சுகம் தரும் சந்நிதிகள்

Spread the love

அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடை மருதூர்

காவிரி ஆற்றின் தென் கரையில், கும்பகோணத்திலிருந்து 13 A.e. தொலைவில் கும்பகோணம் – மயிலாடுதுறை வழித்தடத்தில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தத் திருத்தலம், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், பட்டினத்தார், அருணகிரி நாதர், சிலேடை புகழ் கவி காளமேகம் ஆகியோர்களின் பாடல்கள் பெற்ற பெருமையுடையது. “ஈசன் உறைகின்ற இடைமருது” என்று தேவாரத்தால் புகழப் பெற்றது.

தல புராணம்

இந்த திருத்தலத்துப் புராண வரலாற்றை கொட்டையூர் சிவக் கொழுந்து தேசிகர் இயற்றிய மருதவனப் புராணம் விரிவாக கூறுகிறது. வடமொழியிலும் மத்தியார்ச்சுன தீபிகை என்ற நூலும் திருவிடை மருதூரின் தலபுராணத்தைக் கூறுகிறது. “மத்தியார்ச்சுனம்” என்பது திருவிடை மருதூரின் வடமொழிப் பெயர்.

அகத்தியர் முதலான பல முனிவர்கள் நெடுங்காலம் பார்வதி தேவியை குறித்து தவம் செய்தும், அம்மை தோன்றவில்லை. முனிவர்களின் வருத்தத்தை போக்க சிவபெருமான், அம்பிகையை முனிவர்களின் தவம் செய்யும் வனத்திற்கு அனுப்பி, தான் முன்பு சென்று திருவிடை மருதூரில் தங்கினார். அம்பிகையை கண்ட முனிவர்கள் மகிழ்ச்சியுற்று, அவரிடம் “நாங்கள் இறைவனையும் காண வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு மனமிசைந்த உமாதேவி, ஒரு தாயின் கருணையுடன், தானும் அவர்களுடன் சேர்ந்து தவமிருந்தாள். சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றி பிறகு லிங்க வடிவில் காட்சி தந்தார். மேலும், அம்பிகை, முனிவர்களின் தவத்திற்கு இறங்கி சிவபெருமான் மான், மழுவுடன், சிரத்தில் பிறையணிந்து காட்சி தந்தார்.

காட்சி தந்தது மட்டுமின்றி, சிவபெருமான் தன்னைத் தானே பூசித்து, எவ்வாறு பூசை செய்ய வேண்டும் என்று காட்டினார். இவ்வாறு ஈசன் காட்சி தந்த மருதவனம், திருவிடை மருதூராக அமைந்தது.

திருத்தலக் குறிப்புகள்

திருக்கோயிலின் பெயர் – அருள்மிகு பெரு நலமாமுலையம்மை உடனாய அருள்மிகு மகாலிங்கப் பெருமாள் திருக்கோயில்.

மூலவர்              – அருள்மிகு மகாலிங்க சுவாமி.

தாயார்              – ஸ்ரீ பிரஹத் சுந்தர குஜாம்பிகை. (தமிழில் பெருநலமாமுலையம்மை).

மற்றொரு தாயார்       – மேருவுடன் காட்சி தரும் மூகாம்பிகை அம்மன். இந்தப் பெயரில் தான் உமாதேவி, மருதவனத்தில் முனிவர்களுடன் சேர்ந்து தவம் செய்தார். திரு மூகாம்பிகை தவநிலையில் காட்சி தருகிறார்.

தல விருட்சம்     – மருத மரம்.

கோயிலின் இதர பெயர்கள்

சண்பகாரண்யம், வில்வ வனம், ஜோதிபுரம், இடைமருது, வீரசோழபுரம், செல்வ விருத்திபுரம், மதிதியார்ச் சுனம் முதலியன.

