ஆலமரத்தின் உலகறியா மருத்துவம்!

Spread the love

ஆலமரம் மிகவும் விசேஷமான மரம். “ஆல் போல தழைத்து, அருகு போல வேரிட” என்று பெரியவர்கள் வாழ்த்துவார்கள். உயர்ந்து படர்ந்து தழைத்து வளரக்கூடிய இந்த ஆலமரம் மற்ற உயிரினங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையை பலநூறு வருடங்கள் வாழக்கூடியது. மக்களுக்கு நிழல் தரும் இந்த மரத்தின் கிளைகளில் இருந்து விழுதுகள் முளைத்து மரத்தை தாங்கும் அதிசய அமைப்புடையது. இந்த அற்புத மரத்தின் இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது என அனைத்தும் மருத்துவ பயனுடையவை. அந்த மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மருத்துவ குணங்கள்

ஆலமரத்தின் விழுது, பட்டை, இலை இவையனைத்தும் நம்முடைய உடல் பலத்தை அதிகரிக்கவும், வெப்பத்தை போக்கவும் உதவுகிறது.

ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது ஆகியவை 40 கிராமுக்கு 2 லிட்டர் தண்ணீரோடு சேர்த்து இடித்து போட்டு, அதை அரை லிட்டராக காய்த்து காலையும் மாலையும் ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கு இவையெல்லாம் நீங்கும்.

ஆலம் பால் 20 துளி, ஜீனியோடு சேர்த்து காலையில் சாப்பிட்டு புளி, காரம் இல்லாமல் தொடர்ந்து 48 நாளைக்கு சாப்பிட்டு வந்தால், கொறுக்கு நோய் தீரும்.

வாய்ப்புண், நாக்கு, உதடு வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை நீங்குவதற்கு, ஆலம் பாலை காலை, மாலை என இரு வேளையும் இவற்றின் மீது தடவி வந்தால், நல்ல பலனை காணலாம்.

ஆலம் பட்டை, அத்திப்பட்டை, அவுரிவேர்ப்பட்டை ஆகியவற்றை 40 கிராம், 10 கிராம் மிளகுடன் சேர்த்து 8 லிட்டர் தண்ணீரில் இடித்து போட்டு 2 லிட்டராக காய்த்து ஒரு வேளைக்கு 250 மி.லி என, இதை தினமும் 3 வேளை குடித்து வந்தால் பாதரச பாசானங்களின் வேகம் குறையும்.

ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை இதை 200 கிராமுக்கு 4 லிட்டர் நீரில் போட்டு காய்த்து காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வந்தால் மதுமேகம் தீரும்.

ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து (உதாரணத்துக்கு எலுமிச்சை அளவு) காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாளில் விந்து அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும்.

விழுது துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் அளவிற்கு காலையில் மட்டும் பாலில் போட்டு சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும். துளிர் இலைகள் அரைத்து 5 கிராம் அளவிற்கு தயிரில் கலந்து சாப்பிட இரத்த பேதி நீங்கும்.

கருவேல மரம், ஆலமரம் இவற்றின் குச்சியை கொண்டு பல்துலக்கும் போது பல்லின் ஈறுகள் வலிமை பெறுகிறது. ஆலங்குச்சியில் ஒருவித துவர்ப்பு தன்மை இருக்கும். மேலும் இதில் சிறிது பாலும் இருக்கும். இந்த பால் தேய்க்க, தேய்க்க பல்லிற்கு இயற்கையான உரத்தை கொடுத்து சக்தியைத் தருகிறது.

ஆலம் பழத்தை பொடி செய்து சர்க்கரையில் கலந்து சாப்பிட்டு வர மூலநோய் நீங்கும். சரும பளபளப்பிற்கு ஆலம் பழம் ஏற்றது. ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்க ஆலம் பழம் பயன்படுகின்றது. இது பெண்களின் மாதவிலக்கு பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது.

ஆலமரத்துப்பால், எருகம்பால் இவற்றை சமஅளவு கலந்து, புண்கள் இருக்கும் இடத்தில் பூசி வர அவை எளிதில் ஆறிவிடும்.


Spread the love