மகிழ்ச்சி தரும் மரம்

Spread the love

மகளிர் விரும்பி அணியும் மணமுள்ள மலரைத் தருவது மகிழ மரம். வடமொழியில், இதன் பலபெயர்களில் ஒன்று “மது தந்தா” (இனிய வாசனை). நன்றாக பரவி வளரும் பெரிய மரம். மணம் தரும் மரம் மட்டுமல்ல; பல மருத்துவப் பயன்களையும் தருகிறது மகிழ மரம். சாதாரணமாக 50 அடி உயரம் வளரும்.

அழகான மகிழ மரம் இந்தியாவெங்கும் பயிராகும். எப்போதும் பசுமையான மகிழ மரம் கரடுமுரடான அடிமரம் கொண்டது. அடர்த்தியாக கிளை, இலைகள் உடையது. பளபளப்பான, பசுமையான இலைகள் நீண்ட வட்டவடிவத்துடனும் குறுகிய முனையுடனும், மெல்லிய ‘நரம்புகளுடனும்’ காணப்படும். வெண்ணிற நறுமணம் வீசும் பூக்கள் தட்டையான நட்சத்திர வடிவில் தனியாகவோ இல்லை கொத்தாகவோ பூக்கும். பூக்காம்புகள் மிருதுவான, மெல்லிய, சிறிய “முடிகள்” உள்ளவை. மொட்டுக்கள் சிறுமுட்டை வடிவானவை. பூமகுடம் (Corolla) இரு வட்டங்களாக, உள்வட்டம் 8-10 நீண்ட செவ்வகமான இதழ்களுடனும், வெளிவட்டம் உள்வட்டத்தைபோல் இருமடங்கு இதழ்களுடன் காணப்படும். எட்டு மகரந்த கேசரங்கள் (Stamen) உள் வட்டத்திலிருக்கும். பழங்கள் – சதைப்பற்றுடைய பழங்கள் ஐந்து புல்லிகளால் கொண்ட புல்லிவட்டத்துடன் (சிணீறீஹ்ஜ்) பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு விதையுடன், மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.

இந்தியாவெங்கும் விளையும் மகிழமரம் மேற்குபகுதிகளில் தோன்றியது. கிருஷ்ணா நதியின் தென் புறத்திலிருந்து தொடங்கி, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களிலும், மேற்கு கடற்கரை ஒரங்களிலும் அதிகம் காணப்படுகிறது. அந்தமான், பர்மா (மியான்மிர்), ஸ்ரீலங்காவிலும் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையோரம் வளரும் மரங்கள், கிழக்கு தொடர்ச்சி மலையில் வளரும் மரங்களை விட உயரமாக, பெரிதாக வளர்கின்றன. கிழக்குப்பகுதிகளில் மகிழ மரம், வாணிட சிவப்பு மண் பகுதிகளில் வளர்வதால், வளர்ச்சி, உயரம் குறைவு, அந்தமானில் மகிழமரம் 35 மீட்டர் உயரம் வளர்கிறது.

அழகுக்காகவும், மணம் வீசும் மலர்களுக்காகவும், வீட்டுதோட்டங்கள், பூங்காக் களில் மகிழ மரத்தை நடுவது வழக்கம். சாலையோரமும் நிழல் தரும் மரமாக நடப்படுகிறது.

தாவரவியல் விவரம்

தாவரவியல் பெயர் – Minusops Elengi

குடும்பம் – Sapotaceaeசம்ஸ்கிருதம் – வகுளா, முகுளா, மதுகந்தா இந்தி – முல்சாரி ஆங்கிலம் – Bullet wood, spanish cherry, Indian Medlar treeதமிழில் வேறு பெயர்கள்- வகுளம், இலஞ்சி, கேசரம் பயன்படும் பாகங்கள் – அடிமரம், மரப்பட்டை, இலைகள், பூக்கள், பழம், விதைகள்

பயன்கள்

•     மரப்பட்டை சுருங்கக்செய்யும் துவர்ப்பு மருந்து. (Astringent) ஜுரங்களை குணமாக்க உதவும். சீதபேதிக்கு மரப்பட்டை கஷாயம் நிவாரணமளிக்கும். பயோரியா, பலவீனமான ஈறுகள், தொண்டைப்புண் இவற்றுக்கு மரப்பட்டை கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளிக்கவும். மரப்பட்டை பொடியுடன் வேறு சில மூலிகைகள் சேர்க்கப்பட்டு ‘பல்பொடி’ தயாரிக்கப்படுகிறது. மரப்பட்டை பெண்களின் குழந்தை பெறும் திறனை அதிகரிக்கும். பட்டை உடல் வெப்பத்தை அகற்றும். உடலை உரமாக்கும்.

பூக்களும் பழங்களும் குளிர்ச்சி யானவை. துவர்ப்பு மருந்துகள் (Astringent). மரப்பட்டை போலவே பேதிக்கு மருந்தாகும். தலைவலி, மூக்கில் ஏற்படும் பிரச்சனைகள், ரத்தக்கோளாறுகள் இவற்றை சரிசெய்யும். முற்றாத பழத்தை (காயை) மென்று வந்தால் பற்கள் பலமடையும். பழங்களிலிருந்தும், பூக்களிலிருந்தும், வாயில் போட்டு கொப்பளித்தால் வாயை சுத்தம் செய்யும் மருந்து தயாரிக்கப்படுகிறது. பூவிலிருந்து ஆவியாக்கி குளிரச்செய்து எடுக்கப்படும் நீர், உற்சாகமூட்டும். வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பயனாகிறது. தவிர மனச்சோர்வு, சோகம் இவற்றை போக்கும். மகிழ்ச்சியைத் தரும். காயங்களுக்கு மருந்தாக, மகிழப்பூக்களும் பழங்களும் பயன்படுகின்றன. பூவை குடிநீர்விட்டு குடித்தால் உடல் சூடு தணியும். ஆண்மை பெருகும். பூவை உலர்த்தி பொடி செய்து, முகர்ந்தால் தலைவலி போகும். பழத்தை உண்டாலும் தலைவலி போகும்.

விதை- விதையிலிருந்து கிடைக்கும் எண்ணை “பெயிண்ட்” தொழிலில் பயனாகிறது. விதைகள் ஆண்மையை பெருக்கும். இதற்கு விதையை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து உண்ண வேண்டும். விதையை சுட்டு பற்களை துலக்கினால், பல் நோய்கள் வராது.


Spread the love