கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன், முதலில் தோன்றிய ஒற்றை செல் உயிரினங்களில் மூச்சு விடுதல், ஆக்ஸிஜன் உட்கொள்ளுதல் போன்ற செயல்பாடுகள் இல்லை. உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் முன்னேற்றத்தால் இதற்கென்று தனியான உறுப்புகள் ஏற்பட்டு, சிறப்பாக செயல்பட்டன. மனித நுரையீரல் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு.
ஆனால் சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்தும் தொழிற்சாலை உமிழ்கின்ற புகை, பட்டறை கழிவுப் பொருட்கள், சுரங்கங்கள் போன்றவை மனிதனின் மூச்சு மண்டல உறுப்புகளை நேரடியாக பாதிக்கின்றன. பணி சார்ந்த நுரையீரல் நோய்கள் உண்டாக காரணம் – கெடுதியான துகள்கள், மூடுபனி, காற்றின் ஆவிகள், வாய்வு – இவை நிறைந்த சூழ்நிலை, தவிர இவற்றை நுகர்வது.
உடலின் பிற உறுப்புகளைப் போல் அல்லாது, நுரையீரல் மிக எளிதில் நச்சு வாயுக்களால் சேதமுறக் கூடியது. இச்சேதம் நிரந்தரமானதாகவும் ஆகிவிடக் கூடும். தொழில் சார்ந்த நுரையீரல் நோய்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்வோர்களிடையேயும் கனரகத் தொழிற்கூடங்களில் வேலை செய்வோர்களிடையேயும் தான் இருப்பதாகத் தொழிற்புரட்சிக்குப் பின்னர் கருதப்பட்டது.
இவை மட்டுமே தொழில் சார்ந்த நுரையீரல் நோய்கள் (Preumoconioses) என்று அழைக்கப்பட்டன. தற்போது கிராபைட், சிலிகான், ஆஸ்பெஸ்டாஸ், செயற்கை இழைகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் டால்க், கயோலின், களி, மைக்கா, சிலேட், சிமெண்ட் போன்ற பொருள்களால் நுரையீரல் நோய்கள் தோன்றக்கூடும்.
1. சிலிகோஸிஸ் (Silicosis):
மண் மற்றும் பாறைத்துகள்களை நுகர்வதால் ஏற்படும் நுரையீரல் நோய். இது கல், உலோக (நிலக்கரி தவிர) சுரங்கத் தொழிலாளிகளுக்கு அதிகமாக ஏற்படும் நோய். சுரங்கங்களில், பாறைகளை தகர்க்க வெடி மருந்துகள் உபயோகிக்க பல துளைகளை உண்டாக்க வேண்டும். இந்த துளைகள், அழுத்தப்பட்ட காற்றினால் (Compressed air) வேலை செய்யும், கை தாங்கி ‘டிரில்’ எந்திரங்களால் (Hand drill machines) போடப்படும் போது, வெளிவரும் பாறை துகள் (பெரும்பாலும் சிலிகா/குவார்ஸ் (Quartz) நுகர்வது தவிர்க்க முடியாத தொன்று. இதற்காக ‘டிரில்’ செய்யும் போதே தண்ணீரும் சேர்த்து (தூசி கல் எழும்பாவண்ணம்) அனுப்பப்படும் டிரில் மெஷின்கள் உள்ளன. பல சுரங்கங்களில் தண்ணீரால் புழுதியை அடக்கும் முறைகளை கையாள்வதில்லை.
இதனால் ‘டிரில்’ செய்யும் தொழிலாளிகளுக்கு நேரடியாக சிலிகா தூள் மூச்சுக் குழாய் வழியே நுரையீரலை தாக்கும். மணலில் உள்ள ஒரு பொருள் ‘சிலிகா’. உலோக சுரங்கங்களில் பணிபுரிபவர்கள், பாறைகளை வெட்டுபவர்கள், குயவர்கள், வார்ப்பட அலைகளில் வேலை செய்பவர்கள், பீங்கான் தொழிற்சாலைகள், பெயிண்ட் மற்றும் சானைக் கற்கள், பொடிகள், சிமெண்டினால் ஆன பொருட்கள் தயாரிப்பவர்கள், செங்கல் ஆலைகளில் பணி செய்பவர்கள் போன்றவர்களை சிலிகோஸிஸ் எளிதாக பாதிக்கும். 0.5 முதல் 3 மைக்ரோன் அளவுள்ள கல் தூசி மற்றும் பொடிகளால் இது ஏற்படும். பெரும்பாலும் காச நோயும் (T.B) இதனுடன் சேர்ந்தே ஏற்படும். நுரையீரல் திசுக்கள் கட்டியாகி நார்போல் ஆகி விடுவதுடன், மூச்சுத் திணறலையும் சிலிகோஸிஸ் உண்டாக்கும்.
