ரோஜா இதழ்களுக்கு..

Spread the love

உதட்டு ஒப்பனை :

உங்கள் முகத் தோற்றத்தையும், அழகையும் மேலும் அதிகமாக்கிக் காட்டும் ஒரு உறுப்பு உதடுகள் தான். நீங்கள் பிறருடன் பேசும் போதும், சிரிக்கும் போதும், ஏன் நீங்கள் கொட்டாவி விடும் போதும் கூடப் பிறரது பார்வையில் படுவவை உங்கள் உதடுகள் தான். அழகான உதடுகளைப் பெற்றிருப்பது ஒரு அதிர்ஷ்டம் என கருதப்படுகின்ற நிலையில், உதடுகளைப் பராமரிக்க செலவழிக்கப்படுகின்ற நேரம் பயனுள்ளது தான்.

உதடுகளின் நிறம், மேக்அப் செய்த பின்பு மேலும் அழகு பெறுவதுடன், பவள வாயையும் பிறர் கவனிக்கத் தூண்டுகிறது. சருமத்தின் நிறம் சற்று குறைவாக இருந்தாலும், உதட்டு ஒப்பனையில் லிப்ஸ்டிக் அதை சரிசெய்து உயர்த்திக் காட்டுகிறது. குறிப்பாக சிறிது வயது கூடிய பெண்களுக்கு இது ஒரு அரிய சாதனம் ஆகும். மிகவும் வெளிறிய நிறத்திலிருந்து (Pale) நிறத்திலிருந்து மிகவும் ஆழ்ந்த நிறம் வரை பலவகையான லிப்ஸ்டிக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. ஒவ்வொருவரின் சரும நிறத்திற்கும் பொருத்தமானவற்றைத் தேடி தேர்வு செய்து கொள்வதற்காக பலப்பல வண்ணங்களில் கிடைக்கின்றன.

குச்சி வடிவ (Solid Stick) லிப்ஸ்டிக் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது எனினும் நல்ல உதட்டு ஒப்பனை செய்ய லிப்பிரஷ்தான் ஏற்றது. அகன்று தடித்த வடிவமுள்ள லிப்ஸ்டிக்கினால் நுண்ணிய முறையில் வரையவோ, குறுகிய இடத்தில் தடவவோ சற்று கடினாமாக இருக்கும். உங்கள் முகத்தின் வேறெந்த உறுப்பைக் காட்டிலும் உங்கள் உதடுகளின் தோற்றத்தை எளிதாக மாற்ற இயலும். உதட்டு மேக்அப்பை விரும்பிய வண்ணம் மாற்றத் தயங்க வேண்டியதில்லை.

லிப்ஸ்டிக்குகள்:

சருமத்தின் மற்ற பகுதிகள் போல உதடுகளில் செபச் சுரப்பிகள் இல்லை. இதனால் மிக எளிதாக உதடுகள் வறண்டு போக வாய்ப்புண்டு. இதனால் தான் லிப்ஸ்டிக்குகள் மென்மையாகவும், நொய்மை மிக்கவையாகவும் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக இவை ஸ்டிக் வடிவில் விற்பனை செய்யப்படுகிறது என்றாலும் கிரிம்களாகவும், நிறீஷீss குழம்புகளாகவும் கிடைக்கின்றன. வெள்ளையில் தொடங்கி கரு நீலம் வரையுள்ள வண்ணங்களில் லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன எனினும் மிகப் பெரும்பான்மையாக இளஞ்சிகப்பு, சிகப்பு, ஆரஞ்சு, ப்ளம், பீச் என்ற நிறங்களையும், அவை சார்ந்த நிறங்களையும் கொண்டுள்ள லிப்ஸ்டிக்குகள் அதிகமாக தேர்வு செய்யப்படுகின்றன. நிறமற்ற (Beige) லிப்ஸ்டிக்கும் கிடைக்கின்றன.

பெரும்பாலான லிப்ஸ்டிக்குகள் மெழுகு, எண்ணெய், கொழுப்புச் சாராயம் போன்றவற்றின் கலவையுடன் வண்ண நிறமிகள் (Pigments) சேர்த்துச் செய்யப்படுகின்றன. இந்நிறமிகள் உதட்டுச் சருமத்துடன் தொடர்பு கொள்கின்ற போது உதட்டில் வறட்சியை ஏற்படுத்தக் கூடும். எனவே தான் லிப்ஸ்டிக் தடவும் முன்னர் பவுண்டேஷன் இடுவது அவசியமாகிறது. மேலும் லிப்ஸ்டிக்குகள் வெண்ணெய் போல் இருப்பதால் எளிதாக வழியவும் வாய்ப்புண்டு. லிப்ஸ்டிக் இட்டு முடித்ததும், லிப்ஸ்டிக் அதிகமாகத் தெரியும் இடங்களில் டிஸ்யு+ பேப்பரால் ஒற்றி எடுக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் வண்ணங்கள்:

எல்லோருக்கும் ஏற்றது மெல்லிய பிங்க் மற்றும் கோரல் (Corals ) ஆகும். ஆழ்ந்த (Dark) நிறமுடைய சருமத்தினர் நீலம் கலந்த வண்ணங்களிலிருந்து விலகி இருங்கள். பிங்க், ரோஸ், நிறமற்றது போன்றவற்றைத் தேர்ந்தெடுங்கள். சிவந்த நிறமுடையவர்களுக்கு Soft Mauves, Champaigne Pink  போன்றவை மிக எடுப்பாக இருக்கும். கோதுமை மற்றும் மாநிறம் உடையவர்க்கு Mauves, ப்ளம், பர்கண்டி (Burgundies), Hot Pinks, Corals,  Radiant Red  போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

லிப்ஸ்டிக் இடுதல்:

உதடுகளில் லிப்ஸ்டிக் இடுவதற்கு முன்னர் நல்ல முறையில் பவுண்டேஷனும், பவுடரும் இடுவது மிகவும் முக்கியம். உதடுகள் இருக்க வேண்டிய அளவை வரையறை செய்து கொண்டு, கனத்த லிப் பென்சில் உதவியினால் அவுட் லைன் வரைந்து கொள்ளுங்கள். மேல் உதட்டின் மேற்புற வளைவைக் கவனமாக வரையுங்கள். வாயை இயல்பாக வைத்துக் கொண்டு, மேல் உதட்டின் அடியிலும் கோடிடுங்கள். கீழ் உதட்டின் விளிம்பில் உதட்டின் நடுவில் இருந்து தொடங்கிக் கடைவாய் வரை கோடிட்டு வரையுங்கள். உதடு எங்கே முடிகிறது என்பது தெளிவாக தெரியவில்லை என்றால் கன்னத்தின் இருபுறங்களிலும் விரல்களை வைத்து வாயை இருபுறமும் இழுத்தால் தெளிவாகத் தெரியும். அவுட் லைன் வரைந்து உதடுகளின் வடிவத்தை உறுதி செய்துவிடலாம்.

லிப்ஸ்டிக் நீக்கும் முறை:

லிப்ஸ்டிக் இடுவதைப் போன்றே, லிப்ஸ்டிக்கை நீக்கும் போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும். எப்போதும் ஒரு கோல்டு கிரிமைத் தடவிய பின்னரே லிப்ஸ்டிக்கை நீக்க வேண்டும். இது உதடுகளின் மென்மையைப் பாதுகாப்பதுடன் கீறல், வெடிப்பு ஏற்படாமல் இருக்கவும் உதவும். லிப்ஸ்டிக்கை நீக்கியதும் சிறிதளவு மாய்ஸ்சரைசரைப் பஞ்சில் தொட்டு உதடுகளில் ஒற்றித் தடவ மறக்காதீர்கள்.

