தனிமையிலே இனிமை காண முடியுமா…?

Spread the love

நம் நாட்டின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டிவிட்டது. இந்த மக்கள் வெள்ளத்திலும் பல லட்சம் பேர் தனிமையில் வாடி தவித்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. தனிமை என்பது முனிவர்களுக்கும், யோகிகளுக்கும், துறவிகளுக்கும் வேண்டுமானால் இனிமை தரலாம். மனிதர்களுக்கு தனிமை என்பது இனிமை தராது. இன்னலைத்தான் தரும். கூட்டத்தினரிடையே தனித்திருப்பவர்கள் விருப்பப்பட்டு அதை ஏற்றுக் கொள்வதில்லை. தனிமை அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

தனிமைத் துயரில் அல்லலுறுவோரின் சில வகைகளை பார்ப்போம்…

வசந்த காலம் கசந்த காலமாக ஆனவர்கள்

தங்களுடைய இளமையும் வயதும் போன பிறகும் மணமாகாதிருக்கின்ற ஆண்களும் பெண்களும் (முதிர் கன்னிகள்) இந்தப் பிரிவில் அடங்குகின்றனர். வயதாகியும் திருமணமாகாத பெண்களை முதிர் கன்னிகள் என்று சொல்லலாம். வயதாகியும் திருமணமாகாத ஆண்களை பிரம்மச்சாரிகள் (Bachelor) என்று சொல்ல முடியாது. அவர்களை திருமணமாகாதவர்கள் (Un married) என்றே சொல்ல வேண்டும்.  இவர்களை ‘மிஸோகமிஸ்ட்’ (Misogamist) & திருமண வெறுப்பாளர்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவர்களில் பெரும்பான்மையோர், வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு காரணமாகவும், வசதியின்மை காரணமாகவும் வாய்ப்பிழந்தவர்கள் மற்றும் வாய்ப்பை தவற விட்டவர்கள்.

ஆண்டுகள் செல்லச் செல்ல வாழ்க்கையில் பிடிப்பற்று, உற்சாகம் குன்றி, தனிமைப்பட்டு போகின்ற இவர்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டத்தில் ஒவ்வொரு பெண்ணும், ஆணும் திருமணம் முடிக்கின்றபோது பெரிதும் மனவேதனைக்கு ஆளாகின்றனர். (வயிற்றெரிச்சல் அல்ல). தங்களுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று சிலர் கூறுகின்றனர். தங்கள் பெற்றோரையும் சுற்றத்தாரையும் குறை கூறி குற்றம் சுமத்துகின்றனர் சிலர். தங்களைப் படைத்த ஆண்டவன்தான் இதற்கு காரணம் என்று கூறுகின்றனர் சிலர்.

பெற்றோரிடமும், உறவினர்களிடமும் கோபத்தை வெளிப்படுத்தும் இவர்கள் பல நேரங்களில் தங்களை தாங்களே நொந்து கொள்கின்றனர். தங்களிடம் அன்பு காட்டவும், அரவணைக்கவும், ஆதரிக்கவும், பாதுகாக்கவும், இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளவும், பாலுறவில் பங்கு கொள்வும் ஒரு துணை இல்லையே என ஏங்கி தவிக்கின்றனர்.

இந்த ஏக்கத்தை போக்க வாழ்க்கை துணையை தேடிக் கொள்வதுதான் நல்லது. நடைமுறையில் சாத்தியமானதும் கூட. காலம் கடந்து திருமணம் செய்து கொள்கின்றபோது சில கனவுகளையும் பல எதிர்பார்ப்புகளையும் விட்டுக் கொடுத்தே தீர வேண்டும். கிடைத்ததை விரும்பும் மனப்பக்குவத்தை பெற வேண்டும்.

காலந்தப்பிய கல்யாணத்தில் (Late Marriage) சம்பந்தப்பட்டவர்கள் ஒரு குழந்தை அல்லது குழந்தை இல்லாத குடும்பம் ஒன்றை அமைத்துக் கொள்ள முன் வரவேண்டும். மும்பை போன்ற பெருநகரங்களில் தனித்து வாழ்வோருக்கென்றே ‘லோன்லி சிங்கிள்ஸ் கிளப்’ (Lonely Singles Club) எனப்படும் அமைப்புகள் உள்ளன. இவற்றில் உறுப்பினராகின்றவர்கள் தங்களுக்கேற்ற நண்பர்கள், துணையை கண்டு கொள்ளும் வாய்ப்பை இங்கு பெறுகின்றனர். ஆனால், இந்த கிளப்புகளில் உறுப்பினராக ‘பேங்க் பேலன்ஸை’ இழக்க வேண்டி வரும்.

