மனம் கவரும் ஊதா நிறத்தில் உள்ள லாவண்டர் பூ தமிழில் சுகந்தி மலர் என்று அழைக்கப்படுகிறது. மிகுந்த மணமுடைய லாவண்டர் அனைத்து வகை வளமான மண்ணிலும் நன்கு வளரக் கூடியதாகும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் வாசனையுடன் காணப்படும். லாவண்டர் 3-4 வருடம் வாழக்கூடிய தாவரமாகும். இதனை விதையிலிருந்து நாற்றங்கால் அமைத்து வேர்விட்டு சிறு செடியாக வளர்ந்த பின் எடுத்து நடலாம்.
இது அமெரிக்கா, ஐரோப்பா, பிரான்ஸ், பிரிட்டன், பல்கேரியா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவில் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. லாவண்டர் சிரியாவில் NARD என்றும் கிரீக்கில் NARDUS என்றும் ரோமனில் ASARUM என்றும் அழைக்கப்படுகின்றது.
பிற்காலத்தில் பண்டைய கிரீஸ் மற்றும் ரோம் போன்ற பல பகுதிகளில் லாவண்டர் குளியல் செயற்கையாக உள்ளது. இது அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றதாகும். ஆன்டிபாக்டீரியல், anti-inflammatory மற்றும் anti-fungal விளைவை கொண்டிருப்பதால் இது பல நோய்களுக்கு மருந்தாகிறது. வெளிநாடுகளில் இதன் பூவினை பயன்படுத்தி டீ தயாரிக்கப்படுகிறது.
லாவண்டர் எண்ணெயை பெரியவர்கள், நோயுள்ளவர்கள் என வேறுபாடின்றி அனைவரும் உபயோகிக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த லாவண்டரின் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம்.
தாவர விவரம்
மூலிகையின் பெயர் | லாவண்டர் |
தாவரப்பெயர் | LAVENDULA OFFICINALIS |
தாவரக்குடும்பம் | LABIATAE |
பயன் தரும் பாகங்கள் | பூ மற்றும் இலைகள் |
லாவண்டர் எண்ணெய்
லாவண்டர் எண்ணெய் உடல்நலம் மற்றும் மனநல ஆரோக்கிய மேம்பாட்டிற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. இது மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இதனை வீட்டில் உள்ள சமையலறை, பாத்ரூம், செல்ப் மீது தெளிப்பதன் மூலம் சிறு பூச்சிகள் வருவதை தடுக்கலாம். வீடு கழிவறை, தீக்காயங்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய லாவண்டர் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இரண்டாம் உலகப்போரின் போது காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு புண் ஆற்ற லாவண்டர் எண்ணெயை பயன்படுத்தியுள்ளனர்.
லாவண்டர் எண்ணெய் உபயோகப்படுத்துவதால் தலைவலி, ஆஸ்துமா, குளிர் இருமல், தொண்டை வலி, ஜீரணக் கோளாறு, நரம்புக் கோளாறுகள் தோல் நோய், பூச்சிக்கடியால் ஏற்படும் அரிப்பு, பல்வலி, சுளுக்கு, வீக்கம், டென்ஷன், தொண்டையில் ஏற்படும் பிடிப்பு, மைக்ரேன் தலைவலி, மெனோபாஸ் அறிகுறிகள், ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல பலனைத் தருகிறது.
மருத்துவ குணங்கள்
கூந்தல் ஆரோக்கியம் மேம்பட
கூந்தல் உடைந்து உதிர்வதை தடுக்க லாவண்டர் எண்ணெய் 200 துளி அளவு, 100 மில்லி அளவு விளக்கெண்ணெய் சேர்த்து தலையில் தேய்ப்பதன் மூலம் கூந்தலின் உலர் தன்மையை நீக்கி முடி உடைந்து, உதிர்வதை தடுக்கலாம்.
கூந்தலில் ஏற்படும் பூச்சி வெட்டு அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழும் வழுக்கைக்கு லாவண்டர் எண்ணெய் மிகச்சிறந்த தீர்வாகும். நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் என நாம் பயன்படுத்தும் எந்த எண்ணெயாக இருப்பினும் அதனுடன் 3 துளி அளவு லாவண்டர் எண்ணெய் கலந்து தலையின் நுனி முடி வரை நன்கு தேய்க்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் முடி நன்கு நீண்டு வளர்வதை காணலாம்.
கரப்பான் நீங்க
நம் தலையில் வட்ட வடிவில் கரப்பான் வந்த இடத்தில் முடி உதிர்ந்து சொட்டை ஆக காணப்படும். இதனைக் குணப்படுத்த லாவண்டர் எண்ணெய் நன்கு தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் கரப்பான் நீங்கி புதிதாக முடி வளரும்.
