நுரையீரல்கள் (Lungs)

Spread the love

சுவாச மண்டலத்தின் முக்கிய அவயம் நுரையீரல் ஒன்றுக்கு இரண்டாக அமைந்தது. மார்புக் கூட்டின் வலது பக்கத்தில் ஒன்றும் இடது பக்கத்தில் ஒன்றுமாக நுரையீரல்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. நுரையீரல் மீட்சி தன்மையுடைய (Elastic) கூம்பு வடிவமானது.

இடது நுரையீரல் வலது நுரையீரலை விட சிறியது. காரணம் இதயத்தின் அருகே குறைந்த இடத்தில் இடது நுரையீரல் இருக்கிறது. வலது பக்க நுரையீரல் 3 கதுப்புகளாகவும் (Lobes) இடது நுரையீரல் 2 கதுப்புகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

நுரையீரலை பாதுகாக்க ‘ப்ளூரா’ (Pleura) எனும் திரவம் அடங்கிய ஜவ்வுகளால் ஆன பை போன்ற அமைப்பு உதவுகிறது. ப்ளூரா மார்புக் கூட்டின் உட்புறத்தையும் காக்கிறது. ப்ளூரா மூடப்பட்டதால் நுரையீரல்கள் அசைய முடிகிறது.

நுரையீரலின் முக்கிய பணி – காற்றுப் பரிமாற்றம். இதற்காக நுரையீரல்கள், பிராங்கையல் குழாய்கள், காற்றுப் பாதைகள், காற்றுப் பைகள், தசைகள், இரத்த நாளங்கள், நரம்புகள், நிணநீர்க் குழாய்கள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளன.

பிராங்கையல் குழாய்கள் பல தடவை கிளைகளாக பிரிந்து பின் மிகச் சிறிய காற்றுக் குழாய்களாகின்றன. உடலிலேயே சிறிய தந்துகிகளாகின்றன. இவை 1/2 மி.மீ. அளவு தான் குறுக்களவு இருக்கும். இந்த குறுகிய தந்துகிகள் Bronchiole  எனப்படுகின்றன. இவற்றின் சுவர்களில் சளிப்படலமோ, குருத்தெலும்போ கிடையாது. ஒவ்வொரு முடிவில் ஆயிரக்கணக்கான காற்றுப் பைகள் (Airsacs) இருக்கும். இவற்றை Alveoli என்கிறோம். இலட்சக்கணக்கான Alveoli களை பரப்பினால் 100 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கும். அல்வியோவை சுற்றி வலை போல் நுண்ணிய தந்துகிகள், (Capillaries) அடர்த்தியாக இருக்கும்.


Spread the love