சுயமாக ஒரு மெடிக்கல் செக்அப்

Spread the love

கழுத்து (Neck)

உடல் முழுதும் அமைந்திருக்கும் நிணநீர்ச் சுரப்பிகள் அல்லது கணுக்கள் (Lymph Glands or modes) உடலில் நோய் பரவாதவாறு தடுத்துக் காக்கின்றன. அதனால் தான் உங்களை நோய் தாக்குகின்றபோது அவை வீங்கிப் பருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கழுத்தைச் சார்ந்துள்ள உறுப்புக்கள் நோயால் பாதிப்புறும் போது கழுத்தின் இரு புறத்திலுமுள்ள நிணநீர் சுரப்பிகள் வீங்கிவிடுகின்றன. இவை தொடுவதற்கு மென்மையாகவும் இங்குமங்கும் நகரக்கூடியவையாகவும் இருக்கும். அவ்வாறு உருளாமல் கட்டிபோல் இருந்தால் உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

எனவே, நிண நீர்ச்சுரப்பிப் பரிசோதனை செய்ய பழகிக் கொள்ள வேண்டும். இதனால் பல நோய்களைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து தவிர்த்து விடலாம். உங்கள் உடல் நோயின்றி நலமாக இருக்கும்போது நிணநீர்ச் சுரப்பிகளைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆண்களை விடப் பெண்களைத் தைராய்டு குறைபாடுகள் எளிதாகப் பாதிக்கின்றன. மூச்சுக்குழலில் (Wind Pipe) நடுவில் குதிரைச் சேணம் போல் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பிளைத் தடவிப்பாருங்கள். இது அளவில் பெருத்தோ, கடினமுற்றோ இருக்குமானாலும், நொய்மையுற்றிருக்குமானாலும் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள்.

தொண்டை கட்டிக் கொள்வது என்பது (PHoasrseness/ Huskiness) எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலும் இது உற்சாகத்தில் இரைந்து கத்திக் குரல் எழுப்புவதாலும் (Larynx) எனப்படும் மிடறு அல்லது குரலொலிப் பெட்டி உறுத்தப் பெறுவதாலும், அழற்சியுறுவதாலும் சிகரெட், பீடி போன்றவற்றின் மட்டுக்கு மீறிய பயன்பாட்டினாலும் இது நேரக்கூடும். வேறு கோளாறுகள் எதுவுமில்லையென்றால் அதிகம் பேசாமல் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்தால் இது சீராகிவிடும். அடிக்கடி தொண்டை கட்டிக் கொள்ளுமானால் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கக்கூடும். எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

இதயம்

நெஞ்சு அல்லது மார்பு எனப்படும் செஸ்ட்டின் (Chest) நடுப்பகுதியில் சிறிது இடது புறம் ஒதுங்கினாற்போல் இதயம் அமைந்துள்ளது. இயல்பாகச் செயல்படும் வரை இதில் பெரிய கோளாறுகள் எதுவும் ஏற்படுவதில்லை. லப் டப் என்று இது எழுப்புகின்ற ஒலி இதன் வால்வுகள் திறந்து மூடுகின்ற லயத்தை (Rhythm) அறிவிக்கின்றன. இதை நீங்கள் தெளிவாகக் கேட்க வேண்டுமானால் ஸ்டெதஸ்கோப் ஒன்றைக் காதில் பொருத்திக் கொண்டு டயாஃபரம் எனப்படும் ஒலி வாங்கியை மார்பின் இடதுபுறத்தில் வைத்துக் கேட்க சப்தம் தெளிவாகக் கேட்கும். பெண்கள் இடது மார்பகத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மார்பகத்தின் அடிப்புறத்தில் ஒலி வாங்கியை வைத்துக் கேட்கலாம்.

இந்த லப் டப் ஒலி தவிர சிலருக்கு குறுகுறுவென்ற ஒலி (Murmur) கேட்கக்கூடும். எல்லா மர்மர் ஒலியும் தீங்கு செய்யக் கூடியவையல்ல என்றாலும் புது வித ஒலி எதுவும் கேட்டால் அதை மருத்துவரின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.

