விரலில் காட்டலாம் வித்தைகள்

Spread the love

விரல் ஒப்பனை:

மேக்அப் கலையில் ஒரு முக்கிய பாகம் விரல் ஒப்பனையாகும். ஆங்கிலத்தில் Manicure  என்று கூறுவார்கள். உங்கள் விரல்களை அழகுடன் பேணுவதற்கு என்று வாரத்தில் அரை மணி நேரம் ஒதுக்கினால் கூட போதுமானது. இது தவிர, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மெல்லிய பிரஷ்ஒன்றின் மூலம் நகக் கண்களை சுத்தம் செய்து ஈரமான பஞ்சினால் துடைத்து விட்டால் போதும். நக இடுக்கில் கரி மெழுகு போன்ற கடினமான அழுக்குகள் இருந்தால் பல் குத்தும்   ( டூத் பிக் ) குச்சியினால் கவனமாகக் குத்தி எடுத்து அழுக்கை நீக்கலாம். இயன்ற வரை கைகளை ஈரமின்றி வைத்துக் கொள்ள முயலுங்கள். ஒவ்வொரு முறையும் துணிதுவைத்த பின்னரோ, பாத்திரங்கள் கழுவிய பின்னரோ கையை நன்கு துடைத்து தேங்காயெண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். Hand Cream  தடவிக் கொள்வதும் நல்லது.

விரல் ஒப்பனைக்கு வேண்டிய சாதனங்கள்:

விரல் ஒப்பனைக்கு மிகவும் அவசியமான சாதனங்களாக கீழேயுள்ள பொருட்கள் தேவைப்படும்.

1. சுத்தமான பஞ்சு

2. எமரி ( உப்புத் தாள் )

3. பல் குத்தும் குச்சி

4. ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர்

5. கியூடிகிள் கிரீம்

6. கியூடிகிள் ரிமூவர்

7. நகம் வெட்டி ( நெயில் கட்டர் )

8. நெயில் பாலிஷ் ரிமூவர்

9. ஹாண்ட கிரீம்

10. நெயில் பாலிஷ்

விரல் ஒப்பனை செய்யும் முறைகள்:

முதல் படிநிலை (Step 1):

                        சிறிதளவு பஞ்சை எடுத்துக் கொண்டு பாலிஷ்ரிமூவரில் தோய்த்து எடுத்து நகத்தின் மேல் 20 வினாடி வைத்து பழைய பாலிஷ்கரையும்படி செய்யவும். பின்னர் பஞ்சினால் நகத்தின் அடியிலிருந்து நுனி நோக்கி அழுந்தத் துடைத்து விடவும். எதிர் புறமாகத் துடைக்கக் கூடாது. கவனம்.

2-ஆம் படிநிலை (Step 2):

மெல்லிய எமரி ( உப்புத்தாள் ) பேப்பரால் நகத்தின் ஓரங்களில் பிசுறுகள் இருந்தால் ராவிச் சமன்படுத்தவும். நகத்திற்குக் கூர்மையான வடிவம் கொடுக்க விரும்பினால் எமரியில் மேலும் கீழும் தேய்க்காமல், பக்கவாட்டில் தேய்த்து, வேண்டிய அளவு குவியச் செய்து கொள்ளலாம். நகத்தின் மூலைகளில் ரொம்பவும் அழுந்தத் தேய்க்காதீர்கள். நகம் உடைய வாய்ப்புண்டு.

3-ஆம் படிநிலை (Step 3 ):

நகத்திலும், அடிப்புறத்தின் உள்ளும் க்யூ (Cuticle Cream) கிரிமை நன்கு தடவிக் கட்டை விரலால் நீவி விடுங்கள்.

4-ஆம் படிநிலை (Step  4 ):

கைகளை வெதுவெதுப்பான நீரில் முக்கி 3 நிமிட நேரம் வைத்திருங்கள். நகம் மென்மையாகட்டும். கைகளை வெளியே எடுத்து தண்ணீரை நன்கு துடைத்து விட்டு ஹாண்ட் கிரிம் தடவுங்கள்.

5-ஆம் படிநிலை (Step  5 ):

ஆரஞ்சு ஸ்டிக் அல்லது பல் குத்தும் குச்சி முனையில் சிறிது பஞ்சைச் சுற்றிக் கொண்டு, நகத்தின் உள்ளே அழுக்குகள் இருந்தால் துடைக்கவும்.