கோயிலின் சிறப்பு அம்சங்கள்

  1. இந்த கோயில் அமைந்த திருவிடை மருதூர் ஒரு அழகான சிற்றூர். ‘திருவாரூர் தேர் அழகு’, மன்னார்குடி மதில் அழகு, திருவிடை மருதூத் தெரு அழகு” என்கிறது ஒரு வசனம். கோயிலை சுற்றி நான்கு வீதிகளும், நான்கு மாடவிளாகங்களும் அமைந்துள்ளன. நான்கு வீதிகளும் தேரோடும் வீதிகளாகும். வீதிகளில் கிழக்கு வீதியில் விசுவநாதர் ஆலயமும், தெற்கு வீதியில் ஆத்ம நாத ஆலயமும், மேற்கு வீதியில் ரிஷிபுரீஷவர் ஆலயமும், வட வீதியில் சொக்க நாதர் ஆலயமும் அமைய, நடுவில், நடுநாயகமாக மகாலிங்க சுவாமியின் திருக்கோயில் அமைந்துள்ளது. இதனால் இத்தலம் “பஞ்ச லிங்க தலம்” என்று போற்றப்படுகிறது.
  2. பிரசித்த பெற்ற தோஷங்கள் நிவர்த்தி ஸ்தலம். சித்த பிரம்மை, பிரம்மஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர தோஷம், சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும். சித்த பிரமை உள்ளவர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) கோயிலை சுற்றி வலம் வந்து வழிபட வேண்டும். கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை போல், திருவிடை மருதூர் மூகாம்பிகையும் சிறந்து விளங்குகிறார். இவரையும், மகாமேருவையும் வழிபட மனக்கோளாறுகள், உன்மத்தம், சித்தப்பிரமைகள் நீங்கும் என்று நம்பிக்கை.
  3. இத்தலத்தில் வழிபட்டால் தடைபெற்ற திருமணம் நிறைவேறும். மக்கட் பேறும் கிட்டும்.
  4. கோயிலின் கர்ப்பகிருஹத்தை சுற்றி உள்ள பிராகரங்களில் வெளிப்பிரகாரம் ‘அஸ்வமேத பிரகாரம்’ எனப்படுகிறது. இந்த பெரிய பிரகாரத்தை சுற்றி வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். சித்தப்பிரமை உள்ளவர்கள், இந்த பிரகாரத்தை சுற்ற வேண்டும். அடுத்தது கொடுமுடி பரிகாரம். இதை சுற்றினால் கைலாசத்தை சுற்றி வந்த பலன் கிடைக்கும். மூன்றாவது பிரணவ பிரகாரம் இங்கு உள்ளது ஸ்தல விருட்சம்.
  5. காசிக்கு இணையாக கூறப்படும் 11 சிவத்தலங்களில் திருவிடை மருதூரும் உண்டு.
  6. இத்தல விநாயகர் “ஆண்ட விநாயகர்” எனப்படுகிறார்.
  7. இத்திருத்தலத்தில் உள்ள நந்தி பெரியது. சுதையால் அமைக்கப்பட்டது.
  8. இந்த திருக்கோயில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்தது. 7 கோபுரங்கள், 7 பிராகாரங்கள் கொண்டது.
  9. பிரம்மஹத்தி தோஷம் – இரண்டாம் (சோழ கோபுரம்) கோபுர வாசலில் ‘பிரம்மஹத்தி’ ஒரு மாடத்தில் உள்ளது. இதைப் பார்க்க, மாடிப்படிகளின் வழியே ஏறி மாடத்தில் பிரம்மஹத்தியை காணலாம்.
  10. இரண்டாம் பிரகாரமான பிரணவ பிரகாரத்தில் அமைந்துள்ள “சிங்கக்கேணி” பார்க்க வேண்டிய ஒன்று. சுதையில் செய்யப்பட்ட சிங்க வடிவில் பெரிய முகப்பில், வாயில் அமைக்கப்பட்ட படிகள் மூலம் கேணியை (கிணறை) பார்க்கலாம்.
  11. கைலாய மலையை இராவணன் தூக்க முயற்சிக்க, அவனை தனது கால் கட்டை விரலால் சிவபெருமான் அமுக்க, சாம வேதத்தை பாடி சிவனை மகிழ்வித்து விடுபட்டான் என்ற கதை அனைவருக்கும் தெரிந்தது. இதை சித்தரிக்கும் வகையில், உட்பிரகாரத்தில் கைலாயம் போல் சிறுகுன்று ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் முகப்பில் இராவணன் வடிவம், கையில் வீணையுடன் காணப்படுகிறது. சிறுகுன்றின் பக்கவாட்டில் உள்ள சில படிகள் மூலம் ஏறினால் சிவபெருமான், பார்வதியின் வடிவ சிலைகளை காணலாம். இறைவனின் கால் கட்டை விரல் மலையை அழுத்துவது போல் அமைந்திருப்பதையும் காணலாம். இந்த இடத்தில் வரும் காற்றினால் இராவணனின் வீணை இசைக்கப்பட்டு, வெளிப்பிரகார சுவற்றில் உள்ள துவாரங்களில் காது வைத்து கேட்டால் ஒலி கேட்கும்.
