நெல்லி
இந்தியன் கூஸ்பெர்ரி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெல்லி சமஸ்கிருதத்தில் ‘தத்திஃபாலா’ “பூமியின் எதிர் காலம்” என்றும் ஹிந்தியில் ‘ஆம்லா’ சுத்தமானது என்றும் பெயர் பெற்றுள்ளது. தாவரவியலில் ‘எம்பிளிக்கா அஃபிஸினேலிஸ்’ Emblica officinalis என்று வகைப்படுத்தப்பட்டு ‘எம்பிளிமிரோ பாலன்’ Embilic myrobalan என்று பொதுவாக விளங்குகிறது.
அன்றாட வாழ்வில் எளிமையாக கிடைக்கக் கூடியதும் பல நற்பலன்களை மனிதனுக்கு தருகின்ற மூலிகைகளின் முதலிடத்தை பெறுவது ‘நெல்லி’யாகும். சரகர் தனது ஆயுர்வேத நூலில் நெல்லியை சிறப்பாக விளக்கி நெல்லி மனிதனுக்கு அனைத்து நோய்களையும் எதிர்க்கும் திறனை தருகிறது என்றும் நெல்லி வயது முதிர்ச்சியை காலம் தாழ்த்துகிறது என்றும் பெருமைப்பட எழுதியுள்ளார்.
ஆயுர்வேதத்தில் ‘சியவனபிராஷ்’ போன்ற தயாரிப்புகளில் நெல்லி முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த லேகியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
கடுக்காய்
கடுக்காய் பல மருத்துவ குணங்கள் உடையது.
ஆயுர்வேதத்தின் தேவ வைத்தியராக வணங்கப்படும் தன்வந்திரி பெருமான் எப்பொழுதும் கடுக்காயை கைவசம் வைத்திருப்பாராம். எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கொடுக்கும் அரிய குணத்தை பெற்றிருப்பதால் கடுக்காய் வடமொழியில் ‘அரிதகி’ என்றழைக்கப்படுகிறது.
கடுக்காயின் ஆங்கில மருத்துவப்பெயர்: ‘Terminalia chebula’ Black Myrpbalan என்றும் அழைக்கப்படுகிறது.
கடுக்காயின் மருத்துவ பயன்கள்
இருமல் நீங்கும். சுவாசநோய்கள் குணமாகும். மூலநோய் இரைப்பை நோய், வயிற்றுக் கோளாறுகள், குரல் கம்மல், இருதய நோய்கள், மல பந்தம், கண்வலி, தொண்டைப்புண், போன்றவற்றுக்கு கடுக்காய் உபயோகமாகும். நரைநீங்க கடுக்காய் தைலம் பயன்படுகிறது.
கடுக்காயை வாயிலடக்கிக் கொண்டால் இருமல் நிற்கும். இந்த வீட்டுவைத்தியம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்த வீட்டு வைத்தியம்.
தான்றிக்காய்
தான்றிக்காயின் தாவரவியல் பெயர் – Terminalia Balerica / Beleric Myrobalan, சமஸ்கிருதம் – பஹீரா, இந்தி – பஹேரா, தமிழில் இதர பெயர்கள் – அக்கம், விபீதகம், தானிக்காய், தான்றிக்காய் மர வகுப்பை சேர்ந்தது. இந்தியாவின் வறண்ட பிரதேசங்களைத் தவிர 3000 அடி உயரத்தின் கீழே உள்ள எல்லா பிரதேசங்களிலும் விளையும்.
இதன் பொது குணங்கள் – கோழையை அகற்றும், மலமிளக்கி, டானிக்
மருத்துவ குணங்கள்
உடலுக்கு அழகையும், ஒளியையும் கொடுத்து மூன்று தோஷங்களையும் தன்னிலைப்படுத்தும்.
தான்றிக்காயை வறுத்து கோதுமை மாவுடன் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, வாயில் அடக்கிக் கொண்டால் தொண்டைப்புண், இருமல், கோழை இவை விலகும். தனித்தனியாகவே இந்த மூன்று மூலிகைகளும் சிறந்தவை. ஒவ்வொன்றும் மூன்று தோஷங்களை சீரான நிலையில் வைக்கும் திறனுடையது. ‘வாத’ தோஷத்திற்கு கடுக்காய் உகந்தது. மிதமான மலமிளக்கி. நரம்புகளை வலுப்படுத்தும்.
நெல்லிக்கனி ‘பித்த’ தோஷ கோளாறுகளை கண்டிக்கும். இதுவும் மிதமான மலமிளக்கி. உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்கும். கபதோஷ கோளாறுகளுக்கு (ஆஸ்துமா, இருமல் ஒவ்வாமை) தான்றிக்காய் நல்ல மருந்தாகும். எனவே இந்த மூன்று மூலிகைகளும் கலந்த திரிபாலா மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைக்கும். திரிபாலா கபத்தை கரைத்து இருமலை குணப்படுத்துகின்றது.
எச்சரிக்கை
திரிபாலா சூரணத்தை கர்ப்பிணிகள் உபயோகிப்பதை தவிர்க்கவும். அதே போல் பேதியாகும் போது திரிபாலா கொடுக்கப்பட கூடாது. இது உடல் எடையை குறைக்க உதவுவதால், உடல் எடை குறைவாக உள்ளவர்கள் திரிபாலாவை குறைவாக பயன்படுத்த வேண்டும்.