6-ஆம் படிநிலை (Step  6 ):

மஞ்சள் பாலிஷ்கிளாத் ஒன்றினால் நகத்தைத் துடைத்துப் பளபளவென்று ஆக்குங்கள்.

நெயில் பாலிஷ் இடுதல்:

நெயில் பாலிஷ் இடுவதற்கு முன்பு, நகங்கள் தயாராக்கப்படுவதற்கு முன்னர் கூறிய 6 படிநிலைளைகளையும் செய்தல் வேண்டும். நன்கு பராமரிக்கப்பட்ட கைகளுக்கு நெயில் பாலிஷ்மேலும் அழகைத் தருகிறது. பாலிஷ்இடப்பட்ட விரல் நகங்கள் பிறரது கவனத்தை உடனே கவருவதால், உங்கள் விரல் நகங்களைப் பேணி நல்ல தோற்ற அமைப்புடன் வைத்துக் கொள்வதில் அக்கறை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நெயில் பாலிஷ்களும், பாலிஷ்ரிமூவரும் நகங்களில் உள்ள இயற்கை எண்ணெய்ப் பசையை போக்கக் கூடியவை. ஆகையால் நெயில் பாலிஷ்நிறங்ளை அடிக்கடி மாற்ற முயலக் கூடாது. அதுமட்டுமன்றி, இடைஇடையே ஒரு சில நாட்களுக்கு நகங்களைப் பாலிஷ்எதுவும் இடமால் வைத்திருப்பது நல்லது.

ஒரு குறிப்பிட்ட கலர் நெயில் பாலிஷ்இடுவதற்கு முன்னர் Base Coat ( மாதிரி பூச்சு ) ஒன்று இட வேண்டும். பின்னர் அதன் மேல் தேவைக்கேற்ப இரண்டு கோட் அல்லது மூன்று கோட் (Coat) இடலாம். அப்போது தான் நகங்கள் ஒரே அளவு வண்ணத்துடன் கண்ணாடி போல் மினுமினுக்கும். அடர்ந்த வண்ணங்களுக்கு 2 கோட்டும், வெளிர் நிற வண்ணங்களுக்கு 3 கோட்டும் தேவைப்படும்.

நெயில் பாலிஷ்கள் க்ளாஸ், மேட் (Matt), ப்ராஸ்டட் (Frosted)) என்று பல விதங்களில் வருகின்றன. தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நெயில் பாலிஷ்தடவிக் காய்ந்த பின்னர் அதன் மேல் வார்னிஷ்தடவுவதும் உண்டு. நகங்களுக்கு பாலிஷ்இடும் போது நகத்தின் அடிப்பாகத்தில் தொடங்கி நுனி நோக்கி இழுத்து விடுங்கள். முதலில் நகத்தின் நடுப்பகுதியிலும், பின்னர் இரு பக்கங்களிலும் பாலிஷ்இட வேண்டும். ஒரு கோட் பாலிஷ்இட்டதும் அது காய்வதற்கு 5 நிமிட நேரம் இடைவெளி விட்டு அடுத்த கோட் இடலாம்.

நகங்களை எவ்வாறு பராமரிக்கலாம்?

பிறரது கண்களில் உடனே பார்க்கப்படுவது உங்களது கைவிரல்களும், நகங்களும் தான். இவற்றைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிகவும் அவசியம். அடிக்கடி சோப் போடுவதாலும், நகப் பூச்சு மற்றும் ரிமூவர் பேடுவதாலும் நகங்களிலுள்ள இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்து  நகங்கள் களை இழந்து போகக் கூடும். எனவே நகங்களை பாராமரிக்க, இந்த ஒரு வாரத் திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஒரு வார காலத்திற்கு மட்டும் நெயில் பாலிஷ்போடாமல் இருப்பது அவசியம்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் ஏதாவது ஒரு பிராண்ட் லோஷன் அல்லது தேங்காய் எண்ணெயை கைகளில் எடுத்து கை விரல்கள் அனைத்திலும் நன்கு தடவி நீவி விடவும். விரல்களை சில முறை மடக்கிப் பின்னர் விரிக்கவும். விரல் நுனிகளை மெதுவாக அமுக்கிப் பிடித்து விடவும். இது நகங்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் இலேசாகக் சூடாக்கிய ஆலிவ் எண்ணெயில் உங்கள் விரல் நகங்களை 5 நிமிடம் ஊற வையுங்கள். பின்னர் விரல்களை வெளியே எடுத்து அவற்றிலுள்ள எண்ணெயை கை விரல்கள் அனைத்திலும் நன்கு தடவி மசாஜ் செய்து விடவும். இயன்ற வரை கைகளில் தண்ணீர் அதிகம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி தண்ணீரில் புழங்க வேண்டியது வந்தால் வேலை முடிந்ததும் கைகளை நன்கு துடைத்து விட்டு சிறிதளவு வாசலினை கைவிரல்களிலும், நகங்களிலும் தடவி நீவி விடவும். பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளைச் செய்ய நேர்ந்தால், கைகளில் கையுறை (Gloves) போட்டுக் கொள்ளுங்கள். தினமும் ஒரு முறை காலையிலோ, மாலையிலோ சிறிதளவு எலுமிச்சை சாற்றைத் துணியில் தொட்டு நகங்களைச் சுத்தம் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது நகங்களிலுள்ள அழுக்குகளை நீக்கி வெண்மையாக்குகிறது.