நுரையீரல் (Lungs)

இதோ ஒரு சிறிய மூச்சுப் பரிசோதனை. ஒரு தீக்குச்சியைப் பொறுத்தி அதை உங்கள் உதட்டிலிருந்து 6 அங்குல இடைவெளியில் பிடியுங்கள். முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு மூச்சு முழுவதையும் வெளியே விட்டு விடுங்கள் (Exhale) அதன்பின் மூச்சை உள்ளுக்குள் இழுக்காமல் தீக்குச்சியை ஊதி அணைக்க முடியுமா என்று பாருங்கள். ஊதி அணைக்க முடியாவிட்டால் அல்லது மிகவும் கஷ்டமாக இருந்தால் எம்ப்பைசீமா போன்ற மூச்சுக்குழல் நோய்களின் தொடக்கமாக இருக்கலாம், கவனம்.

ஸ்டெதஸ் கோப்பை மார்பின் இருபுறமும் வைத்துக் கொண்டு மூச்சை இழுத்துவிட்டுப் பாருங்கள். ஆஸ்த்துமா அல்லது எம்பைசீமா இருந்தால் கீசு மூசு என்று கீச்சிடும் ஒலி கேட்கும். இதயக் கோளாறு அல்லது நிமோனியா இருந்தால் கழகழவென்று தண்ணீருக்குள் மூச்சு விடுவது போன்ற ஒலி (Gurgle) கேட்கும்.

இருமல் பெரும்பாலும் ஒவ்வாமை தொண்டை மூச்சுக்குழல் அழற்சி அல்லது உறுத்தல் போன்றவற்றால் மட்டுமே ஏற்படும். சில வேளைகளில் கடுமையான நோய்களின் உணர் குறியாகவும் இருக்கக்கூடும். காய்ச்சலுடன் சேர்ந்து சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் அது நிமோனியா அல்லது ப்ராங்க அழற்சியைக் குறிக்கலாம். வறட்டு இருமல் ஒரு மாதத்திற்கும் மேலாக இருக்குமானால் அது வேறு ஏதாவது மறைந்திருக்கும் நோயைக் குறிக்கலாம்.

உங்கள் உயரியக்கத்திறன் (Vital Signs)

உங்கள் உடலின் இயல் வெப்பம், இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு போன்றவைகளே உங்களது நலம் அளக்கும் கருவிகளாகும். அவை உயரும் போதும், தாழ்கின்ற போதும் வழக்கத்திற்கு மாறான ஏதோ ஒன்று உங்கள் உடலில் நிகழ்கிறதென்று பொருள். இவற்றை நுணுகி அறிந்து கொள்வதால் உங்கள் உடல் நிலையில் மாறுதல் எப்போது ஏற்படுகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு போன்றவற்றைக் கண்காணித்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து வந்தால் பல கடுமையான நோய்களைத் தவிர்த்து விட இயலும்.

உடலின் இயல் வெப்பம்

உடலின் இயல் வெப்ப அளவு 37.0 சி அல்லது 98.0 தி என்றாலும் குறிப்பிட்டவேளைகளில் ஆளுக்கு ஆள் சிறிதளவு ஏற்ற இறக்கம் இருக்கக்கூடும். இது ஆண்களில் பொழுதின் வேறுபாட்டை ஒட்டியும், பெண்களில் மாதத்தின் வேறுபாட்டை ஒட்டியும் மாறுதல் அடையக்கூடும். பொதுவாகக் காலைப் பொழுதில் காலை உணவிற்கு முன்பாக எடுக்கப்படும் இயல்வெப்ப அளவு சரியானதென்று கொள்ளலாம். இதனுடன் நோயுறு கால வெப்ப அளவை ஒப்பிட்டு நிலைமையை உணரலாம்.

இரத்த அழுத்தம் (Blood Pressure)

உயர் இரத்த அழுத்தம் உணர்குறிகள் எதையும் தோற்றுவிக்காத ஒரு நோயாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தினால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது பலருக்குத் தெரிவதே இல்லை. வேறு ஏதாவது ஒரு நோய்க்கு செய்யப்படுகின்ற பரிசோதனைகளின் போதுதான் இது தெரிய வருகிறது. இதய நோய்கள், மூளைத்தாக்கு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல தீவிரமான நோய்களை இது உண்டாக்கக் கூடுமாதலால் அடிக்கடி இரத்த அழுத்தத்தை அளந்து பார்க்கவேண்டியது மிகவும் அவசியமாகிறது.

