எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம்.
எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை அடங்கியுள்ளது. இதன் தோலில் மணம் தரும் லிமோனின் எனும் கலவை உள்ளது.
எலுமிச்சை தோலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்கள் அடங்கியுள்ளது. இதில் ஃபிளவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
எலுமிச்சை பொடியினை அழகு சாதன முறைகளுக்கு மட்டுமன்றி உணவில் கூட சேர்க்கலாம். இதனை வெறும் வயிற்றில் கால் டீஸ்பூன் சேர்த்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
எலுமிச்சை தோல் பொடி உபயோகிக்கும் முறை
நகங்கள் சுத்தமாக
மிதமான வெந்நீரில் எலுமிச்சை பொடி சேர்த்து 10 நிமிடங்கள் விரல் நகங்களை ஊற வைக்கவும். பின் 15 நிமிடங்கள் சென்ற பின் நகங்களை தேய்த்து கழுவி வர அழுக்கு நீங்கி நகம் அழகு பெறும். மஞ்சள் நிறத்தில் உள்ள நகங்கள் வெள்ளை நிறத்தில் மாறும்.
முகப்பரு நீங்க
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை தோல் பொடி, 5 டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி உலர விடவும். பின் இதமான நீரில் கழுவி வர முகப்பரு நீங்கும்.
எலுமிச்சை தோலில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால் இதனை நேரடியாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்பர். இதனுடன் பால் கலந்து பயன்படுத்துவதால் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். பாதிப்பு ஏதும் வராமல் தடுக்கலாம்.
தேமல் குறைய
எலுமிச்சை பொடியை தண்ணீர் சேர்த்து குழைத்து தேமல் உள்ள பகுதியில் பூசி குளித்து வர தேமல் குறையும்.
இறந்த செல்கள் நீங்க
இறந்த செல்கள் நம் சருமத்தில் உள்ள துவாரங்களை அடைப்பதால் பருக்கள், முகத்தில் நிறம் மங்குதல், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க எலுமிச்சைப் பொடி பயன்படுத்தி முகத்திற்கு ஸ்க்ரப் செய்யலாம்.
எலுமிச்சை பொடி இரண்டு டீஸ்பூன், ஓட்ஸ் பொடி இரண்டு டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வாரம் ஒரு முறை முகத்தில் ஸ்க்ரப் செய்யவும். இது இறந்த செல்களை நீக்கி முகத்தை பொலிவுடன் வைக்க உதவுகிறது.