மாங்காய் சாதம்

Spread the love

காலையில் ஈஸியாகத் தயாரிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மாங்கோ ரைஸ். இதன் காரசாரமான புளிப்புச் சுவை நம் நாவின் சுவை நரம்புகளைத் தூண்டச் செய்து விடும். அந்த அளவுக்கு இதன் சுவை எல்லோரையும் இழுக்கும். இது நமக்கு அருமையான சுவையை தருவதோடு ஒரு ஆரோக்கியமான உணவாகவும் அமைகிறது. இதில் சேர்க்கப்படும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை போன்றவை நமக்கு அதிகப்படியான புரோட்டீன்களை தருகிறது. அப்படியே கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து கறிவேப்பிலையை அதன் மேல் அப்படியே தூவி சாப்பிடும் போது அந்த மாங்காவின் புளிப்பு சுவையும் இந்த தாளித்த நறுமணமும் அப்பப்பா அதன் சுவையே தனி தான். படிக்கும் போதே, நம்மில் பலருக்கு நாக்கில் எச்சில் வர தொடங்கி இருக்கும். அதை எப்படி செய்வது என்று நாம் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

                சாதம்                –     1 கப்

                துருவிய தேங்காய்   3/4 கப்

                வேர்க்கடலை         1/2 கப்

                பச்சை மிளகாய்            3

                மாங்காய்              –    1

                கறிவேப்பிலை         –    சில கொத்து

                பெருங்காயம்          –    சிறிது

                கடுகு                 –    சிறிது

                கடலை பருப்பு        –     1/2 மே, கரண்டி

                உளுந்தம் பருப்பு       –    1/2 மே.கரண்டி

                எண்ணெய்               – தேவைக்கு

                கொத்தமல்லி இலை    –   தேவைக்கு

                வெந்தயம்             –    1/2 தே.கரண்டி

                மஞ்சள்                –   1/2 தே.கரண்டி

                உப்பு                   –   சிறிதளவு 

செய்முறை

முதலில் அரிசியை அளந்து நன்றாகக் கழுவி வைத்து கொள்ள வேண்டும். பின் பிரஷ்ஷர் குக்கரை எடுத்து கழுவிய அரிசியை சேர்த்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்னும் அளவில் ஊற்றி, மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். பிறகு மூடியை திறந்து 10 – 15 நிமிடங்கள் வரை ஆற விட வேண்டும்.

சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வர வேண்டுமென்றால் அரிசி வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுக்கொள்ளலாம். ஒரு மாங்காயை எடுத்து நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை வறுத்து கரகரப்பாக நுணுக்கி வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து வதக்கவும். இப்பொழுது வேர்க்கடலையை சேர்த்து லேசாகப் பொன்னிறமாக வறுக்கவும்.

அதனுடன்  பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் இவைகளை சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும் இப்பொழுது வேக வைத்த அரிசியை சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இப்பொழுது துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும் கடைசியாக வெந்தயப் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்.

இதை சூடாக ஒரு பௌலிற்கு மாற்றி தேங்காய் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறலாம். நாவிற்கு விருந்தளிக்கும் சுவையான மாங்காய் சாதம் தயார்.

                                                                                ப்ரீத்தி


Spread the love