விவாகரத்தால் வில்லங்கம்

இந்தப் பிரிவில் வருபவர்களும் பாவப்பட்ட ஜீவன்கள்தான். இவர்கள் பஸ்சை தவற விட்டவர்கள் இல்லை. பஸ்சில் இருந்து வெளியே தள்ளி விடப்பட்டவர்கள். மணமுறிவு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கணவனோ, மனைவியோ அல்லது இரண்டு பேரின் செயல்பாடுகளும் விவகாரத்துக்கு காரணமாக அமையலாம்.

மணமுறிவு பெற்றவர்கள் என்றதுமே அவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும், தங்களது ஏதோ ஒரு வக்கிர புத்தியினால் வாழ்க்கையை பாழாக்கி கொண்டவர்கள் என்ற எண்ணமே நம் சமூகத்தில் நிலவுகிறது. அதிலும் ஆணுக்கு இதில் அவ்வளவாக பிரச்னையில்லை. பெண்ணுக்குத்தான் பெரிதும் பிரச்னை.

நாம் மனதளவில் இன்னும் மணமுறிவை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை அடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்களும் கூட மணமுறிவு பெற்றவர்களை வினோதமாக பார்க்கும் நிலை இன்னும் நீடிக்கிறது. இதனால், மணமுறிவு பெற்றவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கும் குற்ற உணர்வுக்கும் ஆளாகின்றனர். சமூகத்தில் தாங்கள் மட்டும் தனித்து விடப்பட்டது போன்ற ஒரு உணர்வு இவர்களை எப்போதும் சூழ்ந்து சோகத்தில் ஆழ்த்துகிறது. அத்துடன் குடும்பத்தினரை விட்டு தனித்து வாழ்கின்ற நிலையும் ஏற்படுகின்ற போது, இவர்களது மன தைரியம் சிதறுண்டு நொறுங்கிப் போய் விடுகிறது.

தனிமையும், சுயஇரக்கமும், மனச்சோர்வும் இவர்களத மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. மண வாழ்விற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமானால் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள இவர்கள் ஆவலோடும் ஆயத்தமாகவும் இருக்கின்றனர். இந்த எண்ணத்தை செயல்படுத்த இவர்கள் வேறொரு மணமுறிவு பெற்ற துணையை தேடிக் கொள்ளலாம். இத்தகைய திருமணங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. இதற்கு காரணம் வேறு வேறு சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்வதாக இருக்கலாம்.

வசதியின்மை காரணமாக தங்கள் வசந்த காலத்தை தவற விட்ட பெண்களும், ஆண்களும் தங்கள் வயதின் காரணமாக மணமுறிவு பெற்றவர்களை மணக்க முன்வரலாம். அதுபோன்ற நேரத்தில் மணமுறிவு பெற்றவர்கள் தங்களது புதிய துணைவி அல்லது துணைவரை அன்புடனும் பாசத்துடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்துடனும் அணுக வேண்டும்.

துணையை இழந்தவர்கள்

மணமுறிவு பெற்றவர்களைப் போலின்றி இப்பிரிவினர் சமூகத்தின் அனுதாபத்தை எளிதாக பெற்று விடுகின்றனர். இவர்களது துயர நிலைக்கு இவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்று மக்கள் எண்ணுவதே இவர்களுக்கு ஆதரவாகவும், அனுதாபமாகவும் அமைந்து விடுகிறது.

இந்தியப் பண்பாடு காரணமாகவும், கணவன்பால் உள்ள அன்பு காரணமாகவும் பெண்களில் பெரும் பகுதியினர் மறுமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை. மேலும் தாய்மை அடைந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வேறொரு புது வாழ்க்கைக்கு தங்களை தயார் செய்து கொள்ள மறுத்து விடுகின்றனர். இதனால் இவர்கள் மனம் ஒப்பியே தனிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு விடுகின்றனர்.