ஒரு நாளுக்குள் மூன்று முறை மாறும் மேக்அப்:

ஒரு நாளில் காலை நேரமும், மாலை நேரமும் இருவிதமாக மேக்அப் இடும் முறைகள் மாறுபடுகிறது என்பதை அதிகமானோர் அறிந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்காது. அதிலும் மாலை நேர ஸ்பெஷல் மேக்அப் என்பது உண்டு. விழா ஒன்றில் கலந்து கொள்ளும் பொழுது சற்று கூடுதல் கவனமும், அழகும் பெண்களுக்கு தேவைப்படுகிறது. எனவே தான் ஒப்பனை முறையினை,

1. காலை நேர மேக்அப்

2. மாலை நேர மேக்அப், மற்றும்

3. மாலை/இரவு நேர ஸ்பெஷல் விழா மேக்அப் என்று பிரிக்கின்றோம்.

1. காலை மேக்அப்:

காலை மேக்அப் இயன்ற வரை இலேசாக இருப்பது நல்லது. மாலை மயங்கும் நேரத்தில் கண்ணுக்குப் புலப்படாமல் போகும் பல மேக்அப் குறைபாடுகளை சுட்டெரிக்கும் சூரிய ஒளி வெட்ட வெளிச்சமாக காட்டி விடும். எனவே மிக மெலிதான மேக்அப் இடுவதே காலை நேரத்திற்கு ஏற்றது. முடிந்த வரை பவுண்டேஷன் அல்லது கிரிம் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். தவிர்க்க முடியவில்லையெனில், லேசாக இடுங்கள். ஜன்னல் அல்லது பால்கனி அருகில் நின்று கொண்டு, இயற்கை வெளிச்சத்தில் இடுங்கள். லேசாக ரூஜ் இடுங்கள். மென்மையான வண்ணமுடைய லிப்ஸ்டிக் காலை நேரத்திற்கு ஏற்றது. பின்பு ஐ லைனர் இடுவதுடன் சிறிது மஸ்காராவும் இடுங்கள்.

மாலை நேர மேக்அப்:

பவுண்டேஷன், பவுடர் இடலாம். ஆனால் சருமத்துடன் இழையும் படி அழகாக மெழுகி விடவும். லிப்ஸ்டிக், பவுடர், ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ  எல்லாம் பயன்படுத்தலாம். ஆனால் கடுமையான வண்ணங்கள் வேண்டாம்.

3. மாலை/இரவு நேர விழா ஸ்பெஷல் மேக்அப்:

எல்லா விதமான மேக்அப் சாதனங்களையும் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக்கின் மேல் க்ளாஸ் (Gloss ) பயன்படுத்தலாம். கண் இமைகளில் வெள்ளித் துகள்கள் (Silver Dust)  தூவலாம். பிறகு லிப் கலரைக் கொண்டு பிரஷினால் அவுட்லைனின் உட்புறம் தடவிக் கலர் இடவும். உதட்டின் மையப் பகுதியில் இருந்து வெளிப்புறம் கடைவாய் நோக்கிக் கலரை இடவும். லிப்ஸ்டிக்கைக் கொண்டு மெழுகிப் பூசி விடாதீர்கள். வாயை நன்கு அகலத் திறந்து உதட்டின் மூலைகளிலும் தடவுங்கள். உதடுகளில் நல்ல முறையில் லிப்ஸ்டிக் படிவதற்கு ‘ணி’ என்று உச்சரித்தபடி லிப்ஸ்டிக் இடுங்கள்.

உதடுகளின் வடிவமைப்பு:

மெல்லிய உதடுகள் கனத்துத் தெரிவதற்கு, முழு உதட்டிலும் பவுண்டேஷன் இட்ட பிறகு, லிப் பென்சில் கொண்டு அவுட்லைன் வரையுங்கள். கோடு வரையும் போது இயல்பான உதட்டு விளிம்பிற்கு வெளிப்புறம் கோடிட்டு வரையுங்கள். பளிச்சென்ற உதட்டு வண்ணத்தைக் கொண்டு நிரப்புங்கள். நிறைய பயன்படுத்துங்கள்.

