வயசுக்கு ஏத்த மேக்அப்

Spread the love

வயதுக்கு ஏற்ப மேக்அப் வகைகள்:

பெண்களில் பள்ளிக் கூடம் செல்பவர்களிலிருந்து நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை உத்தேசமாக நான்கு பிரிவுகளாக ( அதாவது படிக்கின்ற இளம் பெண்கள், வயது வந்த இளம் பெண்கள், நடுவயதுப் பெண்கள், நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று ) பிரிக்கலாம். அந்தந்த பிரிவுகளில் வரும் பெண்கள், அந்தந்த பருவத்திற்கு ஏற்ப பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதை நாம் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றபடி மேக்அப் முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது.

படிக்கின்ற இளம் பெண்கள்:

14 வயது முதல் 22 வயது வரையுள்ள பெண்கள் இந்தப் பிரிவில் உள்ளவர்கள் என்று கூறலாம். இவர்கள் விரைந்து வளர்கின்ற பருவத்தைச் சேர்ந்தவர்கள். விரைவான வளர்ச்சியின் காரணமாக இவர்களின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் சுரப்பிகளின் தீவிரமான செயல்பாடுகளின் விளைவாக முகம் மற்றும் சருமம் தொடர்புடைய பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். முகத்தில் பருக்கள், எண்ணெய்ப் பிசுபிசுப்பு, வியர்வை மிகுதி, எடை கூடுதல் போன்ற பிரச்சனைகள் தான் அதிகமாக ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த ஓரளவு உணவுமுறைக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆசனங்கள் உதவுகின்றன. இளம் வயதுப் பெண்களுக்கு முகப்பரு, கரும்புள்ளிகள், மரு,தடிப்பு, முகத்தில் எண்ணெய்ப் பிசுக்கு போன்றவை அதிகம் காணப்படுகிறது. இதற்கு அவர்கள் உடற்சுரப்புதான் காரணமாகிறது. இதன் காரணமாக முடிக்கால்களும், வியர்வைத் துளைகளும் எளிதாக அடைபட்டு சருமம் சொரசொரப்படையவும், பருக்கள் சிவந்த மற்றும் கருத்த புள்ளிகளும் தோன்றுகின்றன. முகத்தையும் சருமத்தையும் மிக மிகச் சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டும் தான் மேற்கூறிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். சருமம் நெகிழ்வின்றியும். ஈரப்பசையுடனும், பளபளப்புடன் இருப்பதற்கு சுத்தம் உதவி செய்யும். தினம் இருமுறை முகத்தினை மென்மையான சோப் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். வாரத்திற்கு இருமுறை ஆவி (Steaming) பிடிக்க வேண்டும். ஆரஞ்சுத் தோல்களைச் சேகரித்து நன்றாக காய வைத்து மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து சலித்து சேகரித்துக் கொள்ளுங்கள். இதில் நான்கு தேக்கரண்டி அளவு பவுடர் எடுத்து, சிறிதளவு பாலில் இட்டு நன்றாக குழைத்த பின்பு முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகம் கழுவி பூத்துவாலை அல்லது மெல்லிய துவாலையினால் துடைக்கவும். இது சருமத்தைச் சுத்தம் செய்வதுடன் வியர்வைத் துவாரங்களிலுள்ள அடுக்குகளையும் நீக்கிச் சுத்தம் செய்கிறது. இவ்வயதுப் பெண்கள் தலை முடியைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவது நல்லது. அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லையெனினும் சில வருடங்கள் கழிந்த பின்பு தலை முடியும் அழகுப்பிரச்சனையில் சிக்கல் ஏற்படலாம். மேக்அப் படு தீவிரமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேக்அப் எளிமையாக இருப்பது நல்லது. ஒரு மேக்அப் காம்பாக்ட் (Compact ) முகத்திற்குப் போதுமானதாகும். கடையில் இருப்பதிலேயே மெலிதான (Light Shade) லிப்ஸ்டிக்கை வாங்கிப் பயன்படுத்தலாம். விரும்பினால் உதடுக்கு கிளாஸ் (Gloss) வாங்கிப் பயன்படுத்தலாம். மஸ்காரா இட வேண்டிய கட்டாயம்  ஏதுமில்லை. நல்ல விளக்கெண்ணெயைப் ப்ரஷ்ஒன்றினால் தொட்டு இலேசாக இமை முடிகளில் தடவலாம். இது உங்கள் கண்களைப் பெரிதாக்கி காட்டுவதுடன் இமை முடிகள் வளர்வதற்கும் உதவும். நெயில் பாலீஷ்இட விரும்பினால் நேச்சுரல் கலர் அல்லது மிக மிக வெளிர் நிறமுள்ள பிங்க் கலரில் உள்ள பாலீஷ் இட்டுக் கொள்ளலாம்.

வயது வந்த வனிதையர்:

22 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் இப்பிரிவில் அடங்குவர். பூவிதழ் போன்ற மென்மையும், மெருகும் கொண்ட சருமத்தைப் பெறுவதற்கு பெண்கள் அனைவரும் விரும்புவது இயற்கையே. எனினும் இதைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? எத்தகைய வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வோ, முயற்சிகளையோ பெரும்பாலானவர்கள் செய்வதில்லை. பொதுவாக பெண்களுக்கு 24 வயது வரை சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இயற்கையாகவே அமைந்து விடுகிறது. 24 அல்லது 25 வயதினைக் கடக்கும் பொழுது அவர்களின் சருமம் இயல்பாக அமைந்துள்ள மிருதுத் தன்மையினையும், பளபளப்பினையும் இழக்கத் தொடங்குகிறது. தோலில் மெலிதான வறட்சி ஏற்படத் துவங்குவதுடன் தோலின் அடிப்புறத்திலுள்ள செல்கள் தம்முள் நிலைத்திருக்கச் செய்துள்ள ஈரப்பசையை ( மாய்ஸ்சர் ) நிலைநிறுத்தும் திறனை இழக்கத் தொடங்குகிறது. இதனால் தோலில் வறட்சி ஏற்படுகிறது.

ஈரப்பசை இல்லாத சருமம் நைப்பை இழப்பதுடன் வறண்டு, தடிப்புற்று, நிறம் மங்கியும் தோற்றம் தரும். மேலும் தோல் சுருக்கங்களும் ஏற்படும். இதுவே வயதுக்கு மீறின முதுமைத் தோற்றத்தினையும் உண்டாக்குகிறது. ஆகவே தான் காலத்திற்கு முந்தியே வயதான தோற்றம் வருவதைத் தடுப்பதற்கு 25 வயதிற்கு மேல் பெண்கள் சருமத்தினைப் பாதுகாக்கும் முறைகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது என்று நாம் கூறுகிறோம். அவ்வாறு பின்பற்றினால் நீண்ட நாட்கள் இளமைத் தோற்றம் மாறாமல் நமது சருமத்தை வைத்திருக்க முடியும்.


Spread the love