நலம் தரும் பயறுகள்!

Spread the love

நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த, ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகை பயறு வகைகள் ஆகும். Leguminosaea குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி விதைகளே பயறுகள் ஆகும். ஆங்கிலத்தில் கடினமான மேற்புற தோல் அல்லது மேல் பரப்பைக் கொண்ட விதைகளை பல்ஸ் Pulse என குறிப்பிடுகின்றனர். இவற்றில் புரதசத்து அதிகமாக உள்ளது. இவை அசைவ உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச் செய்யும். இப்பயறு வகைகள், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இவை உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. அசைவ உணவு உண்ணாதவர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களை விட இவை அதிக சத்துக்கள் கொண்ட குறைந்த ஈரப்பதம் உள்ளவை. எனவே, இவற்றை எளிதாக பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்பு உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளிலேயே அதிக சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. எனவே, அவை தான் மிகவும் சிறந்தவை.

முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படுகிறது. ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயறில் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகின்றது. இது பயறு வகைகளிலேயே அதிகம்.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும், தயாமின், நியாசின் போன்ற வைட்டமின்களும் இவற்றில் அதிகம் காணப்படுகிறது.

பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ அமிலங்களும், சல்பர் குறைவாகவும் லைசின் மிக அதிக அளவுகளிலும் காணப்படுகின்றது. ஆனால், தானியங்கள் லைசின் குறைவாக கொண்டவை. பயறு வகைகளில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும்.

பயறுகள் முளைவிடும் சமயத்தில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகமாக காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் அதிகமாக வைட்டமின்கள் காணப்படுகின்றன.

இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. வயிறு உபாதைகள் உள்ளவர்கள் குறைவாக பயறு வகைகளை உட்கொள்வது நல்லது. முளைக் கட்டிய கொண்டைக் கடலையில் ஐசோ பிளோவின் பையோ கேனின் ஏ எனும் ஹார்மோன் அதிகமாக காணப்படுகின்றது. இந்த ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் சத்தை குறைக்கும் ஒரு சிறப்பான குணத்தைக் கொண்டது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும், இரத்த நாளங்களில் உட்புறம் படிந்துள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றும். மேலும் கொழுப்பு, இரத்த நாளங்களில் படியாத வகையில் உதவிடும்.

இத்தனை நற்குணங்கள் கொண்ட முளைக் கட்டிய பயறை (கொண்டைக் கடலை) அதிகம் எண்ணெய், காரம், மசாலா சேர்க்காமல் தண்ணீரில் இட்டு வேக வைத்து சுண்டல் போல சாப்பிடலாம். பச்சை பயறு வகைகளை முளைக் கட்டி அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம்.

ஜீரண சக்தி குறைவு மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் பயறு வகைகளை தவிர்ப்பது அல்லது குறைத்து உட்கொள்வது அவசியம்.

தங்கள் நலன் கருதி,

ஆயுர்வேதம் எஸ். செந்தில் குமார்.


Spread the love
error: Content is protected !!