மாசிக்காயின் மருத்துவ குணங்கள்

Spread the love

மாசிக்காய் மற்ற மரங்களின் காயைப் போல், பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளை ஒரு வித பூச்சிகள், துளையிடும் போது, கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், அற்புதமான மருந்து.

மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். மாசிக்காயை பொடி செய்து, அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும், அதிகரத்தப் போக்கு கட்டுப்படும். மாசிக்காயை பொடித்து, 50 கிராம் எடுத்து, 800மி.லி., நீருடன் கலந்து, 10 நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை, 30 மி.லி., முதல் 60 மி.லி., வீதம் அருந்திவந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலியவை குணமாகும்.

பொதுவாக குழந்தைகளுக்கு, உரைத்துக் கொடுக்கப்படும், உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, பச்சை பச்சையாக பேதியாகும். இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு, அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வந்தால் பேதி நிற்கும்.

மாசிக்காய் சிறந்த துவர்ப்பியாகவும், ரத்தப் போக்கை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது. நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிலிட்டு, 30மி.லி., முதல் 60மி.லி., வீதம் அருந்தி வந்தால், பலன் கிடைக்கும். தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன், 3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் குணம் தெரியும்.

மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊறவைத்து, அந்த குடிநீரை வாய் கொப்பளிக்கலாம் அல்லது கஷாயம் வைத்தும் பயன்படுத்தலாம். 30&60 மி.லி., வரை அதையே உள்ளுக்கும் அருந்திவரலாம்.


Spread the love