கல்லீரல் ஒரு அற்புதமான அவயம். உடலிலேயே பெரிய உறுப்பு கல்லீரல் தான். 1.5 கிலோவிலிருந்து 2.3 கிலோ எடையுள்ளது. நமது உடலில் பல முக்கிய இராசாயன மாற்றங்களை செய்யும் தொழிற்சாலை அதுவாகும். கல்லீரல் நூற்றுக்கணக்கான பணிகளை செய்கிறது. அவற்றில் சில செயல்பாடுகள் மட்டுமே ஜீரணத்திற்காக செய்யப்படுபவை. அவை
• கொழுப்புகளை சுரக்கும் பித்த நீரை சுரக்கிறது.
• சர்க்கரையை கிளைகோஜன் ஆக மாற்றி சேமிக்கிறது.
• அல்புமின், (வெள்ளை புரதம்), குளோபுலின் எனப்படும் இரத்தப்புரதம் மற்றும் ஃபப்ரினோஜன் என்ற கரையும் புரதம், இவற்றை உற்பத்தி செய்கிறது.
• இரும்புச்சத்தையும், வைட்டமின்களை சேமித்து வைக்கிறது.
• நாம் உட்கொள்ளும் பல விதமான இரசாயன மருந்துகளையும், நச்சுப் பொருட்களையும், வீரியம் குறையச்செய்து வெளியேற்றுகின்றன.
உணவின் சத்துப் பொருட்கள் குடலால் கிரகிப்படுகின்றன. குடலின் சுவர்களில் தந்துகிகள் (மெல்லிய ரத்த நாளங்கள்) உள்ளன. இவை சிறிய சிரைகளில் வழியே பாய்ந்து பெரிய சிரைகளை சேருகின்றன. பெரிய சிரைகள் சேர்ந்து ‘போர்டல்’ சிரையாக கல்லீரலில் ரத்தத்தை செலுத்துகின்றன. கல்லீரல் முதலில், குடலிலிருந்து வரும் ரத்தத்திலிருந்து, பேக்டீரியா போன்றவற்றை நீக்குகிறது. குடல் கிரகித்து ரத்தத்துடன் அனுப்பியிருக்கும் சத்துப் பொருட்களை மேலும் “சிதைத்து”, உடல் உபயோகிக்க தக்கவையாக மாற்றும். இந்த செயலை கல்லீரல் வேகமாக செய்து சத்துக்கள் செறிந்த ரத்தத்தை உடல் முழுவதும் பரவ, அனுப்பி வைக்கிறது. இதற்கு வசதியாக, கல்லீரல் வழியே, நிமிடத்திற்கு 1.5 லிட்டர் ரத்தம் கடந்து செல்கிறது.
உடலுக்கு தேவையான கொலஸ்ட்ராலில் பாதியை கல்லீரல் தயாரிக்கிறது. மீதி உணவிலிருந்து வருகிறது. கல்லீரல் தயாரிக்கும் கொலஸ்ட்ராலில், 80%, பித்த நீர் தயாரிப்பில் பயனாகிறது. கல்லீரல் சுரக்கும் பித்த நீரை, தேவைப்படும் வரை பித்தப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது.