ஆளுமைத் திறன் அறிவோம்

Spread the love

தற்காலத்தில் ‘ஆளுமைத் திறன்’ (Management) என்பது பற்றி மக்களிடையே குறிப்பாக இளம் வயதினரிடையே அதிகமாகப் பேசப்படுகின்றது. இது பற்றி அதிகமாகப் பேசப்பட்டாலும் இதன் உள்ளார்ந்த பொருளைப் பலரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. பணத்தையோ அன்றிப் பொருளை மட்டும் கொண்டோ அல்லது கல்வியறிவு மற்றும் தொழில் நுணுக்கங்கள் கொண்டோ சாதிக்க முடியாத பல செயல்களை ஆளுமைத் திறன் என்னும் குணநலப் பண்பு ஒன்றினைக் கொண்டு சாதித்து வெற்றி பெற முடியும்.

இன்றைய இளந்தலை முறையினரின் உடனடித் தேவை ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வதுதான். தங்களது சிறப்பான ஆளுமைத் திறன் கொண்ட உலகு வியக்கும் வண்ணம் சாதனை புரிந்தவர்களை மனித வரலாற்றின் ஏடுகளில் காணலாம். உண்மையான ஆளுமைத் திறன் கொண்டு ஒரு சமுதாயத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்க முடியும்.

வாழ்க்கையின் அடையாளம் வளர்ச்சிக்காகப் போராடுவதுதான். ஒரு சிறிய விதையானது செடியாக முளைத்து நிலத்தைப் பிளந்து கொண்டு வெளியில் வருகிறது. ஆனால், முளைப்பன எல்லாம், வளர்வன எல்லாம் வாழ்க்கைக்கு வளம் சேர்த்து விடுவதில்லை. மாறாகப் பண்படாததும், வழக்கத்திற்கு மாறாததுமானவற்றை வகைப்படுத்தி வளம் சேர்த்துப் பண்படுத்தி பல்லுயிரும் வாழப் பயன்படும்படி செய்வதுவே திறமை. இத் திறமையே இறுதியில் ஆளுமைத் திறனாக உருவெடுக்கிறது.

உடலைவிட உயர்ந்தது மனம். மனம் தான் உடலை உருவாக்குகிறதே தவிர உடல் மனத்தை உருவாக்குவதில்லை. எண்ணங்களின் குவியலே மனம். எதிர்மறையான (negative) எண்ணங்கள் மனத்தைப் பலவீனமாக்குகின்றன. பலவீனமான மனம் மனிதனின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. பலவீனமான மனதைப் பலமானதாகச் செய்ய வேண்டும். பலவீனத்தை மாற்றுவதற்கான பரிகாரம் ஓயாது தோல்வியை, பயத்தை, பலவீனத்தைப் பற்றிச் சிந்திப்பதல்ல, மாறாக பலத்தைப் பற்றிச் சிந்திப்பதுதான். இதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவர் மனத்தினுள்ளும் இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்.

இதற்கு ஒரு சிறு உதாரணத்தை இங்கு கூறலாம். சுவாமி விவேகானந்தர் வாரணாசியில் சில நாட்கள் தங்கியிருந்தபோது, ஒரு நாள் அவர் துர்க்கை கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த சில குரங்குகள் சுவாமியை விரட்டத் தொடங்கின. குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் ஓடத் தொடங்கினார். இதைக் கண்ட குரங்குகள் இன்னும் உரக்கக் கூச்சல் போட்டபடி அவரைப் பின் தொடர்ந்தன. அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த வயதான துறவி ஒருவர் விவேகானந்தரைப் பார்த்து, “இளைஞனே ஓடாதே, குரங்குகளை எதிர்த்து நில்” என்றார். விவேகானந்தரும் திரும்பிக் குரங்குகளை எதிர்த்துச் சென்றார், குரங்குகள் ஓட்டம் பிடித்தன. “துன்பமோ, அபாயமோ, பிரச்சனைகளோ எழுகின்றபோது பயந்து ஓடாமல் அவற்றைத் தைரியத்தோடு எதிர்த்து நிற்க வேண்டும் என்ற படிப்பினையை இதன் மூலம் நான் பெற்றேன்” என்று விவேகானந்தர் கூறுவார்.

தற்கால இளைஞர்கள் பிரச்சனைகளைக் கண்டு திகைக்கிறார்கள். அவற்றை நேரிட அஞ்சுகிறார்கள். எளிதில் மனம் தளர்ந்து போகிறார்கள். தோற்றுப் போனோம் என்ற உணர்ச்சி அவர்களிடம் உண்டாகி விடுகிறது. இது பலவீனமான மனதின் அறிகுறி தெளிவான சிந்தனை இன்மையின் வெளிப்பாடு.

வலிமையான மனம் கஷ்டமான நேரங்களிலும் தைரியத்தைத், தன்னம்பிக்கையை இழக்காது. எதிர்மறையான எண்ணங்களுக்கும், இடம் கொடுக்காது. இயன்றவரை சிந்தனைப் போக்கினால் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும், அவற்றைத் துணிவுடன் செயல்படுத்தவும் செய்யும். ஆக்கப் பூர்வமான சிந்தனை, ஒருமுகப்பட்ட ஆற்றல், அச்சமின்மை, துணிவு, தன்னம்பிக்கை போன்றவைகளே திடமான மனத்தின் குணங்களாகும்.

மனத்திற்கு வலிமையும், புத்துணர்வும் தருகின்ற நல்ல நூல்களைப் படிப்பது நம் மனதிற்கு நல்லதொரு சக்தியை, திட உணர்வைத் தரும். தினமும் ஒரு பதினைந்து நிமிட நேரமாகிலும் இறைஉணர்வோடு தியானம் செய்யப் பழக வேண்டும். தியானப் பழக்கம் மனத்தின் திண்மையை, வலிமையை அதிகரிக்கும். மனத் தொய்வு (Depression) மன அழுத்தம் (Tension) பதை பதைப்பு (anxiety) போன்றவற்றிலிருந்து விடுவிக்கும். எதிர்மறையான உணர்வுகளைக் கட்டுப்படுத்தி மனத்தை அமைதியும் வலுவும் அடையச் செய்யும்.

புத்தி என்னும் அறிவின் வேலை நல்லவை மற்றும் தீயவைகளைப் பிரித்தறிவதாகும். மனத்திற்கு அத்தகைய சக்தி இல்லை. எதிர்ப்பட்டதையெல்லாம் மனது ஏற்றுக் கொள்ளும். பிரச்சினைகள் தீரப் பல பல குறுக்கு வழிகள் காட்டும். ஆனால், சரியானதைத்தேர்வு செய்யப் புத்தியினால் மட்டுமே முடியும். நல்லதும் கெட்டதும் கலந்ததே உலகம். நமது புத்தி சக்தியை, விவேகத்தை வளர்த்துக் கொண்டு அவற்றைப் பிரித்தறிய வேண்டும்.

தொழில் நுட்பம் முன்னேறிய இந்த கால கட்டத்தில் செல்போன், தொலைக்காட்சி, இண்டர்நெட் போன்றவை அனைத்தும் நம் வீட்டு வாசற்படியில் வந்து நிற்கின்றன. இளைஞர்கள் தமது விவேகத்தின் துணைக் கொண்டு நல்லனவற்றையே தேர்ந்தெடுக்க வேண்டும். மனத்தின் அலைபாயும் தன்மையை (Restlessness) கட்டுப்படுத்த வரம்பற்ற அறிவு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவு வேறு, திறமை வேறு, அறிவுக்கும் திறமைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்து கொண்டு அறிவின் வழியில் துணிந்து நின்று செயலாற்ற முற்பட வேண்டும். இதுவே ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வழி.


Spread the love