மணத்தக்காளி கீரையின் மகிமைகள்

Spread the love

மணத்தக்காளி கத்திரி இனத்தைச் சேர்ந்தது. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் மருத்துவ குணமிக்கது. மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக் காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன. மணத்தக்காளி கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பி விடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும். எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்கள் நெருங்காது. 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. 410 மில்லி கிராம் கால்சியமும், 70 மில்லி கிராம் பாஸ்பரஸ§ம், 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் உள்ளன. மேலும், ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், வைட்டமின் நியாஸினும் உள்ளன.

மணத்தக்காளி கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை குணப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும்.

ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரையை சாறாக மாற்றி ஏதாவது ஒரு பழச்சாறுடன், இந்தக் கீரை சாற்றையும் சேர்த்து அருந்தினால், வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி ஆகியவை  குணமாகும். வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.

மணத்தக்காளி கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு சிறந்த மருந்தாகும். மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் தணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் மணத்தக்காளி கீரையின் சாறு அருமருந்தாகும்.

மணத்தக்காளி கீரைக்கு எல்லா வகையான காய்ச்சல்களையும் தணிக்கும் குணம் உண்டு. உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வியர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும்.

தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வரவேண்டும்.

மணத்தக்காளி கீரையைப் போலவே பழமும் சக்தி வாய்ந்த மருந்தாகும். மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.


Spread the love
error: Content is protected !!