நமக்கு நாமே ஒரு ஹேண்ட் கிரிம் செய்து கொண்டு அதை தினமும் ஒரு முறை கைகளிலும், விரல்களிலும் தடவிப் பின்னர் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவித் துடைக்கலாம்.

ஹேண்ட கிரீம்:

தேவையான பொருட்கள்:

முட்டை வெள்ளை -& 1

கிளிசரின் -& 2 மேஜைக் கரண்டி

தேன் -& 2 மேஜைக் கரண்டி

அரைத்த பார்லி பொடி &- 2 மேஜைக் கரண்டி

செய்முறை:

முட்டை வெள்ளையை நுரையெழ அடித்து, அதனுடன் கிளிசரிளைனயும், தேனையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் பார்லி பொடியையும் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். ப்ரிட்ஜில் வைத்து இருந்தால் இது மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு பயன்படுத்த நன்றாக இருக்கும்.

நகத்தைப் பார்த்தால் தெரியும் நோய்:

நகங்கள் எலும்புகளின் கழிவுகள் என்று ஆயுர் வேத மருத்துவ நூல்கள் கூறுகிறது. அவற்றின் நிலையை வைத்து உடலின் ஆரோக்கியத்தை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

1. நகத்தில் செங்குத்தாக தெரியும் கோடுகள் வாத தோஷ பாதிப்பைக் காட்டுகிறது. ஜீரணக் குறைவும், விட்டமின் ‘பி’ மற்றும் இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும்.

2. படுக்கைக் கோடுகள் (Horizontal Lines)  ஜீரண, அக்னி குறைபாட்டை காட்டுகிறது.

3. வெள்ளைப் புள்ளிகள் நகத்தில் தெரிந்தால், கால்சியம் அல்லது துத்தநாகம் (Zinc) குறைபாடுகள் இருக்கும்.

4. நகங்கள் கடிக்கப்பட்டு இருந்தால் நரம்பு தளர்ச்சி, தாது உப்புக்கள் குறைபாடு அல்லது வயிற்றுப் பூச்சி இவற்றைக் காட்டுகின்றன.

5. மஞ்சள் நிற நகங்கள் கல்லீரல் பாதிப்பைக் காட்டுகின்றன.

6. பொலிவிழந்த நகங்கள் ரத்தசோகை, கல்லீரல், சிறுநீரக பாதிப்புகளை காட்டுகிறது.

7. லேசான சிகப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல இரத்த ஓட்டம் உள்ளதை குறிக்கும்.

8. நகங்களில் சொத்தை விழுந்து, கருத்துக் காணப்பட்டால், உடலுக்குப் போதிய கால்சியம் ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதை குறிக்கும்.

9. நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் இரத்த அளவு அதிகமாக, நன்றாக உள்ளது என்பதை குறிக்கும்.

10. விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருக்கலாம் என்பதைக் குறிக்கும்.

11. விரல் நகங்கள் உப்பினாற் போல இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வரவாய்ப்புண்டு என்பதை குறிக்கும்.

12. விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்திலிருந்தால் ரத்தத்தில் டீ, சிகரெட் போன்றவற்றில் உள்ள நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்பதை குறிக்கும்.