தற்காலத்தில் இரத்த அழுத்தம் அறிவதற்கென்று எலெக்ட்ரானிக் அளவைக் கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தம்முடைய இரத்த அழுத்தம் என்னவென்று அறிந்துகொள்ளத் தெரிந்தவர்களால் அதனால் ஏற்படக் கூடிய பல தொல்லைகளைத் தவிர்க்க இயலும்.

நாடித்துடிப்பு (Pulse)

நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் நாடித்துடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம். நாடி பார்ப்பது எப்படி? இதோ பாருங்கள். உங்களுடைய ஒரு கையின் இரண்டு விரல்களைப் பட்டையாக இன்னொரு கை மணிக்கட்டின் உள்பகுதியில் வைத்து நாடித்துடிப்பை அறியலாம். நாடி பார்ப்பதற்கு கட்டை விரலைப் பயன்படுத்தாதீர்கள்.

கட்டை விரலுக்கு என்று ஒரு தனி நாடித்துடிப்பு இருக்கிறது. நாடித்துடிப்பைக் கழுத்தில் பார்க்காதீர். கரோடிட் ஆர்ட்டெரி எனப்படும் இரத்தக் குழாய் அமுக்கப்பட்டால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு நீங்கள் மயக்கமுறலாம்.

ஒரு கடிகாரத்தின் விநாடி முள்ளின் உதவியோடு 15 விநாடிக்கு எத்தனை துடிப்பு என எண்ணிக்கொண்டு அதை நான்கால் பெருக்கினால் நிமிடத்திற்கு எத்தனை துடிப்பு என்று தெரியவரும். வயது வந்த ஆணின் இயல்பான நாடித்துடிப்பு 60 முதல் 80 வரையும் பெண்ணின் நாடித்துடிப்பு 60 முதல் 85 வரையும் இருக்கும்.

விளையாட்டாளர்களுக்கு இதைவிடச் சிறிது குறைவாக இருக்கக்கூடும், சில வகை மருந்துகளும் (பீட்டா பிளாக்கர்) நாடித்துடிப்பு ஒரே சீராகவும் அழுத்தமுடனும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உயரமும் பருமனும்

ஆண்டுக்கு ஒரு தடவை உயரத்தை அளந்து பாருங்கள். ஒரு சுவருக்கு எதிராக நேராக நில்லுங்கள். ஒரு சிறிய அட்டை அல்லது பென்சிலை உங்கள் தலையின்மேல் வையுங்கள். அட்டை அல்லது பென்சில் சுவற்றில் படுகின்ற இடத்தில் ஒரு புள்ளி வைத்துக் கொண்டு உயரத்தை அளந்துகொள்ளுங்கள். இயல்பாக நீங்கள் முன்பிருந்த உயரத்தை விடக் குறைந்திருந்தால் உங்களது உடலில் கால்ஷியக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது ளிstமீஷீஜீஷீக்ஷீஷீsவீs எனப்படும் எலும்பு நொய்மையின் விளைவாகவும் இருக்கலாம். பெண்களிடையே இது அதிகம் காணப்படலாம்.

பருமன் என்பது ஒவ்வொரு வாரமும் ஏன் ஒவ்வொரு நாளும் கூட மாறலாம். பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியை ஒட்டி எடையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். மாதம் ஒரு முறையாகிலும் உங்கள் எடையைச் சோதியுங்கள். உங்கள் கொழுப்பு / தசை தகவு சரியாக உள்ளதா என்பதை கிள்ளுப் பரிசோதனை மூலம் ஓரளவு அறியலாம். மேல் புஜத்தின் உட்புறத்திலும் அடிவயிற்றிலும், தொடையிலும் கிள்ளிப் பார்ப்பதற்கான இடங்களாகும்.

நாடி பார்ப்பது தேவையற்றதா?

பல வகையான நவீன நோயறியும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்து விட்ட காரணத்தால் நாடி பார்ப்பது என்னும் நெடுங்காலப் பழக்கம் சிறுக சிறுகக் கை விடப்பட்டு வருகிறது. அப்படியானால் நாடி பார்ப்பது தேவையற்றதா? என்ற கேள்வி எழக்கூடும்.