2. கரு நுரையீரல் (Black lung) / நிலக்கரி சுரங்க நிமோகோனியாசிஸ்
இது நிலக்கரி சுரங்க தொழிலாளர்களுக்கு உண்டாகும் நோய். நிலக்கரி தூசி (Coal dust) தொடர்ந்து நுகரப்படுவதால், நுரையீரலில் ஃபைப்ரோஸிஸ் (Fibrosis) எனும் தடிப்பு, தழும்பு உண்டாகும். தொடர்ந்து இருமல், கோழை, சளி, நுரையீரல் திசுக்கள் கட்டிப்படுதல் இவை ஏற்படும். முற்றிய நிலையில் மூச்சுவிடுதல் தடைப்படும். இவ்வாறு இறந்தவர்களின் நுரையீரலை சோதித்த போது, இவர்கள் சுரங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று சில ஆண்டுகள் ஆகியிருந்த போதிலும், இந்த நோயின் தாக்கம் குறையவில்லை என்பது அறியப்பட்டது.
3. டால்க் நிமோ கோன்யோசிஸ்
இது கல்லுமாப்பொடி தயாரிக்கும் இடங்களிலும், மணக்கும் டால்கம் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும், ரப்பர் தொழிற்சாலைகளிலும் வேலை செய்கின்றவர்களைப் பாதிக்கும் நுரையீரல் நோய். இதனால் நுரையீரலில் சளியும், கோழையும் கட்டி கட்டியாக ஏற்பட்டு மூச்சுத் திணறல் உண்டாகும்.
4. ஆஸ்பெஸ்டோசிஸ்
நிமோகோனியோசிஸ்களில் மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது ஆஸ்பெஸ்டாஸினால் ஏற்படுகின்ற ஆஸ்பெஸ்டோசிஸ் ஆகும். ஆஸ்பெஸ்டாஸ் மட்டுமின்றி கிரைகோடைல் (மக்னீஷியம் சிலிகேட்) குரோசிடோலைட் (சோடிம் / இரும்பு சிலிகேட்), அமோசைட் போன்ற பொருள்களாலும் இது ஏற்படும். ஆஸ்பெஸ்ட்டாஸ் பொருள்கள் தோண்டுவதிலும் சிமிண்டுடன் கலந்து பொருள்கள் தயாரிப்பதிலும் உள்ளவர்களுக்கு இந்நோய் தோன்றக்கூடும். ஆஸ்பெஸ்டாஸ் இழைகள் (Fibres) மிக நுண்ணியதாகவும் மிகுந்த நீளமுள்ளவைகளாகவும் இருக்கும். 3 மைக்ரான்கள் வரையான இழைகள் எளிதாகச் சுவாசத்தில் கலந்து நுரையீரலுக்குச் சென்றுவிடும்.
இதனால் மிக எளிதாக ஏற்படக்கூடிய கோளாறு மூச்சுத் திணறலாகும். மேலும் நுரையீரல் புற்று எனப்படும் மீஸோதெலியோமா (Mesothelioma) ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக காணப்படுகிறது. இதே போன்று கிளாஸ் உல் மற்றும் கண்ணாடி இழைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடையேயும் நுரையீரல் புற்றினால் ஏற்படும் சாவுகள் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்குப் பரிகாரங்கள்
பணி சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கென்று பல கட்டு திட்டங்களும், கவனிப்புகளும் உள்ளன. இப்பணிமனைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களை குறிப்பிட்ட கால அளவில் ஸ்பைரோமெட்ரி எனப்படும் எக்ஸ்ரே மற்றும் நுரையீரல் திறனளப்புச் சோதனை ஆகியவற்றிற்கு உட்படுத்த வேண்டும். புகைகளைத் தடுக்க கூடுகள் கட்டி அவற்றை திறம்பட வெளியேற்ற வேண்டும். மாசுக்காற்று எளிதில் வெளியேறும்படியான காற்றுப் போக்கிகளை அமைக்க வேண்டும். முகத்தில் மூடியும் (Mask), தடுப்பான்கள் மற்றும் சல்லடைத் துணிகளும் கட்டிக் கொள்ள வேண்டும். இது போன்ற நோய் தடுப்பு முயற்சிகளைத் தொழிலாளர்கள் அலட்சியப்படுத்தாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். நுரையீரல் செயல்பாட்டில் குறை தென்பட்ட உடனேயே மருத்துவ உதவியை நாட வேண்டும். நல்ல நீரைக் காசு கொடுத்துத் தான் பெற வேண்டுமென்கின்ற காலகட்டத்திற்கு வந்துவிட்டோம். இனிவரும் நம் சந்ததியினர் நல்ல காற்றுக்கும் காசு கொடுக்க வேண்டுமென்கிற கட்டாயத்தை உண்டுபண்ணாமல் சுற்றுச்சூழல் தூய்மையைப் பாதுகாப்போம்!