எனினும் மாறிவரும் காலச்சூழ்நிலையில் இளம் வயதில் துணையை இழந்தோர் தனித்து வாழ்வது என்பது ஒரு சுமையாகி வருகிறது. அப்படியே ஒருவேளை வாழ முயன்று வெற்றி பெற்றாலும் தனிமை எனும் கனத்த போர்வை இவர்களை இறுக போர்த்தி உள்ளதால், வெளியில் தெரியாமால் இவர்கள் வியர்த்துப் போகிறார்கள். இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியும், சுவையுமற்ற பெருஞ்சுமையாகி விடுகிறது.

‘கோரிக்கையற்று கிடக்குதங்கே வேரில் பழுத்த பலா ஒன்று’ என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறினார். பாலுறவுக்கு என்று இல்லாவிட்டாலும், மனதளவில் பழகி எண்ணங்களை பரிமாறிக் கொள்ளத் தக்க துணையின் தேவையை இவர்கள் பெரிதும் உணர்கிறார்கள். ஆனால், சமூகத்தின் கண்ணோட்டமும், அணுகுமுறையும் இவர்களை பெரிதும் பாதிக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும்.

ரிடையர்டு ஆனவர்கள்

ஓய்வு பெறுகின்ற ஒருவர் தனது சம்பளத்தையும் பணியையும் இழப்பதுடன் தமது நண்பர்களையும், உறவினர்களையும் இழந்து விடுகிறார். இவர்கள் ஓய்வு பெறுவது வேலையில் இருந்துதான். வாழ்க்கையில் இருந்து அல்ல. இவர்களின் பிள்ளைகள் அனைவரும் தங்கள் கல்வியை முடித்த கையோடு வேலை தேடிக்கொண்டு திருமணமும் செய்து கொண்டு தனிக்குடித்தனம் போய் விடுகின்றனர். இவர்களுக்கு ஓய்வு பெறுவது உபத்திரவமாக ஆகி விடுகிறது.

உண்மையில் பார்க்கப் போனால், வயதான தம்பதியர்களுக்கு இந்த ஓய்வு ஒரு வரப்பிரசாதமாக அமைய வேண்டும். கணவன் வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் வீட்டில் இருப்பதை மனைவி வெறுக்கத் தொடங்குகிறார். ஓய்வு பெற்ற கணவனோ, மனைவி செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடித்து அவளைக் குறை கூறத் தொடங்குகிறான். இதனால் அன்பும் ஆதரவும் இணைந்து இருக்க வேண்டிய  குடும்பத்தில் பிக்கலும் பிடுங்கலும் சண்டையும் சச்சரவும் ஏற்படுகிறது. பிள்ளைகளும் தனிக்குடித்தனம் போய் விட்டதால் விளைவு விபரீதமாகி விடுகிறது. மனைவியுடன் கணவன் பேசுவதில்லை. கணவனுடன் மனைவி பேசுவதில்லை. விபரீதமான மவுனம் அங்கே விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் சிக்கல்கள் சீறி எழுகின்றன.

To Buy Our Herbal Products >>>

பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தோட்டமிடுதல், புத்தகம் படித்தல், எழுதுதல், நாய் வளர்த்தல், சமூக சேவையில் ஈடுபடுதல் போன்ற புதிய விஷயங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தம் வயதுடைய புதிய நண்பர்களை உருவாக்கி கொள்ள வேண்டும். திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு வரும் அழைப்புகளை ஒதுக்காது தமது துணையுடன் கலந்து கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வேலை, வேலை என்று அலைந்து திரிந்து காலம் போய், இப்போதாவது தமது துணையை உளமாற காதலிக்க வேண்டும்.

ஓய்வை ஒரு சுமையென்று கருதாமல் வயதுள்ள வரையில் வாழ்க்கையை நல்லபடியாக கழிக்க வேண்டும். ஓய்வு பெற்ற காலத்தில் உண்டாகின்ற தனிமை அவரவர்களாக உண்டாக்கி கொள்வது. தானாக உருவாவதல்ல. தனிமையில் எப்போதும் இனிமை காண முடியாது என்பது நிதர்சனம்.


Spread the love
error: Content is protected !!