நாடி பார்ப்பது தேவைற்றது என்று முடிவாகக் கூறிவிடமுடியாது. உடல் நலம் பறிறிய விஷயங்களை நாடியின் மூலம் தெரிந்து கொள்ள இயலும். ஒவ்வொரு முறை இதயம் சுருங்கி இரத்தத்தை வெளியே தள்ளும் போது தமனிகளில் ஏற்படுகின்ற அதிர்வே நாடி எனப்படுகிறது. மணிக்கட்டுகளில் மட்டுமின்றி, முழங்கை, அக்குள், கழத்தின் இரு புறமும், நெற்றிப்பொட்டு, முழங்காலின் உட்புறம், கணுக்கால் போன்ற இடங்களிலும் நாடித்துடிப்பை அறியமுடியும்.

எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் நாடி பார்ப்பது நல்லது, சில வேளைகளில் இரண்டு மணிக்கட்டுகளிலும் உணரப்படும் நாடி வெவ்வெறாக இருக்கலாம். ஒரு கையில் தமனியில் அடைப்பு இருந்தால் இவ்வாறு மாறுபாடு தோன்றக்கூடும். இதே போன்று மணிக்கட்டிலும் கணுக்காலிலும் பார்க்கின்ற நாடி வேறுபட்டால் அடி வயிற்றிலுள்ள தமனி எங்கோ அழுத்தப்பட்டுக் குறுகி இருக்கிறதென்று பொருள்.

வயது வந்த ஒரு மனிதரது இயல்பான நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 72 (72/ min) நுண்மத் தொற்று, காய்ச்சல், தைராய்டு சுரப்பி போன்ற சுரப்பிகளின் கோளாறு இரத்த ஒழுக்கு, நீரிழிவு கோமா, பதட்டமுற்ற மனநிலை போன்ற நேரங்களில் நாடித்துடிப்பு பெரிதும் அதிகமாகலாம், பெரும்பாலான காய்ச்சல்களில் நாடித்துடிப்பு 1 டிகிரி காய்ச்சலுக்கு நிமிடத்துக்கு 8 துடிப்பு என்ற விகிதத்தில் உயரக்கூடும். அதாவது இயல்புநிலை உடல் வெப்பம் (98.4 F) இதில் ஒரு டிகிரி உயர்வு என்பது (99.4 F) அப்போது நாடித்துடிப்பு 80 இருக்கும். உடல் வெப்பம் (100.4 F) என்றால் நாடித்துடிப்பு 88 இருக்கும்.

குழந்தை பிறந்த வேளையில் நிமிடத்திற்கு 130தாக இருக்கின்ற நாடித்துடிப்பு குழந்தை வளர வளர குறையத் தொடங்குகிறது. 1 வயதாகும் போது நிமிடத்திற்கு நாடித்துடிப்பு 110ம் மூன்று வயதாகும் போது 90ம், 12 வயதாகும் போது 80ம் இருக்கும்.

குழந்தைகளின் அடிப்படை நாடித்துடிப்பு உயர்ந்திருப்பது போல் நோயுற்ற காலத்திலும் அதற்கொப்ப உயர வல்லது. 1 டிகிரி காய்ச்சலுக்கு நிமிடத்திற்கு 12 நாடித்துடிப்பு உயரக்கூடும். எடுத்துக்காட்டாக, ஒரு 8 வயது சிறுமிக்கு 104 டிகிரி காய்ச்சல் இருக்கும் போது அவளது நாடித்துடிப்பு 114/ min ஆக இருக்கும்.

