வழுக்கையை போக்க அட்டைகளின் உபயோகம்

Spread the love

உடல் நோய்களுக்கு ரத்த சுத்தி செய்வது, பழங்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்படும் ஓர் சிகிச்சை முறையாகும். வழுக்கையை போக்கி, முடிவளர்ச்சியை உண்டாக்குவது மருத்துவர்களுக்கு ஒரு சவால் தான். வழுக்கையுள்ள பிரதேசங்களில் இருக்கும் ரத்தத்தை உறிஞ்சினால், புது ரத்தம் பாய்ந்து, முடிக்கால்கள் வலுவாகி மீண்டும் முடி வளரும் வாய்ப்புகள் அதிகமாகும். கெட்ட ரத்தத்தை வெளியேற்றுவதற்கு ஆயுர்வேதம், ரத்தம் உறிஞ்சும் அட்டைகளை உபயோகிக்கிறது.

இந்த சிகிச்சையின் விவரங்கள்:-

அட்டைகள், மனித உடலில் முதலில் கெட்ட ரத்தத்தை உறிஞ்சி விட்டு பிறகு தான் நல்ல ரத்தத்தை குடிக்கும். கெட்ட ரத்தத்தை குடித்தவுடன், சுருக்கென்று வலியும், அரிப்பும் அட்டை கடிக்கும் இடத்தில் உண்டாகும். இந்த அறிகுறி தெரிந்தவுடன், அட்டையை எடுத்து விட வேண்டும். இதனால் நல்ல ரத்தத்தை அட்டை உறிஞ்சுவது தடுக்கப்படும்.

இரண்டு வகை அட்டைகள் – Hirudo – medicinalis மற்றும் Hirudo – mychaelseni – ரத்தத்தை உறிஞ்ச பயன்படுத்தப்படுகின்றன.

உபயோகிக்கும் முன் அட்டைகள், மஞ்சள் பொடி நீரில் சில நிமிடங்கள் வைக்கப்பட்டு, சுத்தமாக்கப்படுகின்றன.

அட்டைகளின் உமிழ் நீரில் ரத்த நாளத்தை விரிவாக்கும் வேதிப்பொருட்கள், வலியில்லாமல் இருக்க, மரக்கும் வேதிப்பொருள்கள் இருக்கின்றன. இதனால் ரத்தம் உறையாது.

அட்டை, உடலில் அரைமணியிலிருந்து ஆறு மணி நேரம்  வரை இருக்கவல்லது. 5 லிருந்து 15 மி.லி. ரத்தத்தை உறிஞ்சும்.

இந்த சிகிச்சைக்கு முன் ஸ்நேஹனா (எண்ணெய் மசாஜ்) மற்றும் ஸ்வேதனா (சூடு ஒத்தடத்தால் வியர்வையை உண்டாக்குதல்) செய்யப்படும்.

அட்டை விடப்படும் உடலின் இடங்கள் மஞ்சள் நீரால் சுத்தப்படுத்தப்படும். பிறகு தேன், ரத்தம் அல்லது வெண்ணெய், இவைகள் தடவப்படும்.

ரத்த உறிஞ்சல் முடிந்தவுடன் மஞ்சள் பொடி தூவி அட்டைகள் எடுக்கப்படும்.

உடலில் அட்டைகள் விட்ட இடங்களில் ஏற்படும் காயங்களுக்கு, மஞ்சள்பொடி மற்றும் இதர மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த முறை வழுக்கை மனிதர்களை தேர்ந்தெடுத்து ஆராயப்பட்டது. நல்ல பலன் கிடைப்பது தெரியவந்துள்ளது. வழுக்கை மாத்திரமல்ல, பல சரும நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. ஹீமோஃபிலியா போன்ற ரத்த குறைபாடு நோய்கள் உள்ளவர்களும், சோகை நோய் உடையவர்களும் இந்த சிகிச்சையை தவிர்க்க வேண்டும்.


Spread the love