மருத்துவ செய்திகள்

Spread the love

வருகிறது, பெண்களுக்கான வயாகரா!

பல்லாயிரக்கணக்கான ஆண்களுக்கு உடலுறவு கொள்வதின் பிரச்சனைகளை நீக்கிய சிறந்த கண்டுபிடிப்பு கம்பெனியின் வயாகரா (Viagara) மாத்திரைகள். பெண்களுக்கும் பாலியல் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. உச்சக்கட்டத்தை அடையமுடியாத நிலை, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பாலியல் பிரச்சனைகள் 40% பெண்களை பாதிக்கின்றன. பெண்களின் பாலியல் உணர்வுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள், மின்சாரத்தால் பெண்களின் இடுப்பு நரம்புகளை தூண்டினால், பிறப்புறுப்புகளுக்கு ரத்தம் அதிகம் பாய்கிறது, அதுவும் ஒரு வகை மருந்து இந்த தூண்டுதலை அதிகப்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி Pfizer கம்பெனி விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான மருந்தையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து, பாலுறவில் உறுப்புக்களுக்கு அதிக ரத்தத்தை பாய வைக்கும் செயலை நடத்தும் இராசயன பொருளை சிதைவடையாமல் பாதுகாக்கிறது. இதனால் பெண்கள் உச்சக்கட்ட நிலையை அடைந்து உடலுறவில் திருப்தி பெறுவது சாத்தியமாகிறது.

சிறுநீர் கட்டுப்பாடும், கருத்தடை மாத்திரைகளும்

ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் தாயாகும் வயதுள்ள பெண்கள் சிறுநீர் கட்டுப்பாடுமின்மையால் அவதிப்படுவது குறைவு என்பது தெரியவந்துள்ளது. சிறுநீர் கட்டுப்பாடின்மை அதை உண்டாக்கும் காரணங்களைப் பொருத்து பல வகைப்படும். சிறுநீர்ப்பை பாதிப்புகள், ஸ்ட்ரெஸ் (Stress) உண்டாக்கும் சிறுநீர் பெருக்கு, கட்டுப்படுத்த இயலாத, அவசர நீர்க்கசிவு, நிரம்பி வழியும் நீர்க்கசிவு முதலிய வகைகளை சொல்லலாம். கர்ப்பத்தைட மாத்திரை உபயோகிக்கும் பெண்களில் 43% ஸ்ட்ரெஸ் சிறுநீர்போக்கு, 48% பல வகை சேர்ந்த நீர்பெருக்கு, 64% அவசர நீர்க்கசிவு குறைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளின் வயிற்றுப்போக்கு

வளரும் நாடுகளில் வருடத்தில் 2.5 மில்லியன் குழந்தைகள் பேதியினால் இறக்கின்றன என்று தெரிவிக்கிறது. நாக்பூரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனம். பேதியுள்ள குழந்தைகளின் உடலில் செம்பு (Copper) துத்தநாகம் (zinc) அளவுகள் குறைந்து விடுகின்றன. எனவே இவற்றை கொடுத்தால் பேதியின் பாதிப்பு குறையுமா என்பதை கண்டறிய, இந்த ஸ்தாபனம் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. 6 மாதங்களிலிருந்து 59 மாதங்கள் வயதுடைய 808 குழந்தைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இவர்களை பல பிரிவுகளாக பிரித்து, துத்தநாக மாத்திரைகள், செம்பு மாத்திரைகள், செம்பும் துத்தநாகமும் சேர்ந்த மாத்திரைகள் மற்றும் “வெற்று மாத்திரைகள்” கொடுக்கப்பட்டன. ஆய்வின் முடிவில், துத்தநாகம், செம்பு மாத்திரைகளால் எந்த பலனும் இல்லை என்பது தெரியவந்தது.

மருத்துவக்கரி

மரங்களை எரித்து கரியை உண்டாக்குவது மிகப்பழமையான தொழில். 100 கிலோ மரத்தை எரித்தால் 25 கிலோ கரி கிடைக்கும். காடுகளை அழித்து கரியாக மாற்றி வந்தால் உலகின் வனப்பிரதேசங்கள் சுருங்கிவிட்டன. எனவே அடுப்புக்கரி இப்போது சுலபமாக கிடைப்பதில்லை. பல தொழில் உபயோகங்களை உடைய, சமையலுக்கு அத்தியாவசியமாக இருந்த அடுப்புக்கரி, மருத்துவகுணங்களையும் உடையது.

