கொத்தமல்லி

Spread the love

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் ஒரு வாசனைப் பொருளே கொத்தமல்லிக்கீரையாகும் கொத்தமல்லிக்கீரையை அதன் மணத்திற்காக பயன்படுத்துகிறோம் என்று நம்மில் பலர் நினைக்கின்றனர்.

ஆனால், அதன் மருத்துவக்குணங்களோ ஏராளம் அவற்றையெல்லாம் நாம் அறிந்தோமானால் கொத்தமல்லிக்கீரை நம் அன்றாட உணவில் ஒர் முக்கிய அங்கம் வகிக்கும்.

கொத்தமல்லி தோன்றிய இடம் மத்திய தரைக்கடல் நாட்டுப்பகுதிகளாகும். முற்காலத்திலேயே எகிப்தில் பயிரிடப்பட்டுள்ளது. இச்செடி ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் வரை வளரும். மூன்று மாதத்தில் பூத்து காய்க்கும். உலகிலேயே இந்திய மல்லி தான் தரமுடையதாக விளங்குகிறது. இந்தியாவிலிருந்து மற்ற உலக நாடுகளுக்கு மல்லி ஏற்றுமதியாகிறது.

கொத்தமல்லியின் தாவரவியல் பெயர் கொரியாண்ட்ரம் சாட்டைவம்என்பதாகும். ஆங்கிலத்தில் கொரியாண்டாஎனவும், தமிழில் உத்தம் பரி, தனிகம், தானியாகம், உரி, தானியம், தேனிகை, உருளரிசி எனவும் வழங்கப்பட்டு வருகிறது.

நூறு கிராம் மல்லித்தழையில் கீழ்க்கண்ட அளவில் சத்துகள் உள்ளன.

நீர்ச்சத்து – 86.3 கிராம், புரதச்சத்து – 3.3 கிராம், கொழுப்பு – 0.6 கிராம், தாது உப்புகள் – 2.3 கிராம், நார்ச்சத்துகள் – 1.3 கிராம், மாவுச்சத்து – 6.3 கிராம், எரிசக்தி – 44 கலோரி, சுண்ணாம்புச்சத்து – 154 மில்லி கிராம், மணிச்சத்து – 75 மில்லி கிராம், இரும்புச் சத்து – 18 மில்லி கிராம், கரோட்டின் – 69. 20 மில்லி கிராம், தயாமின் – 0.05 மில்லி கிராம், ரிபோபிளோவின் – 0.06 மில்லி கிராம், நியாசின் – 0.08 மில்லி கிராம், வைட்டமின் சி‘ – 135 மில்லி கிராம்.

மருத்துவப் பயன்கள்

கொத்தமல்லி கீரையை துவையலாகச் செய்து, சாதத்துடன் சேர்த்து உண்ணும் போது கொத்தமல்லி பசியைத் தூண்டி, செரிமானத்தை அளித்து உடலில் இரத்தம் ஊறிட துணை புரிகிறது. கொத்தமல்லியை அன்றாட உணவில் மிகுதியாக சேர்ப்பதால் சிறுநீர் நன்கு வெளியேறும். தாது புஷ்டியை ஊக்குவிக்கும். தலைசுற்றல், பித்தம் உள்ளவர்கள் மல்லிக் கீரையை அரைத்து பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து சாப்பிட மயக்கம், தலைச்சுற்றல் பித்தம் குறையும்.

இரத்த மூலநோய் கடுமையாகும் போது தனியாவைக் கஷாயம் செய்து அதில் பசும்பாலும் பனங்கல்கண்டும் சேர்த்துப் பருகி வர அந்நோய் கட்டுப்படும். செயின் ஸ்மோக்கர் எனப்படும் புகைப்பிடிப்போரின் இரத்தத்தில் தூய்மையும், நிறமும் கெட்டு அதனால் கண்கள், கன்னம், உதடுகள் கறுத்துக் காணப்படும். இதனைப் போக்க கொத்தமல்லி இலையைப் பச்சையாகப் பறித்துக் கழுவி சிறிதளவு வாயிலிட்டு மென்று விழுங்கவும். ஒன்று இரண்டு மாதங்கள் இப்படிச் செய்து வர கருமை நிறம் மாறி பழைய நிறம் திரும்பும்.

இரண்டு வயதைத் தாண்டும் குழந்தைகளுக்கும், மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கும் கட்டாயம் கீழ்க்கண்டவாறு கொத்தமல்லி துவையல் செய்து உண்பது இரத்த சோகைநோயை விரட்டும் வழியாகும்.

கொத்தமல்லித்துவையல்

ஒரு பிடி கொத்தமல்லி இலைகளை ஆய்ந்து தனியே வைக்கவும். இரண்டு ஸ்பூன் உளுந்து, இஞ்சி ஒரு துண்டு, சிறிது புளி, பெருங்காயம் ஒரு துண்டு, மிளகு 10 ஆகியவற்றை நெய் ஊற்றி வறுத்து வதக்கி, தேங்காய்த் துண்டு சிறிது, கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கி துவையலாக்கவும். இத்துவையலை சூடான சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சுக்கு மல்லி காபி

கொத்தமல்லியின் விதை தனியா எனப்படும். 200 கிராம் தனியா, 100 கிராம் சுக்கு (தோல் சீவி) 10 கிராம் ஏலக்காய் இம்மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு தினசரி எடுத்து காபி டிகாக்ஷன் போல் தயாரித்துப் பால், தேன் கலந்து பருகவும். இவ்வாறு செய்து குடிப்பதால், இக்காபி உடலின் உஷ்ண நிலையை சீராக்கும் இரத்த அழுத்தம் சமநிலையில் இருக்கும். பசி உரிய வேளையில் எடுத்து உணவு செரிமானமாகும் பித்தம் தணியும்.

தினசரி காலையில் பல் துலக்கிய பின் சிறிது கொத்தமல்லி இலைகளை வாயிலிட்டு மென்று அதற்குப் பின் வெந்நீரில் வாயக் கொப்பளித்து வர, பயோரியா நோய் வராது. ஈறுகளில் இரத்தம் கசியாது. பற்களில் கறைபடியாது. வாய் மணக்கும் தோல் வியாதிகளுக்கு கொத்தமல்லி சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தேமல்கள் உள்ள இடத்தில் இவ்விலைகளை பசும்பால் விட்டு அரைத்துப் பூசி 15 நிமிடம் கழித்துக் குளிக்கவும். சிறிது நாட்களில் தேமல் மறையும்.

கொத்தமல்லி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் கட்டிகளுக்குக் கட்டிவர அவை பழுத்து உடைந்து சீக்கிரம் ஆறும் வயிற்றுக்கோளாறு காரணமாக வரும் நீண்ட ஏப்பம் நிற்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கவும்.

இவ்வளவு மருத்துவ குணமும், நல்ல மணமும் கொண்ட கொத்தமல்லி இலைகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி அதன் மருத்துவ குணங்களை முழுமையாகப் பெற வேண்டும். இவ்வாறு கொத்தமல்லியின் பயன்களை கூறிக் கொண்டே போகலாம் கொத்தமல்லியை எவ்வாறு உண்டாலும் நன்மை தரக்கூடியதே. ஆதலால் கொத்தமல்லியை அன்றாட உணவில் ஒர் அங்கமாக்கி வாழ்வில் நலம் பெறுவோம்.


Spread the love
error: Content is protected !!