மருத்துவ செய்திகள்

Spread the love

புகை பிடிப்பதால் வரும் நரம்பு நோய்

அமெரிக்காவின் ஹார்வார்ட் (Harward) பல்கலைக்கழகத்தில் நடத்திய ஒரு ஆய்வு, புகைப்பிடிப்பதால், தீவிர நரம்பு நோயான Multiple Sclerosis ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கிறது. இந்த குணப்படுத்த முடியாத நரம்பு நோயின் அறிகுறிகள் – கை கால்களில் உணர்ச்சியின்றி போதல், பலவீனம், பார்வை பாதிப்பு, பார்வை முழுவதும் பறிபோதல், தலையை அசைத்தால் சுரீரென்ற வலி, மின்சார ஷாக்அடிப்பது போன்ற உணர்வு, மற்றும் தடுமாறி நடப்பது. நம் உடலில் வைரஸ்களை எதிர்க்கும் புரதமொன்று உள்ளது. இந்த புரதம் அதிகமாக உள்ள புகை பிடிப்பவர்களுக்கு, மற்றவர்களை விட Multiple Sclerosis வரும் வாய்ப்புகள் இரு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் வரும் பல கோளாறுகள் போதாதென்று, இந்த தீவிர நரம்பு நோயும் சேர்ந்து விட்டது.

பத்திய உணவு மட்டும் உடல் எடையை குறைக்காது

அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழகத்தில் குரங்குகளை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பல வருடங்கள் குரங்குகளுக்கு அதிக கொழுப்புள்ள உணவுகள் தரப்பட்டன. பிறகு அவற்றுக்கு குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள், 30% கலோரிகள் குறைத்து, கொடுக்கப்பட்டன. குறைந்த கலோரிகள் உணவு கொடுக்கப்பட்ட குரங்குகளிடம் எடை குறைவு ஏற்படவில்லை. மாறாக அவற்றின் இயற்கையான செயல்பாடுகள் கணிசமாக குறைந்திருந்தது. மேலும் சில குரங்குகளுக்கு நார்மல் உணவும், தினமும் ஒரு மணிநேரம் Tread Mill லில் உடற்பயிற்சியும் தரப்பட்டன. இவற்றுக்கு உடல் எடை குறைந்தது. எனவே எடை குறைக்க உணவை குறைப்பது மட்டும் போதாது, உடற்பயிற்சியும் தேவை என்பது நிரூபணமாயிற்று.

குழந்தைகளின் தொடர் இருமல் 

குழந்தைகள் இருமுவது 8 வாரங்களுக்கு மேலிருந்தால் அதன் காரணம் அலர்ஜி, உணவுக்குழாயில் அமிலம் ஏறுவது, மற்றும் ஆஸ்த்துமாவாக இருக்கலாம். இதை தெரிவிப்பது அமெரிக்காவின் லூசியானவில் நடத்தப்பட்ட ஒர் ஆய்வு. இங்கு 5 லிருந்து 12 வயதுள்ள, தொடர்ந்து இருமலால் அவதிப்பட்ட (8 வாரங்களுக்கு மேல்) 40 குழந்தைகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், குழந்தைகளில் 27.5% பேர்களுக்கு உணவுக்குழாயில் அமிலம் ஏறுவதும், 22.5% குழந்ரதகளுக்கு அலர்ஜியும், 12.5% சதவிகித குழந்தைகளுக்கு ஆஸ்த்துமாவும், தொடர் இருமலுக்கு காரணம் என்று தெரிய வந்தது. இதனால் இருமலுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் சிகிச்சை முறைகளை பற்றி மறு சிந்தனை தேவை என்கின்றனர் நிபுணர்கள்.

கறுப்பு தேயிலையும், இரத்த சர்க்கரையும்

டைப் – 2′ நீரிழிவு நோய்க்கு, கொடுக்கப்படும் Precose மற்றும் Glyset மருந்துகளைப் போலவே பால் சேர்க்காத கறுப்பு டீ பயனளிக்கிறது. இதில் பச்சைடீ (Green tea) யை விட அதிகமாக உள்ள Polysaccharide  வேதிப்பொருள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். இந்த தகவல் சீனாவில் உள்ள ஒரு பல்கலை கழக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆல்ஃபா குளுக்கோசிடேஸ் (Alpha Glucosidase) என்ற என்ஜைம், உடலில் ஸ்டார்ச்சை (மாவுச்சத்து) குளூகோஸாக மாற்றுகிறது. நீரிழிவு மருந்துகளான Precose மற்றும் Glyset, இந்த என்ஜைமை கட்டுபடுத்துகிறது. இதே போல கரும் தேயிலையில் உள்ள கூட்டு சர்க்கரை பொருள் (Polysaccharides) களும், Alpha Glucosidase என்ஜைமை கட்டுப்படுத்துகிறது. இந்த ஆய்வை நடத்திய நிபுணர் சென்‘ (Chen) கூறுவது – இரத்த குளூகோஸை கட்டுப்படுத்த இயற்கை உணவுகளை பயன்படுத்துவதுப் பற்றி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இப்போது இயற்கை தேயிலையின் கூட்டு சர்க்கரை பொருளை பயன்படுத்தி நீரிழிவை கட்டுப்படுத்தும் சாத்திய கூறுகள் அதிகம்.

கறுப்பு டீயை பால் சேர்க்காமல் குடித்து வந்தால் போதுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சென்னின் ஆராய்ச்சிக்குழு பயன்படுத்தியது தேயிலையிலிருந்து இராசயன முறையில் எடுக்கப்பட்ட கூட்டு சர்க்கரை. இருந்தாலும் பாலில்லாத கறும் தேயிலை பானம் பருகிவருவது நன்மை பயக்கும்.


Spread the love
error: Content is protected !!