மருத்துவ சரித்திரம் / குணங்கள்

ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பே கரி மருந்தாக பயன்பட்டிருக்கிறது. கி.மு. 1550ம் ஆண்டில் எகிப்தியர்கள் கரியை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.

அமெரிக்க கண்டத்தை கண்டுபிடிக்கும் முன்பே, அங்கிருந்த செவ்விந்தியர்கள், கரியை தண்ணீருடன் கலந்து வயிற்றுக்கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.

1831 ல் ஒரு பேராசிரியர் ஊக்குவிக்கப்பட்ட (Activated) கரியின் உட்கிரக்கும் திறமையை நிரூபிக்க அதனுடன் ‘ஸ்ட்ரைக்னைன்’ (Strychnine) என்ற கொடிய விஷத்தை உட்கொண்டார். அவருக்கு ஒன்றும் ஆக வில்லை. கரியினால், விஷம் அவரை பாதிக்கமுடியவில்லை!

அடுப்புக்கரியின் மருத்துவப்பெயர் – Carbo – Ligni ஆங்கிலப் பெயர் – Wood Charcoal, Medicinal Charcoal.

மருத்துவத்தில் அடுப்புக் கரியின் முதல் பயன் – வயிறு கோளாறுகளை கண்டிக்கும். வாயு, நச்சுகளை உறிஞ்சி எடுத்து விடும். இதனால் நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், அஜீரணம் விலகும். பேதி நிற்கும்.

ஊக்குவிக்கப்பட்ட கரி (Activated Charcoal)

மரத்தை மிக அதிக சூட்டில், ஆக்ஸீஜன் இல்லாமல் எரிய வைத்தால் ஊக்குவிக்கப்பட்ட கரி கிடைக்கும். இதன் எடையை விட பரப்பளவு / சுற்றளவு அதிகமாக இருக்கும். “ஸ்பாஞ்ச்” போல நீர், விஷங்களை வேகமாக உறிஞ்சிவிடும்.

இதன் பயன்கள்:-

விஷத்தை உண்டவர்களுக்கு முதலில் ஊக்குவிக்கப்பட்ட கரி கொடுக்கப்படுகிறது. கரி, ஜீரண மண்டலத்தை விஷம் பாதிக்காமல், ரத்தத்துடன் சேராமல் தடுத்து, விஷத்தை தான் வேகமாக உறிஞ்சி விடும்.

விஷம் தவிர, இதர தேவையில்லா கன உலோகங்கள் வயிற்றில் படியாமல் தடுக்கும். அடுத்த முக்கியமான பயன் ஊக்கிவிக்கப்பட்ட கரி தண்ணீரை சுத்தம் செய்யும். உங்கள் வீட்டில் இருக்கும் நீர் சுத்திகரிக்கும் உபகரணங்களில் இந்தக்கரி இருக்கும்.

ஜீரண மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கும். இதன் உறிஞ்சும் குணத்தால், உடலில் எந்த வித விஷபாஷாணங்களை விடாது. குடலை அமைதிப்படுத்தும். பிரட்டலை குறைக்கும். வயிறு உப்புசம், பேதி இவற்றை நிறுத்தும்.

ஒரு மஸ்லின் துணிப்பையில் கரிப்பொடியை போட்டு ஓரிடத்தில் தொங்கவிட்டால், இந்த இடத்தின் துர்வாசம் நீங்கும். ஃப்ரிஜ்ஜில் ஒரு தட்டில் கரிப்பொடியை வைத்தால், தூர்நாற்றம் அடிப்பது நின்றுவிடும்.

நன்றாக பொடித்த கரியுடன், பாக்குப்பொடியை கலந்தால் நல்ல பல்விளக்கும் பொடி உருவாகும்.

கரி மருந்துகளை பயன்படுத்துமுன்:-

1.       உங்களுக்கு சிறுநீரக, கல்லீரல் மற்றும் இதர பிரச்சனைகள் நோய்கள் இருந்தால் டாக்டரிடம் சொல்லவும். அவரது ஆலோசனை இன்றி இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

2.       கர்ப்பமாக இருந்தால் கரி மருந்துகளை தவிர்க்கவும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களும் இந்த மருந்துகளை தவிர்க்கவும்

3.       கரிமருந்துகளை 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

4.       கரிமருந்துகளை ஒரு முழு டம்ளர் (8 அவுன்ஸ்) தண்ணீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

5.       உணவு உண்ட பின் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

6.       ஒரு நாளில் 41/2 கிராமுக்கு அதிகமாக (260 மி.கி. உள்ள 16 மாத்திரைகளுக்கு மேல்) எடுத்துக் கொள்ளக்கூடாது.


Spread the love