பேன் தொல்லை

Spread the love

பேன் ஒரு பெரும் தொல்லைதான். தலை முடியில், அடி வயிற்றில் வசித்துக் கொண்டு மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அருவருப்பான புல்லுருவி. சமூகத்தில் பலர் முன்னிலையில் தலையை சொறிய வைக்கும் பேன், ஒரு சிறிய, இறக்கையில்லாத பூச்சி. கண்ணுக்கு சரிவர தெரியாத சிறு உருவமாக இருந்தாலும், மனித ரோமங்களையும், ஆடையையும் நன்றாக கெட்டியாக பிடித்துக் கொள்ளும் பலமுடைய கொக்கிகள் உள்ள கால்கள் கொண்டது. தட்டையான, உருவத்துடன் வறண்ட தோலும் உள்ளதால் பேனை நசுக்குவது கடினம். ரத்தத்தை உறிஞ்சுவதற்காக அமைக்கப்பட்ட வாய்கள் உடையது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுலபமாக பரவும். குறுக்காக 3 மி.மீ. அளவு இருக்கும். மனித ரத்தத்தை உறிஞ்சி வாழும்.

பேன் ஒரு தொன்மையான பூச்சி. 2000 வருடமான தென்அமெரிக்க ‘சிலி’ தேசத்து ‘மம்மி’ (Mummy) (தைலமிட்டு பாதுகாக்கப்பட்ட சவம்) யின் பிறப்புறுப்பு முடியில் ஈறுகள் இருந்தது. பேனால் பாதிக்கப்படுவது “பெடிலோசிஸ்” (Pediculosis) எனப்படும்.

பேன்களில்மூன்று வகைகள் உள்ளன

1. ‘பெடிகுலஸ்’ (Pediculus) இனத்தை சேர்ந்த வகைகள் (அ) தலைப்பேன் – (Pediculus humanus capitis). இது,ஒருவரை ஒருவர் தொடும் போது, ஒருவருடன் ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும்போது, பரவும். பேனுடைய ஒருவரின் சீப்பு, ப்ரஷ் இவற்றை இன்னொருவர் உபயோகிக்கும் போதும் பரவும். பள்ளிக்குழந்தைகள் பேனை தொற்றிக் கொண்டு வருவது ஒரு பெரிய பிரச்சனை. திரும்பிதிரும்பி, பேனை தொற்றிக் கொள்வார்கள். பேனோ நன்றாக கெட்டியாக மயிர்க்கால்களை பிடித்துக் கொண்டிருக்கும். பேன்களுக்கு வெளிச்சம் ஆகாது. வெளுத்தபழுப்பு நிறத்துடன், பெண்பேன்கள் 3 லிருந்து 4 மி.மீ. நீளம் இருக்கும். நமக்கு நஞ்சு போன்ற திரவத்தை தந்து விட்டு, பேன்கள் தங்கள் உடல் வெடிக்கும் அளவுக்கு, ரத்தத்தை குடிக்கும்.

2. சீலைப்பேன் (உடல் பேன்) (Pediculushumanus humanus and corporis)

சுகாதார குறைவு உள்ளவர்கள், ஒரே ஆடையை அதிக நாள் அணிந்து கொள்பவர்கள் கூட்டம் கூட்டமாக, கும்பலாக வசிப்பவர்கள், இவர்களிடையே சீலைப்பேன்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை தோலில் வாழ்வதில்லை. உடைகளில் வாழ்ந்து கொண்டு, ரத்தத்தை உறிஞ்சுவதற்காக உடையை விட்டு உடலில் வரும். உடம்பில் அதிக முடி இருப்பவரிடம் சீலைப்பேன் தாக்கம் அதிகமிருக்கும். உடல் சுத்தத்துடன், உடைகளையும் துவைத்து சுத்தமாக இருந்தால் சீலைப்பேனை தவிர்க்கலாம்.

3. அடிவயிற்றுப்பேன் (நண்டுபேன்- Crab lice, Pthirus Pubis) இவை Pthirus இனத்தை சார்ந்தவை. மற்ற இருவகை பேன்களை விட சிறியவை. உருவத்தில் நண்டு போல் அமைப்பும், கொடுக்கும் உடையதால், அடிவயிற்று முடிகளை நன்கு பற்றிக் கொள்ளும். இவற்றின்ஆயுள்காலம் 15 லிருந்து 25 நாட்கள்- இந்த ஆயுட்காலத்தில் 15-50 முட்டைகள்இடும். இவற்றின் முட்டைகள் முடியின் அடியில் ஒட்டிக்கொண்டு இருக்கும். 7 நாட்களில்முட்டையிலிருந்து குஞ்சுகள் வரும். ஆண்பேன், பெண்பேனை விட சிறியது. இந்தபேன்கள் ஒருநாளில் அதிகபட்சமாக 10 செ.மீ. பயணிக்கும். மற்ற இரண்டு வகைகளையும் போல, தலையில் உள்ள உணர்ச்சி நரம்புகளால், மனித உடல் வாசனை, முடிஸ்பரிசம் இவற்றை அறிந்து கொண்டு, தன்வாயை முடியின் உறை (Follicle) யில் பதித்து தன் எடையை விட பல மடங்கு ரத்தத்தை உறிஞ்சும். ஒரே இடத்தில் பல நாட்கள் இருந்து ரத்தத்தை குடிக்கும். இவை வசிக்கும் இடங்கள் – பிறப்புறுப்பு பிரதேசமுடிகள், கண் புருவம், அக்குள், தாடி, மார்புமுடிகள்.

இவை உடலுறவின் போதும், ஆடைகளில், கழிப்பிடங்களில், துவாலைகளில் உதிர்ந்திருக்கும் முடிகள் மூலம் பரவலாம்.

பேன்களால்உண்டாகும் அறிகுறிகள், பாதிப்புகள்

* பேன்களால் ஏற்படும் முக்கிய தொல்லை –  அரிப்பு.

தலைப் பேனால், தலையில் குறிப்பாக பக்கவாட்டில், பின் தலையில் நமைச்சல் ஏற்படும். சொறிந்து, சொறிந்து, பாதிக்கப்பட்ட இடங்களில் புண்ணாகி, நீர்க்கசிந்து, சுலபமாக பாக்டீரியா தாக்குதலுக்கு ஆளாகும். தலைமுடி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு, நீண்ட காலம், தபம் செய்யும் முனிவர் போல தலைமுடி ஆகிவிடும். அழுக்கும் சேர்ந்து கொள்ளும். துர்நாற்றமும் ஏற்படலாம்.

* சீலைப்பேன் குறிப்பாக, தோள்பட்டை, மார்பு, இவற்றை கடிக்கும். தோல் சிவந்து நமைச்சல் உண்டாகும். பாக்டீரியா, தொற்றும் ஏற்படும்.

* அடிவயிற்றுப் பேனால் பிறப்புறுப்பு பகுதிகளில் தீவிர அரிப்பு ஏற்படும். தோல் சிவந்து எரித்தீமா (Erythema) ஏற்படலாம்.

* பேன்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும்.

* பேன்களால் முடி பாதிக்கப்பட்டு உதிரும்.


Spread the love