லூகோடெர்மாவுக்கு மூலிகை மருந்து

Spread the love

லூகோடெர்மா என்றால் என்ன?

லூகோ (Leuco) என்றால் கிரேக்க மொழியில் வெண்மை என்று பொருள். சருமம் வெள்ளையாவதை லூகோடெர்மா (Leucoderma) என்று கூறுகிறார்கள். இயல்புக்கு மாறான நிலையில் சருமத்திற்கு நிறம் தருகின்ற மெலனின் (Melanin) நிறமிகள் (Pigments) இல்லாமல் போகின்ற போது சருமத்தில் திட்டு திட்டான வெண்மை படர ஆரம்பிக்கிறது.

லூகோடெர்மா, விட்டிலிகோ, ஆல்பினிசம் இவை மூன்றிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

லூகோடெர்மா என்பதும் விட்டிலிகோ (Vitiligo) என்பதும் அடிப்படையில் ஒன்றுதான், மெலனின் நிறமி இல்லாததால் ஏற்படுவது தான், சாதாரண மனிதர்கள் லூகோடெர்மா என்று சொல்வதை மருத்துவர்கள் விட்டிலிகோ என்கின்றனர். இந்த விட்டிலிகோவிற்கும் Leprosy என்று சொல்லப்படும் தொழுநோய்க்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. (Mycobacterium Leprae) மைக்கோ பாக்டீரியம் லெப்ரே அல்லது ஹான்சன்ஸ் பேசிலஸ் (Hansen’s bacillus) எனப்படும் பாக்டீரியாவினால் தொழுநோய் உண்டாகிறது. ஆனால் லூகோடெர்மாவில் நுண்மத் தொற்று எதுவுமில்லாததுடன் ஒட்டுவாரொட்டியும் இல்லை.

ஆல்பினிசம் (Albinism) என்பது பிறவியிலேயே மெலனின் நிறமிகள் இன்றிப் பிறப்பது. இது வாரிசு வழியாக வரக்கூடியது. இதில் சருமம் மட்டுமின்றி கண், முடி போன்றவைகளும் வெண்மையாக இருக்கும். பலர் இதை லூகோடெர்மா என்று தவறாக எண்ணுகின்றனர்.

லூகோடெர்மா எதனால் ஏற்படுகிறது?

இதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம்

ஆட்டோ இம்யூனிடி (Autoimmunity) எனப்படும் தனக்குத்தானே தடுப்பாற்றலை வளர்த்துக் கொள்வது அதாவது நமது உடலே அதில் உண்டாகும் மெலனோசைட் என்னும் செல்களுக்கு எதிராக இயங்கி அதை அழிப்பது.

மூளை சுரக்கின்ற சில வேதிகள் இன்னதென்று குறிப்பிட முடியாத காரணங்களால் மெலனோசைட் செல்களை அழித்து விடுகின்றன.

புறப்பொருட்களான சிலவகை வேதிகள் மெலனோசைட்டுகளை அழித்து விடுகின்றன. இவ்வகை வேதிகள் போட்டோபிலிம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ரப்பர் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் பயன்பாட்டில் உள்ளன.

விட்டமின் பற்றாக்குறையினால் வெள்ளை ஏற்படுமா?

தொடர்ந்த புரதப்பற்றாக்குறை, விட்டமின் ஙி பற்றாக்குறை, இரத்த சோகை போன்றவற்றால் சருமத்தில் திட்டு திட்டாக நிறமாற்றம் ஏற்படலாம். எனினும் அவை பழுப்பு அல்லது மெல்லிய இளம்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும், வெண்மையாக இராது.

சில குறிப்பிட்ட வகை உணவுகளை (மீன், பன்றி, இறைச்சி) போன்றவற்றை உண்பதால் வெள்ளை ஏற்படுமா?

நிச்சயமாக இல்லை. உணவிற்கும் லூகோடெர்மாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இதனால் வேறு தொல்லைகள் எதுவும் ஏற்படுமா?

வேறு எவ்வித தொல்லைகளும் இருப்பதில்லை. 50 வயதிற்கு மேல் இவர்களில் சிலருக்கு தைராய்டு கோளாறும் நீரிழிவும் ஏற்பட்டது அறியப்பட்டுள்ளது.

இந்திய முறைப் பண்டுவம் இருக்கிறதா?

இந்திய முறை மருத்துவத்தில் லூகோடெர்மா என்னும் வெண்புள்ளி அல்லது வெள்ளை நிற மாற்றத்திற்கு Psoralen Corylifolia என்னும் மூலிகைளைப் பயன்படுத்தியுள்ளனர். இது தமிழில் கார்போக அரிசி என்று அழைக்கப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றை உள்ளுக்கும் கொடுத்துப் பாதிக்கப்பட்டுள்ள மேல் சருமத்திலும் தடவி வந்துள்ளனர்.

இந்த மூலிகைச் சாற்றில் Furocoumarins அல்லது Psoralens என்னும் வேதிகள் இருப்பதாகத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 8 _ மெதாக்ஸிசோராலென் (8 Methoxypsoralen) அல்லது மெதாக்சோலென் (Methoxasalene) எனப்படும் வேதியே செயல்திறன் மிக்கது என்றறியப்பட்டுள்ளது. எனவே இதைச் செயற்கை முறையில் தயாரித்து ஆங்கில முறை மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர்.

கார்போக அரிசியிலிருந்து எடுக்கப்டும் எண்ணெய் லூகோடெர்மாவில் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பூச்சு ஒன்றினால் மட்டுமே குறிப்பிடத்தக்க பயன் விளைந்துள்ளது குறிப்பிடத்தக்க பயன் விளைந்துள்ளது. கார்போக அரிசி எண்ணெய் 95 சதவிகித நோயாளிகளின் சருமத்தில் சிறந்த நிறமாற்றத்தை ஏற்படுத்திய போதும் 5 சதவிகிதத்தினருக்கு ஒவ்வாமையும் சருமத்தில் கொப்பளங்களையும் ஏற்படுத்தியது. எனவே இந்த எண்ணெயைக் கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.

இதைச் சருமத்தில் தடவுகின்ற போது புறச்சருமத்தை (Epidermis) துளைத்து ஊடுருவிச் சென்று துணை நுண் தந்துகிகளையடைந்து மெலனின் சுரக்கின்ற மெலனோசைட் செல்களை தூண்டுவிக்கிறது. புறச் சருமத்தில் எவ்வித கேடும் விளைவிக்காது மெலனோபிளாஸ்டிக் செல்களை மட்டும் மெலனின் நிறமி சுரக்கும்படி செய்கிறது. இது சிறுகச் சிறுக வெண்மையான இடங்களில் கலந்து தோலின் நிறத்தை மாற்றுகிறது.

கல்கத்தா ஸ்கூல் ஆப்டிராபிக்கல் மெடிசன் கல்லூரியில் செய்த ஆய்வுகளிலும் கார்போக அரிசி எண்ணெய் (Oil of Psoralen) வெண் சரமத்தை நிறமாற்றம் அடையச் செய்கிறது என்று தெரிய வந்துள்ளது.

கார்போக அரிசி எண்ணெயை சால்மூக்ரா எண்ணெயுடன் கலந்து காலை மாலை இரு வேளைகளிலும் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி வர விரைவில் குணம் தெரியும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love