தண்ணீர், போதுமான அளவு சர்க்கரை, உப்பு, மற்றும் சீரகத்தூள் கலந்து ஐஸ் கட்டிகளை சேர்த்து எலுமிச்சை சாறுடன் கலந்தால் சுவையான புதினா ஜூஸ் ரெடி.

புதினா டீ

தேவையானவை

டீத்தூள்&1 தேக்கரண்டி

பால்&1 கப்

இஞ்சி&1 சிறு துண்டு

புதினா&1/2 கைபிடி அளவு

தண்ணீர்&1 கப்

சர்க்கரை&தேவைக்கேற்ப

செய்முறை

பாலுடன் தண்ணீர் சேர்த்து சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதி வரும் போது டீத்தூள் போட்டு, துண்டு இஞ்சியும் சேர்த்து நன்கு நுரை வரும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய டீயுடன் புதினாவை அலசிப் போட்டு 2 நிமிடங்கள் மூடி வைத்திருந்து விட்டு மீண்டும் வடிகட்டினால் சுவையான, புதினா டீ ரெடி.


Spread the love