மருத்துவ செய்திகள்: வாசிப்பது ஆயுர்வேதம் . காம்
· உடற்பயிற்சியின் நன்மைகள் அனைவரும் அறிந்ததே. சமீபத்திய ஆய்வுகள் உடற்பயிற்சியினால் உடலின் செல்கள் முதுமை அடைவதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. அணுக்கோல்களின் (க்ரோமஸோம் – Chromosome) மேல் ஒரு ‘மூடி‘ போல் பாதுகாக்கும் டெலோமெர்ஸ் (Telomeres), செல்லில் இருக்கும் DNA (க்ரோமஸோம்களில் உள்ள வம்சாவளித் தகவல் கொண்ட பொருள்) வை ஸ்திரமாக வைத்திருப்பவை. இவை வயதாகும் போது குறைகின்றன. விஞ்ஞானிகள் உடற்பயிற்சி முறையாக செய்பவர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் ஆனால் உடற்பயிற்சி செய்யாதவர்கள் – இந்த இரண்டு பிரிவுகளில் உள்ளவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்தனர். உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்பாடுகளால் ‘டெலோமெரேஸ்‘ என்ஸைம் தூண்டப்பட்டு டெலோமெர்ஸ் ஸ்திரப்படுத்தப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களான லுகோசைட்ஸ் (Leuko cytes) டெலோமெர்ஸின் குறைபாடு தவிர்க்கப்படுகிறது. எனவே உடற்பயிற்சி உடல் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
· வரப் போகிறது செயற்கை மூளை! லாசேன், ஸ்விட்சர்லாந்தின் உள்ள ஒரு பாலிடெக்னிக் பள்ளியில் செயற்கை மூளையை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2018 ல் இந்த செயற்கை மூளை தயாராகும். சிலிகன் (Silicon), தங்கம், செம்பு (Copper) இவற்றால் உருவாக்கப்படும் செயற்கை மூளை, ஒரிஜினல் மூளை போலவே சிந்திக்கும், புத்திசாலியாக இருக்கும். சுக துக்கங்களை அறியும் உணர்வு, கோபதாபங்கள், வலி சந்தோஷம், இவற்றை கொண்டிருக்கும். செயற்கை மூளையை உருவாக்குவதின் மூலம் சித்திப்பிரமை, உன்மத்தம் இவற்றை தவிர்க்கலாம். மனிதனின் மூளை சக்தியை அதிகப்படுத்தலாம் என்கின்றனர் ஸ்விஸ் ஆய்வாளர்கள்.
· பன்றிக்காய்ச்சல் (H 1 N 1) வந்தால் வைரஸை எதிர்க்கும் மருந்துகளை சீக்கிரமாக உபயோகிப்பது நல்லது என்கிறது உலக ஆரோக்கிய குழுமம் (WHO). இந்த ஃப்ளூவுக்கு கொடுக்கப்படும் “டாமிஃப்ளூ” (Tami flu) மற்றும் சனாமிவிர் (Zanamivir) இவற்றை அறிகுறிகள் தோன்றிய உடனேயே கொடுக்க வேண்டும். ஆனால் இவற்றை நோய் தோன்றாத போது, வராமல் தடுப்பதற்காக பயன்படுத்தக் கூடாது. அடிப்படை சுத்தத்தை கடைப்பிடிப்பதே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் வழி என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகளும், குழந்தைகளும் ஜுரம் விட்டு, மருந்தில்லாமல் 24 மணி நேரம் “நார்மலாக” இருந்தால் மட்டுமே முறையே வேலைக்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டும். இருமல், தும்மும் போது முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
· குழந்தைகளின் இருமல் 8 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் காரணங்கள் ஆஸ்த்மா, உணவுக்குழாய் (GRD – Gastro – Oesophageal reflux) மற்றும் அலர்ஜி – இவைகளாக இருக்கலாம். இந்த செய்தி 5 லிருந்து 12 வயதுள்ள சிறுவர்களை வைத்து நடத்திய ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் 27.5% உணவுக்குழாய் – வயிறு பாதிப்புகளாலும், 22.5% ஆஸ்த்மாவினாலும், இருமுகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்த்மா மற்றும் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இரவில் அதிகம் இருமுகின்றனர். இந்த மூன்று காரணங்களை 8 வார சிகிச்சையால் சரி செய்த பின் இருமல் கணிசமாக குறைந்தது.