  12. திருவெண்காடர் என்ற இயற்பெயரை கொண்ட பட்டினத்தார் பெரும் செல்வந்தராக இருந்தவர். திருவிடை மருதூரின் வாழ்ந்த சிறந்த சிவபக்தன் சிவசருபர் என்பவர் வறுமையால் வாடுவதை கண்ட, மகாலிங்க பெருமான் மருத மரத்தடியில் குழந்தையாக எழுந்தருளினார். சிவசருபர் அந்த குழந்தையை மக்கட்பேறில்லாத திருபெண்காடர் தம்பதிகளுக்கு கொடுத்து, அதற்கு குழந்தை மருதவாளர் என்ற பெயரில் பெரியவனாகி, கடல் வாணிகம் செய்து திரும்பி வரும் போது தன் தந்தை திருவெண்காடரிடம் ஒரு பெட்டியை தந்தார். அதை திறந்து பார்த்ததில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்று எழுதப்பட்ட ஒலையும், கூடவே காதற்ற ஊசியும் இருந்தது. இதைக் கண்ட திருவெண்காடர் மனம் தெளிந்து, பட்டினத்தார் என்ற பெயரில் முற்றும் துறந்த துறவியானார். இவர் வடக்கு நாடுகளில் பயணம் செய்யும் போது உஜ்ஜயின் அரசர் பத்திரகிரி இவரது சிஷ்யரானார். பட்டினத்தாரும், பத்ரகிரியாரும் திருவிடை மருதூர் திரும்பி அங்கு சிவயோகத்தில் ஆழ்ந்தனர். இங்கே பத்திரகிரியார் முக்தி அடைந்தார். பட்டினத்தார் திருவொற்றியூரில் முக்தி பெற்றார். பட்டினத்தார் “திருவிடை மருதூர் மும்மணிக் கோவை” என்ற பதிகத்தை இயற்றினார். இருவரும் சிலையையும் கோயிலில் காணலாம்.
  13. இந்த திருத்தலத்தில் 32 தீர்த்தங்கள் உள்ளன. திருக்கோயிலின் அருகில் காருண்யாமிர்த தீர்த்தம் எனும் திருக்குளம் அமைந்துள்ளது.
  14. இந்த கோயிலில் உள்ள தேர், தமிழ்நாட்டு கோயில்களில் உள்ள மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். இதன் உயரம் தரை மட்டத்தலிருந்து தலைக்கலசங்கள் வரை 89 அடிகளாகும். தேரின் மேலே உள்ள கொடிக்கம்பம் உயரம் 24 அடி. தேரில் பூட்டப்படும் பொம்மைக் குதிரைகளின் அளவு – நீளம் 251/2 அடி, உடல் சுற்றளவு 8 அடி. தேரில் மேலே சுவாமி இருக்கும் பீடத்தின் அளவு 14.5 ஙீ 14.5 அடிகளாகும். தேரை இழுக்க தேவையான மனிதர்கள் 5000 பேர்! இழுப்பதற்கான வெளிக்கயிறு வடங்கள் நீளம் 1000 அடி, சுற்றளவு 21/2 அடி. அழகான பல சிற்பங்கள் தேரில் செதுக்கப்பட்டுள்ளன.
  15. மருதவனத்தை அழித்து அங்கு இந்த கோயிலை எழுப்பியது வீரசோழராசன் என்று சொல்லப்படுகிறது. இங்கு வந்து இறைவனை வழிபட்டதால் பிரம்ம ஹத்திதோஷம் நீங்கப்பட்ட வரகுண பாண்டியன், இந்த கோயிலுக்கு ஏராளாமான திருப்பணிகள் செய்துள்ளார். மேற்கு கோபுரம் மற்றும் கொடுமுடி பிரகாரம் முதலியன இவரால் கட்டப்பட்டவை.
  16. கோயிலின் சரித்திரத்தையும் தமிழ்நாட்டு சரித்திரத்தையும் ஒரளவு அறிய, இந்தக் கோயிலி உள்ள 151 கல்வெட்டுகள் உதவுகின்றன. தவிர பல செப்பேடுகளும் உள்ளன.
  17. திருவிழாக்கள் – மாதந்தோறும் இந்த திருத்தலத்தில் திருவிழாக்கள் சிறப்பாக நடக்கும். தை மாதத்தில் நடக்கும் தைப்பூச திருவிழாவும், வைகாசி மாதத்தில் நடக்கும் கல்யாண உத்சவமும் பிரசித்தி பெற்றவை தைப்பூச விழப 22 நாட்கள் நடக்கும். வைகாசி மாத வசந்த உற்சவம். 10 நாட்கள் நடக்கும்.
  18. திருவாவடு துறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த திருக்கோயில், ஆதினத்தால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அழகான ஊரில் அமைந்துள்ள இந்த அருமையான கோயில் பிரசித்த பெற்ற சைவப் பெருமான்களால் பாடப்பெற்ற புண்ணிய தலம். மகாலிங்கேசுவரை வழிபட்டு மன அமைதி பெறலாம்.


Spread the love