தமிழகத்தில் தெருக்களிலும் சாலையோரங்களிலும் சில செடிகள் தானாகவே வளர்ந்து இருக்கும். இதனை நாம் அனைவரும் சாதாரணமாகப் பார்த்து விட்டு கடந்து போவோம். ஆனால் அந்த செடிகளில் ஒன்று நம்மை நூறாண்டு காலம் வாழவைக்கும் சக்தியைக் கொண்ட மூலிகைச் செடி என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? அந்த செடியின் பெயர் தான் “குப்பைமேனி”. இந்த குப்பைமேனி எந்த ஒரு இடத்திலும் தானாகவே வளரும் “ஆமணக்குச் செடி” வகையைச் சேர்ந்தது. இதன் பயன்பாடு மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.
அரிமஞ்சரி, அண்டகம், அக்கினிசிவன், பூனைவணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி என தமிழில் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த குப்பைமேனி செடியின் அனைத்துப் பகுதியுமே சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது. இதன் இலைகள் நமக்கு வாந்தியை உண்டாக்கி நெஞ்சுச்சளியை அகற்றும் தன்மை கொண்டது. இதன் வேர் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Acalypha indica என்பது இதன் தாவரவியல் பெயர்.
சிலர் நோய் காரணமாக படுத்த படுக்கையாக இருப்பர். இவ்வாறு இருப்பதால் bed sore எனப்படும் வேறு பிரச்சனை வரும். எளிமையாக வரும் இந்த bed sore பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்தக் குப்பைமேனி இலைகளில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூடுடன்bed sore புண்கள் இருக்கும் இடத்தில் தடவி வர விரைவில் குணமாகும்.
ஓயாத தலைவலி இருப்பவர்கள் இந்த குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி பின் இடித்துப் பொடியாக்கி நெற்றியில் பற்று போட்டு வர தலைவலி உடனடியாக நீங்கும். இதன் இலைகளை கைப்பிடியளவு எடுத்து சிறிதளவு மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பூசி, சிறிது நேரம் கழித்து குளிக்க, தோல் நோய் குணமாகும். இதன் இலைகளை அரைத்து மேகப் புண்கள் அதாவது படர்தாமரை மேல் தடவி வர அவை படிப்படியாக மறைந்து குணமாகும்.
சமண மதத்தில் மனிதர்களின் உடலை “திருமேனி” என்று கூறுவர். ஆனால் பிற மத சன்மார்க்கங்களில் சடலம், தேகம், உடல் என்று கூறுவர். நம் வீடுகளில் சேரும் அழுக்கு மற்றும் குப்பைகளை நாம் எவ்வாறு அகற்றுகிறோமோ, அதே போல் நம் உடலினுள் ஏற்படுகின்ற அழுக்கு மற்றும் குப்பையான நோய்களையும் அகற்றுமாம் இந்த குப்பைமேனி. இப்படி ஒரு மூலிகைச் செடியை, நாம் சாலை ஓரங்களில் தான் பார்க்க முடிகிறது. அவை எதற்கு பயன்படும் என்று கூட நமக்கு தெரிவதில்லை. பழந்தமிழர்கள் பின்பற்றி வந்த பாரம்பரிய மருத்துவமும் இப்படித்தான் சாலையோரங்களில் இருக்கும் குப்பைமேனி போல குப்பையோட குப்பையாக பார்க்கப்படுகிறது. இதற்கும் நாம் தான் முக்கியக் காரணம் என நாம் எப்பொழுது தான் உணரப்போகிறோமோ!!