சுவாச மண்டலம் சீர் பெற ஆயுர்வேதம் மூலிகைகள் – 1

Spread the love

துளசி

வேம்பை மூலிகைகளின் அரசன் என்றால், துளசி மூலிகைகளின் அரசி, தொன்று தொட்டு மருத்துவத்தில் பயன்பட்டு வரும் துளசி, ஒரு புனிதச் செடியாக வீட்டில் வளர்த்து வணங்கப்படுகிறது. துளசி இல்லாத இந்திய வீடுகள் அபூர்வம். “துளசியின் இலைகள், பூக்கள், பழங்கள், வேர், கிளைகள் தண்டு எல்லாமே புனிதமானது. அது இருக்கும் மண் கூட புனிதமானது” என்கிறது 5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பத்ம புராணம்.

துளசியின் தாவிரவியல் பெயர் – Ocimam Sanctum, ஆங்கிலத்தில் – Holy Basil. திருமாலுக்கு உகந்தது துளசி. துளசி செடி இல்லாத கோயில் இல்லை. கோயில்களில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில், எப்போதும் துளசி இலைகள் சேர்க்கப்படும். துளசி, வீடுகளில் “துளசி மாடம்” என்ற உயரமான தொட்டி போன்ற அமைப்பில் நடப்பட்டு, கவனமாக வளர்க்கப்படுகிறது.

உலர் இருமலுக்கு

ஒரு கைப்பிடி துளசி இலைகளுடன், சிறிய அளவில் தோல் சீவிய இஞ்சித் துண்டு, சேர்த்து மிக்ஸியில், களிம்பாக அரைக்கவும். களிம்பை (மிளகு அளவில்) சிறு உருண்டைகளாக உருட்டி, காற்றுப் புகாத பாட்டில் / டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது இந்த உருண்டைகளை (ஒன்று (அ) இரண்டு) பொடித்து பொடியாக செய்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து தினமும் 3 வேளை 4 (அ) 5 நாட்களுக்கு தரவும். குழந்தைகளுக்கு இந்த மருந்து நல்லது. “ஈர” இருமலுக்கு 10 (அ) 12 துளசி இலைகளை அரைத்து ‘ஜுஸை’ எடுத்துக் கொள்ளவும். இதை தேனுடன் (1 தேக்கரண்டி) கலந்து தினமும் இரு வேளை 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளவும்.

10 (அ) 15 கருந்துளசி இலைகளை நசுக்கி, தேனுடன் சேர்த்து உண்ண, ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும்.

தொண்டைப் புண்ணுக்கு, துளசி கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தால் நிவாரணம் கிடைக்கும்.

திப்பிலி

தோற்றம்

செடி வகையை சேர்ந்தது. புதராக வளரும் வெற்றிலை போல் சிறிய இலைகளுடன் இருக்கும். இதன் கிளைகள் பல கணுக்களை கொண்டு வளரும். ஒவ்வொரு கணுவிலிருந்தும் சிறு கிளைகள் தோன்றி பழங்களை தாங்கியிருக்கும். திப்பிலி செடியின் பழம் ‘அரிசித் திப்பிலி’ எனப்படும். திப்பிலி பீகாரிலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தராஞ்சல் (நைனிதால்) மிகுதியாக விளைகிறது. பீகாரில் விளையும் திப்பிலி சிறந்த தரமுடையது.

பயன்கள்

திப்பிலி சுவாச மண்டல கோளாறுகளுக்கு நல்ல மருந்து. பிராங்கைடீஸ், இருமல், ஜலதோஷம் இவற்றை போக்கும். பொடிக்கப்பட்ட திப்பிலி பழங்களை ஒரு டம்ளர் பால் மற்றும் 4 டம்ளர் நீருடன் சேர்த்து, ஒரு டம்ளராக சுண்டும் வரை காய்ச்சவும். பிறகு இந்த கஷாயத்தை வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து ஒரு நாளில் 3 வேளை பருகவும். கபத்துடன் கூடி இருமல் விலகும்.

திப்பிலி தூளை வெல்லத்துடன் சேர்த்து உட்கொண்டால் இருமல், இழுப்பு குறையும்.

திப்பிலி பசியை தூண்டும். அஜீரணம் போன்ற வயிற்று கோளாறுகளுக்கு நல்லது. சுக்குடன் சேர்த்து செய்யப்படும் ‘சுக்கு திப்பிலி லேஹியம்’ பிரசித்தி பெற்றது.

பல நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் ‘திருகாட்டு’ மருந்தில் திப்பிலி ஒரு முக்கிய அங்கம்.

திப்பிலி மூல மருந்தாக கொண்டு தயாரிக்கப்படும் சில மருந்துகள்
பிப்பல்யாத்யாவஸம்-க்ஷயம், குன்மம், இளைப்பு, பெருவயிறு இவற்றுக்கு நல்லது.

பிப்பிலி மூலாத்யரிஷ்ம்-க்ஷயம், இருமல், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம் இவற்றுக்கு கொடுக்கப்படும் மருந்து.

முக்கனி மூலிகை – திரிபாலா

திரிபாலா ஆயுர்வேதத்தில் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் அற்புத மருந்து. சம அளவில் நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் கலந்த மூலிகை கலவை. இந்த மூலிகை கலவை வயிற்றை சுத்திகரித்து உடலிலிருந்து நச்சுப் பொருட்களை நீக்கும். தொன்மையான ஆயுர்வேத நூல்களில் திரிபாலா ஜீரண சக்தியை அதிகரித்து உடல் சக்தியை கூட்டும் அற்புத மருந்தென்று புகழப்படுகிறது.

முதலில் திரிபலா மருந்தில் இருக்கும் மூன்று மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

ஆயுர்வேதம் டுடே மார்ச் 2014


Spread the love
error: Content is protected !!