காய்ச்சலின் போது நாடித்துடிப்பு உயரும் என்றாலும் எல்லாவிதமான காய்ச்சலிலும் இது உயராது. மலேரியா காய்ச்சலின் போது மேற்சொன்ன கணக்கில் நாடித்துடிப்பு உயரும். ஆனால் அதே காய்ச்சல் டைபாய்டாக இருக்குமானால் நாடித்துடிப்பு உயராது. எடுத்துக்காட்டாக வயது வந்த ஒருவருக்கு (102 F) காய்ச்சல் உள்ளது. அதாவது இயல்பான வெப்ப நிலையை (98,4) விட 3,5 டிகிரி அதிகம். அப்படியானால் 3,5*8 என்ற கணக்கில் 28 துடிப்பு அதிகரித்திருக்க வேண்டும். (அதாவது 100/ min ) அந்த எதிர்பார்ப்போடு டாக்டர் துயரரை சோதிக்கிறார். அப்போது துயரரின் நாடித்துடிப்பு 80 அல்லது 85 தான் இருக்கின்றதென்றால் அந்தக் காய்ச்சல் டைபாய்டாக இருக்கக் கூடுமேன்று டாக்டர் எளிதாகக் கணித்து விடுகிறார். நாடி பார்ப்பதால் ஏற்படும் மிகப் பேரிய நன்மை இது.

நாடித்துடிப்பின் லயமும் (Rhthym) மிக முக்கியமாகும். எப்படி என்று பார்ப்போம். இயல்பு நிலை நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 72 என்றால் 5 வினாடிக்கு 6 துடிப்பாகும். இதனடிப்படையில் நாம் ஒவ்வொரு 5 வினாடிக்கும் 6 துடிப்பை எதிர்பார்ப்போம். ஆனால் சில வேளைகளில் முதல் 5 விநாடிக்கு 7 துடிப்பும் இரண்டாவது 5 வினாடிக்கு 7 துடிப்பும் 3 வது 5 விநாடிக்கு 6 துடிப்பும் நான்காவது 5 விநாடிக்கு 6 துடிப்பும் துடிக்கக் கூடும். அதாவது ஒத்த கால இடைவெளியில் இதயம் ஒரு துடிப்பு அதிகம் அதிகரிக்கிறது.

இது லயம் தவறிய துடிப்புத்தான் என்றாலும் ஒத்தக்கால இடைவெளியில் நிகழ்வதால் இதை ஒழுங்கில்லாத ஒழுங்கான (regularly irregular pulse) நாடித்துடிப்பு என்று மருத்துவர்கள் குறிப்பிடுவர். சில வகையான இதயக் கோளாறுகளில் இது போன்ற நாடித்துடிப்புக் காணப்படும்.

வேறு சில வகையான இதயக் கோளாறுகளில் இந்த ஒழுங்கில்லாத நாடித்துடிப்பு வேறு விதமாகக் காணப்படும். முதல் 5 விநாடிகளில் 6 துடிப்பு தோன்றக்கூடும். ஆனால் அடுத்த 5 விநாடிகளில் 9 துடிப்பும் அதற்கடுத்த 5 விநாடிகளில் 13 துடிப்பும் அதற்கடுத்ததில் 4 துடிப்பும் தோன்றக்கூடும். இதை ஒழுங்கற்ற காலகதியில் தோன்றும் ஒழுங்கில்லா நாடித்துடிப்பு (regularly irregular pulse) என்பார்கள். இது அபாயமான இதயக் கோளாறு உள்ளது என்பதைக் காட்டிவிடும்.

நாடித்துடிப்பின் குணம் குறிகளைக் கொண்டே பல நோய்களைக் கண்டுபிடித்துவிடலாம். மூச்சை உள்ளிழுக்கும் போது நாடித்துடிப்பு விரைந்தும் மூச்சை வெளிவிடும்போது மெதுவாகவும் இருக்குமானால் இதயத்தை சுற்றியுள்ள பெரிகார்டியம் (Pericardium) தொடர்புடைய நோய் இருப்பதைக் குறிக்கும்.

இதே போன்று நாடித்துடிப்பு அழுத்தமாகவும், மிதமாகவும் மாறி மாறி ஏற்படக்கூடும். இதுவும் இதயத்தசை தொடர்புடைய நோய்களை குறிக்கக்கூடும். சில தேர்ந்த மருத்துவர்கள் நாடித்துடிப்பை அறிவதன் மூலமே தோராயமாக இரத்த அழுத்தம் என்ன இருக்குமென்று கூறிவிடுவார்கள். அதாவது நாடியை விரல்களால் அமுக்கி துடிப்பைக் கேட்காமல் செய்வதற்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதன் அடிப்படையில் இரத்த அழுத்தத்தைக் கூற இவர்கள் பழகியிருப்பார்கள்.


Spread the love