பெரிய உதடுகளை சிறியதாகக் காட்டுவதற்கு, இயல்பான உதட்டு விளிம்பிற்கு உட்புறமாக கோடிட்டு வரையுங்கள். பின்னர் அதிகம் பளிச்சென்று இல்லாத வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புங்கள். Gloss இடுவதைத் தவிருங்கள். கலர் அதிகம் தெரியும் இடங்களை டிஸ்யூ பேப்பர் மூலம் ஒற்றி எடுத்து விடுங்கள். தொங்குவது போன்ற தோற்றம் தரும் உதடுகளை மலர்ந்தால் போல காட்ட விரும்பினால் உதடுகளின் மூலைகளை (Lip Corners) கன்ஸீலர் (Consealer) கொண்டு மறைத்து விட்டுப் பின்னர், லிப் பென்சிலால் உதட்டு மூலைகளை மேல் நோக்கி வரைந்து அதைக் கலர் கொண்டு நிரப்பவும்.

உங்கள் உதடுகளில் கீழ் உதடு மற்றும் மேல் உதடு மட்டும் மெலிதாக இருந்தால் மெலிதான உதட்டின் விளிம்பிற்கு வெளியே அவுட்லைனை வரைந்து அதற்குள் கலர் தீட்டுங்கள். அத்துடன் உங்களது மெல்லிய உதட்டில் தீட்டுகின்ற வண்ணத்தை விடச் சற்று கனத்த வண்ணத்தைக் கனமான உதட்டில் தீட்டுங்கள்.

உதடுகள் பருத்துப் பொலிவுடன் விளங்க வேண்டுமென்றால், உதடுகளின் நடுப்பகுதியைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஆழ்ந்த வண்ணத்தை தீட்டிப் பின்னர் மையப் பகுதியில் லேசான வண்ணம் தீட்டுங்கள். ஆனால் அதிக வேறுபாடு இல்லாதபடி பார்த்துக் கொள்வது அவசியம். வயது முதிர முதிர உதடுகளின் விளிம்புகள் தெளிவின்றிப் போகும். அத்துடன் சருமச் சுருக்கங்களும் சேரும் போது கோடுகள் சற்றுக் குழம்பி, உதடு வடிவத்தை இழக்கத் தொடங்குகிறது. ஒரு கனத்த லிப் பென்சில் உதவியுடன் நன்கு லிப்ஸ்டிக் தீட்டினால் உதடு வடிவத்திற்குள் ஓரளவு லிப்ஸ்டிக்கை நிலை பெறச் செய்ய முடியும்.

இயற்கை வழிகளில் உதடுகள் பராமரிப்பு:

ஜனன உறுப்புகளைப் போல உதடுகளும் பிரத்யேக சருமத்தை உடையவை. இவற்றின் தோல்களில் நரம்புகள் அதிகம். எனவே தான் உதடுகளில் முத்தமிட்டால் உணர்ச்சிகள் அதிகரிக்கின்றன. உதடுகளை மிருதுவாக, வெடிப்புகள் இல்லாமல் வைத்திருக்க, மேக்அப் தவிர்த்த நேரங்களில் உதடுகளில் கீழ்க்கண்டவைகளை தினமும் பூசலாம்.

1. வெண்ணெய்                                  2. பாலாடை

3. பால் விட்டு அரைத்த ரோஜா இதழ்கள் களிம்பு. 4. பீட்ரூட் சாறு

5. கொத்துமல்லிச் சாறு                         6. பன்னீரில் குழைத்த சந்தனம்

7. சம அளவு வெண்ணெய், மஞ்சள் பொடி மற்றும் ஜாதிக்காய் பொடி கலந்த கலவை.

8. கிளிசரின், எலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர்

இவை ஒவ்வொன்றும் 5 மி.லி. அளவு எடுத்து ஒன்று சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இக்கலவையினை தினம் இருமுறை உதடுகளில் தடவி வரவும். இந்த கலவையை ஒரு தரம் செய்து கொண்டு ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தினமும் உபயோகிக்கலாம்.


Spread the love