சோர்வை நீக்கும் நீர்முள்ளி

Spread the love

தாவரவியலில் Hygrophila Spinusa என அழைக்கப்படும் நீர்முள்ளி ஓரு களைச் செடியாகும். இது பெரும்பாலும் தமிழகமெங்கும் காணப்படுகிறது. குறிப்பாக குட்டைகள் குளங்கள் போன்ற நீர்நிலைகளின் ஓரங்களில் வரப்புகளில் வயல்களில் என நீர் அதிகம் தேங்கி நிற்கும் அனைத்து இடங்களிலும் குத்துச் செடியாக வளர்ந்தது இருக்கும். இதன் இலைகள் நீள வடிவத்திலும் இதன் இலைகளின் காம்புகளில் முட்களும் இருக்கும். இது நீர் ஓரங்களில் உள்ள முட்செடி என்பதாலேயே இதற்கு நீர்முள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது. இதன் பூக்கள் அழகிய ஊதா நிறத்திலும் சில சமயங்களில் சிவப்பு கலந்த ஊதா நிறத்திலும் இருக்கும்.

இதன் விதைகள், வேர், இலைகள், பூக்கள் என அனைத்து பாகங்களுமே சிறப்பான மருத்துவக் குணம் கொண்டவை. இந்த நீர் முள்ளி ஆயுர்வேதா, சித்தா மற்றும் மூலிகை மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த மூலிகைக்கு ஹிதகம், காகண்டம், இக்குரம் என வேறு பெயரும் உண்டு.

இந்த நீர்முள்ளி சிறுநீரகம் சம்பந்தமான நோய்களுக்கு ஒரு சிறந்த ஒப்பற்ற மருந்தாகும். இக்காலத்தில் அதிகமான மக்கள் சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் சிறுநீரக கல்லடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய கோளாறுகளுக்கு நீர்முள்ளி ஒரு சிறந்த மருந்தாகும். இது சிறுநீரைப் பெருக்கி சிறுநீரகங்களில் காலப்போக்கில் படிந்துள்ள உப்பு படிவத்தை நீக்குகிறது. உற்சாகமாக செயல்படத் தூண்டுகிறது. சோர்வை நீக்குகிறது.

சோர்வு நீங்க

மனச்சோர்வு ஏற்பட்டால் அது உடல் சோர்வை ஏற்படுத்தும். இதனால் உடலின் செயல்பாடுகள் சோர்வடையும் சிந்தனைகள் தடைபடும். நீர்முள்ளி கஷாயம் சாப்பிட்டு வர மனச்சோர்வும், உடல் சோர்வும் நீங்கும்.

சிறுநீரக கல்லடைப்பு

போதுமான அளவு தண்ணீர் குடிக்காததாலும் உப்புகள் சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுவதாலும் கல்லடைப்பு ஏற்படுகின்றது. இத்தகைய சிறுநீரக கல்லடைப்புக்கு நீர்முள்ளி கஷாயம் ஒரு சிறந்த மருந்தாகும். நீர்முள்ளியை சம அளவு நெருஞ்சி முள்ளுடன் கலந்து கஷாயம் காய்ச்சி குடித்து வர கல் கரையும், சிறுநீரகம் சீராக செயல்படும்.

மலச்சிக்கல் மறைய

பலருக்கு குளிர்காலத்திலும் சிலருக்கு வெயில்காலத்திலும் மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். இத்தகைய மலச்சிக்கலுக்கு நீர்முள்ளி சிறந்த மூலிகையாகும். சம அளவு நீர்முள்ளி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை பொடி செய்து வைத்துக் கொண்டு கஷாயம் செய்து சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு சரியாக ஏற்படாத பெண்களுக்கும் மாதவிடாய் சுழற்சியின் போது வலி உள்ள பெண்களுக்கும் நீர்முள்ளி கஷாயம் சிறந்த மருந்தாகும்.

ஆண்களுக்கு

ஆணுறுப்பு சரியாக இயங்காத ஆண்களுக்கும் பாலுறவில் சரியாக செயல்பட இயலாத ஆண்களுக்கும் நீர்முள்ளி சிறந்த மருந்தாகும். தினசரி காலை நீர்முள்ளி கஷாயம் சாப்பிட்டு வர நல்ல பலன் தெரியும்.

வயிற்றுப் புண் நீங்க

அஜீரணம், உடல் சூடு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை போன்றவை வயிற்றுப்புண்ணை ஏற்படுத்தி விடும். அத்தகைய வயிற்றுப் புண்கள் ஆறிட நீர்முள்ளி கஷாயம் நல்ல பலன் தரும்.

Family:      Acanthaceae

Genus:      Hygrophila

Species:     Spinusa


Spread the love