தூக்கமின்மை
இரவு நேரங்களில் சரிவர தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ஒரு பக்கெட் தண்ணீரில் லாவண்டர் எண்ணெய் சில துளிகள் விடவும். பின் இந்நீரை கொண்டு , காதிற்கு பின்னால் தடவலாம், தலையில் தடவலாம் அல்லது குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
ஜெர்மனியில் லாவண்டர் தேனீர் தூக்கக் கோளாறு, அமைதியின்மை மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க துணைப் பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் நீங்க
நம்முடைய மனம் மற்றும் உடலை ஒருமைப்படுத்துவதில் லாவண்டர் எண்ணெய் பெரிதும் செயலாற்றுகிறது. இது பயத்தினால் ஏற்படும் மன அழுத்தம், அறுவை சிகிச்சையினால் உண்டாகும் புண்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் ஏற்படும் பயம் போன்றவற்றில் இருந்து வெளிவர பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
லாவண்டர் எண்ணெய் 10 துளி அளவு எடுத்து கழுத்திற்கு பின்புறம் நன்கு தடவவும். இது இரத்த ஓட்டத்தில் நன்கு கலந்து நமது உடல், மனம் மற்றும் மூளையில் உள்ள நரம்புகளை அமைதிப்படுத்துகிறது.
சரும அழகு மேம்பட
லாவண்டர் எண்ணெயை பருக்கள் மீது தடவி வர அவை இருந்த இடம் தெரியாமல் மறையும். சிவப்பு திட்டுக்களும் குறையும்.
தாமரை பூவை அரைத்து அதனுடன் லாவண்டர் எண்ணெய் சேர்த்து இரண்டு முதல் மூன்று நாட்கள் தடவி வர கண்களுக்கு அருகில் உள்ள கருவளையம் குறைவதை காணலாம்.
சருமத்தில் ஏற்பட்ட தீக்காயத்திற்கு லாவண்டர் எண்ணெய் மிகச்சிறந்த தீர்வாகும். இதனை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி வர விரைவில் குணமாகும்.
லாவண்டர் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி, வெயிலின் தாக்கம் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் அனைத்திற்கும் நல்ல தீர்வாகும். இதனை நாம் பயன்படுத்தும் பாடி லோசன், பாடி பட்டர், ஷாம்பு, பாடி வாஷ் போன்ற அழகு சாதனப் பொருட்களில் இரண்டு சொட்டு லாவண்டர் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம்.
இது அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியம் தயாரிப்பதில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கிலாந்தில் குளிக்கும் நீரில் இதன் எண்ணெயை கலந்து வாசனைக்காக பயன்படுத்தியுள்ளனர். மசாஜ் நிலையங்களிலும் சருமங்களில் லாவண்டர் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது.
மாதவிலக்கு பிரச்சனை நீங்க
லாவண்டர் எண்ணெயில் உள்ள anti analgesic தன்மை மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் Menstrual cramp எனப்படும் அடி வயிற்று வலி, இடுப்பு வலி, கை, கால் குடைச்சல் போன்றவற்றை குறைக்க பெரிதும் உதவுகிறது.
இக்காலங்களில் ஒரு ஸ்பூன் அளவு கடுகு எண்ணெய், விளக்கு எண்ணெய் மற்றும் 10 முதல் 20 துளி அளவு லாவண்டர் எண்ணெய் கலந்து வலி உள்ள இடங்களில் தடவி வர நல்ல பலனைக் காணலாம்.
வாய்ப்புண் நீங்க
தொண்டைப் பகுதியில் புண் உள்ளவர்கள் சுடுநீரில் 10 துளி அளவு லாவண்டர் எண்ணெய், கிளிசரின் மற்றும் தேன் கலந்து வாயில் ஊற்றி தொண்டையில் உள்ள புண் பகுதியில் படுமாறு நன்கு கொப்பளிக்கவும். இவ்வாறு செய்வதால் வாய்ப்புண் நீங்கும்.
லாவண்டர் எண்ணெய் தயாரிக்கும் முறை
லாவண்டர் எண்ணெயானது குளிர்ச்சி மற்றும் சூடான இரு நிலையில் தயாரிக்கப்படுகிறது.
குளிர்ச்சியான முறையில் லாவண்டர் எண்ணெய்
லாவண்டர் பூக்கள் மற்றும் கிளைகளை நன்கு உலர விடவும். பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதாம் எண்ணெய் ஊற்றி அதனுள் உலர வைத்த லாவண்டர் பூ மற்றும் கிளைகளை சேர்க்கவும். இதனை 40 நாட்கள் வரை அப்படியே வைத்து தினமும் நன்கு கிளறவும். 40 நாட்களுக்குப் பின் எஞ்சியவற்றை ஒளிப்புகா கண்ணாடி பாட்டிலில் சேகரிக்கவும். இவ்வாறு செய்வதால் சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது.
சூடான முறையில் லாவண்டர் எண்ணெய்
இதற்கு பாதாம் எண்ணெய் மற்றும் உலர்ந்த லாவண்டர் பூக்களை எடுத்துக்கொள்ளவும். பாதாம் எண்ணெயை சூடாக்கி அதனுள் பூக்களை சேர்க்கவும். பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நன்கு கிளறவும். சூடு தனிந்ததும் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றவும். இதன் மேல் நேரடியாக சூரிய ஒளி படாமல் பாதுகாக்கவும்.
ஆயுர்வேதம்.காம்