”அவனுக்கு ஓவர் பி.பி. (Blood Pressure ) – பா, அதான் காச், மூச்சுன்னு கத்துறான்” என்று பலரும் கூறக் கேட்டிருப்போம். உயர் ரத்த அழுத்தக் கோளாறு அனைவரும் அறிந்த ஒரு குறைபாடு. ஆனால், குறைந்த ரத்த அழுத்தமும் நல்லதல்ல. அது தலைசுற்றல், மயக்கத்தை உண்டாக்கும்.
உயர் ரத்த அழுத்தக் கோளாறினால், ரத்த நாளம் பாதிக்கப்பட்டு சிலநேரம் வெடித்து, ரத்தப்போக்கு மற்றும் பல கோளாறுகளை உண்டாக்கும். குறைந்த ரத்த அழுத்தத்தில், ரத்தம் உடலின் பல பாகங்களை சென்றடையாத நிலை உண்டாகும். இதனால் திசுக்களுக்கு உணவும், ஆக்ஸிஜனும் சேராது. உடலின் கழிவுப் பொருட்கள் வெளியேறாது. ஆனாலும், குறைந்த ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தத்தை போல அவ்வளவு ஆபத்தானது அல்ல.
நமது உடல், பலவிதங்களில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. ரத்த நாளங்களின் சுற்றளவு அதிகரிக்கப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு, தேவையான அளவு ரத்த சுழற்சியை உடல் செய்கிறது. நாளங்கள் சுருங்கினால் ரத்த அழுத்தம் ஏறும். விரிந்தால் குறையும். இந்த மாதிரியான ரத்த அழுத்தத்தை பாதுகாக்கும் செயல்பாடுகளுக்கு காரணம் சில விசேஷ செல்கள். இவற்றை ‘பாரோரிசெப்டார்’ (Baroreceptors) என்று கூறுவர்.
நாளங்களில் உள்ள இவை, தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும். அதுவும் கழுத்திலும் மார்பிலும் உள்ள இந்த திசுக்கள் முக்கியமானவை. ரத்த அழுத்த மாறுதல்கள் நிகழும்போது, இந்த விசேஷ செல்களில் உள்ள ‘சென்சார்’ (Sesors), நரம்புகள் மூலமாக மூளைக்கு மின்னலை விட வேகமாக எச்சரிக்கும்.
இதயத்திற்கு இதயத் துடிப்பை மாற்றுமாறு செய்தி அனுப்பும். இந்த நடவடிக்கையால் உடனே ரத்த அழுத்தம் சீராக்கப்படும்.
குறைந்த ரத்த அழுத்த காரணங்கள்
• இதயம் சரியாக செயல்பட முடியாமல் பாதிக்கும் இதய நோய்கள், இதயத்துடிப்பு ஏறுமாறாவது.
• உடலின் நீர்ச்சத்து குறைவது, ரத்தப்போக்கு, சிறுநீரக கோளாறுகள்.
• நரம்புக் கோளாறுகள்.
• வயது ஆவது.
குறைந்த ரத்த அழுத்த அறிகுறிகள்
குறைந்த ரத்த அழுத்தம் முதலில் மூளையை தாக்கும். இதனால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். நின்று கொண்டிருக்கும்போது, மூளைக்கு ரத்தம் செல்வது சிறிது கடினம். எனவே, நின்றிருப்பவர் மயங்கி கீழே விழுந்தவுடன், இதயமும், மூளையும் உடல் படுத்த நிலையில் ஒரே மட்டத்தில் இருப்பதால், மூளைக்கு ரத்தம் பாயத் தொடங்கிவிடும். இதனால் மயக்கம் தெளியும். ஆனாலும், குறைந்த அழுத்த நிலை மூளையை பாதிக்கலாம்.
மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி உண்டாகலாம்.
குறைந்த அழுத்தம் நீடித்தால் உடலின் எல்லா பாகங்களும் பாதிக்கப்படும். இதை ‘ஷாக்’ என்று கூறுவார்கள். அது அபாயகரமான நிலை. உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.