நகங்களைப் பாதுகாக்க:

1. தினமும் மிருதுவான நக பிரஷினால் நகத்தைச் சுத்தம் செய்து மசாஜ் செய்யவும்.

2. வாரம் ஒரு முறை நகங்களை ( விரல் நுனிகளை ) 10 நிமிடங்கள் எலுமிச்சைச் சாறு சேர்ந்த வெதுவெதுப்பான நீரில் அமிழத்தி வைக்கவும்.

3. இதற்காக துளசி அல்லது புதினா இலைகளை இளஞ்சூடான நீரில் சேர்க்கலாம். நகங்களில் வலி இருந்தால் டெட்டால் கலந்த நீரில் ஊற வைக்கவும்.

4. நீரில் அமிழ்த்தி எடுத்த பிறகு விரல்களை துடைத்து. நல்லெண்ணெய் அல்லது எலுமிச்சை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெயால் நகங்களை மசாஜ் செய்யவும். ஆலிவ் எண்ணெயையும் சூடாக்கி, நகங்களில் மசாஜ் செய்யவும்.

நகச்சுற்று:

நகச்சுற்றில், விரல் நகத்தில் வீக்கம் ஏற்படும். தொட்டால் வலிக்கும். சீழ் நிறைந்த கொப்புளம் நகத்தைச் சுற்றி ஏற்படும். நகத்தைச் சுற்றிய சதைகளும் பாதிக்கப்படும். ஜுரம் ஏற்படலாம். கையைத் தொங்கவிட்டால் வலியும், எரிச்சலும் அதிகமாகும். எனவே கையைத் தூக்கிய படியே இருக்க வேண்டும். ஹெர்பல் கிருமி உண்டாக்கும் நகச்சுற்று, விரல் நுனியில் வீக்கம், வலி, எரிச்சலை உண்டாக்கி, பிறகு உடைந்து புண்ணாகி, ரணம் எளிதில் ஆறாமல் விரலைச் சுற்றி பரவிக் கொண்டே இருக்கும். விரல் நுனிகளில், நுண்ணிய நரம்புகளும், தந்துகிகள் எனப்படும் சிறு ரத்தக் குழாய்களும் உள்ளன. இதனால் விரல்கள் உணர்ச்சி மிக்கவை. சிறிய பாதிப்பினால் கூட வலியும் வேதனையும் அதிகம் இருக்கும்.

நகச்சுற்று (Whitlow) எவ்வாறு குணம் பெறலாம்?

1. எலுமிச்சைப் பழத்தில் ஓட்டை போட்டு விரலின் மேல் சொருகுவது, தினமும் 30 நிமிடமாவது பாதிக்கப்பட்ட விரல் நுனியில் இவ்வாறு வைத்திருக்க வேண்டும்.

2. அல்ஷி (Lisium Ussitatissimum) எடுத்து எலுமிச்சைச் சாற்றோடு அரைத்து இத்துடன் தேவையான அளவு அரிசி மாவைச் சேர்த்து, களிம்பாக செய்து கொள்ளவும். மேற்கூறிய களிம்பை பாதிக்கப்பட்ட விரலில் தடவ வலி நிற்கும்.

3. பாலேட்டை தனியாக எடுத்து, அதை சிறு துணியில் தடவி, அந்தத் துணியை நேரடியாக நகச் சுற்றின் மேல் வைத்து, அழுத்தமாக சுற்றிக் கொண்டு வரவும். மூன்று, நான்கு சுற்றுக்குப் பிறகு மறுபடியும் ( துணியின் மீதே ) பாலேட்டை பூசவும். தினமும் 2 அல்லது 3 முறை செய்யவும். பாலேட்டுடன் விளக்கெண்ணெயினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

4. நகச்சுற்றுக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பிண்டத் தைலத்தினைப் பயன்படுத்தி குணம் பெறலாம். நகச்சுற்று உள்ள விரலை நீட்டி, விரல் நுனியின் கீழ் ஒரு கிண்ணத்தை ஏந்திக் கொள்ளவும். ஒரு ஸ்பூனால் பிண்டத் தைலத்தை விரல் மீது ஊற்றிக் கொண்டேயிருக்கவும். பாதிக்கப்பட்ட இடம் முழுவதும் நனையுமாறு, விரலைத் திருப்பி, திருப்பி மேலே எண்ணெயை ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.


Spread the love