மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை!

Spread the love

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியானவுடன் குறைந்த மதிப்பெண் எடுத்த தங்கள் குழந்தைகளின் மேல் படிப்புக்கு என்ன செய்வது என்று பல பெற்றோர் கையைப் பிசைந்து கொள்கின்றனர். தேர்ச்சி அடையாத குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் என்ன செய்து கொள்வார்களோ என்று சில பெற்றோர் பீதி அடைகின்றனர். மாணவர்களில் பலருக்கும் இதே நிலைதான். அடுத்து என்ன செய்வது, விரும்பிய கோர்ஸ் கிடைக்காதே என்று பல மாணவர்களும், பெற்றோர் என்ன சொல்வாரோ என்று சில மாணவர்களும் பீதி அடைகின்றனர். போதாக்குறைக்கு ‘தேர்வில் தோல்வி; மாணவன் பலி’ என்று செய்தி வெளியிட்டு பத்திரிகைகளும் பீதியைப் பெரிதாக்கி விடுகின்றன.

மாணவர்கள் பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண் உயர் கல்வியைத்தான் தீர்மானிக்கிறதே தவிர வாழ்க்கையை இல்லை. அதிலும் காசிருந்தால் குறைந்த மதிப்பெண் என்றால் விரும்பிய உயர் கல்விக்கும் பிரச்சனை இல்லை. மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதை திருவாசகம் போல் பெற்றோர்களும் மாணவர்களும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

பிளஸ் 2 படிக்கின்ற எல்லோரும் மருத்துவர் ஆக வேண்டும் என்று நினைத்து விட்டால் வீடு கட்ட பொறியாளர்கள் இருக்க மாட்டார்கள். எல்லோரும் பொறியாளராக வேண்டும் என்று நினைத்து விட்டால் மருத்துவம் பார்க்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். டாக்டர் மற்றும் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று நினைத்து விட்டால் மற்ற பணிகளுக்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். இதுதான் வாழ்வில் யதார்த்தமான உண்மை. ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்ற படிப்பு இருக்கிறது என்பது உண்மை. ஆனால், அந்த படிப்பை படித்தவர்கள் அதே தொழிலைத்தான் செய்கிறார்களா என்பது கேள்விக்குறி.

தோல்விதான் வெற்றிக்கு முதல்படி. தோல்விக்கான காரணம் என்ன என்று அறிந்து கொண்டு அதை தவிர்த்து முன்னேற வேண்டும். அதன் பிறகு வாழ்க்கையில் அந்த தவறு ஏற்படவே ஏற்படாது. தேர்வில் தோல்வி அடைந்து விட்டால், அடுத்த முறை தேர்வு எழுதி உயர் கல்வியை தொடரலாம். தோல்வி அடைந்து விட்டதற்காக வாழ்க்கையை தொலைக்க நினைத்தால் இன்னொரு முறை கிடைக்குமா?

நீங்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், விரும்பிய கோர்ஸ் கிடைக்காமல் போகலாம். மீண்டும் தேர்வு எழுதி அதே கோர்சை எடுக்கலாம். அல்லது தேர்வு எழுதாமலே வேறொரு கோர்சில் சேரலாம். குறைந்த மதிப்பெண் என்பதால் வாழ்க்கையை முடிக்க நினைத்தால் வேறொரு வாழ்க்கை கிடைக்குமா?

வாழ்க்கையை முடிக்க தீர்மானித்தால் உங்கள் வலி சில நிமிடங்களில் அடங்கி விடும். ஆனால், உங்கள் பெற்றோர்… உங்கள் குடும்பத்தினரின் வலி, காலமெல்லாம் தொடர்ந்து அவர்களை தீராத வேதனையில் ஆழ்த்தி துன்புறுத்தி கொண்டிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். பெற்றோர்களும் ஒரு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் தேர்வில் தோல்வி அடைந்தாலோ குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றாலோ மன வருத்தம் இருக்கத்தான் செய்யும் அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள் பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி அரவணைத்துக் கொள்ளுங்கள். அதைரியப்படுத்தாதீர்கள்.

                    தங்கள் நலன் கருதி,

      ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார்.


Spread the love